
இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழகத்தில் உள்ள தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமாக அவர் செயற்பட்டு வந்தார். தற்போதைய அரசாங்கத்தின் மிகப் பொறுப்பு வாய்ந்த அமைச்சராக ஆறுமுகன் தொண்டமான் செயல் பட்டு வந்தார். இவர் செவ்வாய்க்கிழமை நேற்று தமது 55 ஆவது வயதில் காலமானார்.
அவரது மறைவுக்கு தமிழகத்தில் இருந்து இரங்கல் செய்திகள் வெளியாயின. நல்ல நண்பர் என்று அரசியல் மட்டத்தில் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்திருந்தனர்.
ஆறுமுகம் தொண்டமான் மறைவுக்கு பாமக., நிறுவுனர் மருத்துவர் ச. இராமதாசு இரங்கல் தெரிவித்தார். அவரது இரங்கல் செய்தியில்…
இலங்கை காங்கிரஸ் தலைவரும், இலங்கை கால்நடை மற்றும் ஊரக சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் மாரடைப்பால் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரசவழி வந்த குடும்பத்தைச் சேர்ந்தவரும், இலங்கையில் மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த சவுமியமூர்த்தி தொண்டமானின் பெயரருமான ஆறுமுகம் தொண்டமான் மலையகத் தமிழர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர். மலையகத் தமிழர்களின் நலனுக்கான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற இந்திய அரசை வலியுறுத்தி குரல் கொடுக்கும்படி பலமுறை பாட்டாளி மக்கள் கட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
55 வயதான ஆறுமுகம் தொண்டைமான் இலங்கை அரசியலில் பல புதிய உச்சங்களைத் தொடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இளம் வயதிலேயே அவர் மறைந்தது மலையகத் தமிழர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தொண்டர்களுக்கு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்… என்று குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையின் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி துறை மந்திரியும், தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார். ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், ”ஆறுமுகன் தொண்டமான் மறைவு தாங்க முடியாத துயரத்தையும் அதிர்ச்சியையும் தந்ததாகவும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும்” ஸ்டாலின் கூறி உள்ளார்.
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”இலங்கை அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஆறுமுகன் தொண்டைமான் அவர்கள் அகால மரணம் அடைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன். இளம் வயதிலேயே அமைச்சராகி, இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்காகப் பணியாற்றியவர். தமிழகத்தில் ஏராளமான உறவினர்களையும், நண்பர்களையும் கொண்டவர். பழகுவதற்கு இனிமையான பண்பான சகோதரர். இளம் வயதிலேயே அவர் இயற்கை எய்தியிருப்பது மேலும் மன வருத்தம் தருகிறது. அன்னாரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.