
புது தில்லி:
மாநிலங்களவைத் தேர்தலில் ‘நோட்டா’ என்பதை, காங்கிரஸ் ஆட்சியின் போதே கொண்டுவந்தாயிற்று என்று மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
குஜராத் மாநிலத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு 3 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஆக. 8ஆம் தேதி நடக்கிறது. இதில், பாஜக.,வுக்கு 2 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான உறுப்பினர் பலம் உள்ளது. ஆனால், தனது பலத்தை மீறி 3ஆவது இடத்துக்கும் வேட்பாளரை நிறுத்தியுள்ளது பாஜக.,
இதனிடையே, வாக்குச்சீட்டில் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதைத் தெரிவிக்கும் ‘நோட்டா’ இடம் பெறும் என்று தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. இந்த அறிவிப்பு, தங்கள் கட்சிக்கு எதிராக அமையும் என்று காங்கிரஸ் கூறி வருகிறது. எனவே, ‘நோட்டா’ இடம்பெறக் கூடாது என்று தேர்தல் கமிஷனிடம் காங்கிரஸ் மனு அளித்துள்ளது. ‘நோட்டா’ பகுதியை வாக்குச் சீட்டில் இருந்து நீக்க உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி மனு தாக்கல் செய்தது. இந்நிலையில், ஆளும் பாஜக.,வும் ‘நோட்டா’வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்தது. இதனிடையே காங்கிரஸ் தாக்கல் செய்த மனு தொடர்பாக விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், குஜராத் மாநிலங்களவை தேர்தலில் நோட்டா இடம் பெற இடைக்கால தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து, காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவையும் ஏற்க மறுத்துவிட்டது. மேலும், கடந்த 2015ஆம் ஆண்டே, இந்தத் தேர்தலில் நோட்டா அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இவ்வளவு நாட்கள் கழித்து இப்போது எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியது உச்ச நீதிமன்றம். பின் தேர்தல் ஆணையம் பதிலளிக்கக் கோரி, இதுதொடர்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் பேசியபோது, “மாநிலங்களவைத் தேர்தலில் ‘நோட்டா’ காங்கிரஸ் ஆட்சியின் போதே கொண்டுவரப்பட்டது. நோட்டா வாக்களிப்பு முறையில் தேர்வு செய்யப்பட்ட அதிகமான காங்கிரஸ் எம்.பி.க்கள்தான் இப்போது அவையில் உள்ளனர். அவர்கள் மூன்று ஆண்டுகளாக அமைதியாக இருந்துவிட்டு, இப்போது கேள்வி எழுப்புகிறார்கள். மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டா இடம் பெறுவது தொடர்பான 2014ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியான அறிவிப்பைக் கூட அவர்கள் பார்க்கவில்லை. மத்தியில் 2014 மே மாதம்தான் மோடி அரசு ஆட்சிக்கு வந்தது. காங்கிரஸ் தலைமையிலான அரசின் விதிமுறையே இப்போதும் செயல்படுத்தப் படுகிறது” எனக் கூறினார்.


