
தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் கிணற்றில் புலம் பெயர் தொழிலாளி குடும்பத்தினர் 9 பேரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாரங்கல் கிணற்றில் புலன்பெயர்ந்த கூலிகளின் உடல்கள் மிதந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .. கொர்ரெகுண்ட கிராமக் கிணற்றிலிருந்து நான்கு இறந்த உடல்களை வெளியில் எடுத்தார்கள். வாரங்கல் மாவட்டத்தில் உள்ள கோசுகொண்ட மண்டலம் கொர்ரெகுண்ட கிராமத்தில் சோகம் மூண்டது.
வெள்ளிக்கிழமை இன்று காலை கிணற்றில் இருந்து மீண்டும் ஒரு உடல் வெளியே எடுக்கப்பட்டது. நேற்று கிணற்றில் இருந்து 4 உடல்கள் எடுக்கப் பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாழ்வாதாரத்துக்காக வாரங்கல் வந்த புலம்பெயர்ந்த கூலித் தொழிலாளிகளின் உடல்கள் கிணற்றில் பிணமாக மிதந்தது வியாழக்கிழமை அன்று பரபரப்பை ஏற்படுத்தியது. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மக்சூத் (50), அவர் மனைவி நிஷா (45), 22 வயது பெண், அவளுடைய மூன்று வயது மகன் ஆகியோரின் இறந்த உடல்கள் கிணற்றில் மிதந்தது உள்ளூர் மக்களின் இதயங்களை கலங்கச் செய்தது.
வாரங்கல் மாவட்ட கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் இறந்த உடல்களை கண்டு இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது பற்றி ஆராய்ந்து வருகிறார்கள்.
கோசுகொண்ட இன்ஸ்பெக்டர் ஜூபல்லி சிவராமய்யா இதுகுறித்து கூறியதாவது… வரங்கல் அர்பன் மாவட்டத்தில் உள்ள கரீமாபாத் என்ற இடத்திற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு மக்சூத் குடும்பம் புலம் பெயர்ந்து வந்தது. மக்சூதுக்கு மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள், அவள் தன் மகன் ஆகியோர் குடும்பமாக வசித்து வந்தனர்.
மக்சூதின் மகளுக்கு டெல்லியைச் சேர்ந்த ஒருவரோடு ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனாலும் அவர் விவாகரத்து கொடுத்து விட்டதால் பெற்றோருடன் வசித்து வருகிறாள்.
இவர்கள் அனைவரும் வரங்கல் மாவட்டத்தில் உள்ள கொர்ரெகுண்டா பிரகதி இன்டஸ்ட்ரியல் ஏரியாவில் இருக்கும் சாயிதத்தா பாரதான் டிரேடர்சில் பழைய சாக்குகளை தைக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அனைவருமே கிணற்றில் பிணமாக மிதப்பது கண்டு மக்கள் அனைவரும் கலக்கத்தில் ஆழ்ந்தார்கள்.
இது குறித்து ஊடகங்களில் இன்று காலை பரபரப்பாக வெளியான தகவல்களில்…
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் நகரில் உள்ள கோரே குந்தா கிராமத்தில், சந்தோஷ் என்பவர் கோணிப்பை தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் மேற்கு வங்கம் மற்றும் பீகாரைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் பலர் பணிபுரிந்து வந்தனர். இந்த கோணிப்பை தொழிற்சாலையில் தான் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மசூத் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கரிமாபாத்தில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

ஊரடங்கு காரணமாக இந்த தொழிற்சாலை மூடப்பட்டதை அடுத்து பொருளாதார நெருக்கடி காரணமாக, மசூத் மற்றும் அவரது குடும்பத்தினரும் சந்தோஷ் என்பவருக்கு சொந்தமான குடோனில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மசூத் மற்றும் குடும்பத்தினரை காணவில்லை என்று குடோன் உரிமையாளர் சந்தோஷ் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அச்சமயம் தொழிற்சாலை அருகே உள்ள கிணறு ஒன்றில், நேற்று சிலரின் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன.
இதனையடுத்து, கிணற்றில் இருந்து 2 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் சடலம் மீட்கப்பட்டது. மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த மசூத், அவருடைய மனைவி நிஷா, கணவனை விட்டு பிரிந்து வாழும் மகள் புஸ்ரா, புஸ்ராவின் மூன்று வயது மகன் ஆகியோரின் உடல்களை போலிசார் கைப்பற்றினர். இந்நிலையில், இன்று மேலும் 5 சடலங்கள் அதே கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. மசுத் மகன் சபாக், பீகாரைச் சேர்ந்த தொழிலாளிகள் ஸ்ரீராம் மற்றும் ஷாம், திரிபுராவைச் சேர்ந்த ஷகீல் அகமது ஆகியோரின் உடல்களை அதே கிணற்றிலிருந்து போலீசார் கைப்பற்றினர்.
கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. ஒரே கிணற்றில் இருந்து இரண்டு நாட்களில் அடுத்தடுத்து 9 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் இறந்துபோன 9 பேரும் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டார்களா?, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.