
கேரளாவில் வெளிநாட்டு தூதரகத்தின் மூலமாக குரான் விநியோகம் என்ற பெயரில் தங்கக் கடத்தல் நடந்துள்ளது என்று கூறப்படும் நிலையில், வேறு பொருட்கள் எதுவும் அவ்வாறு கடத்தப் பட்டதா என்பது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்
கேரளத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம் அமைந்துள்ளது. இதன் பெயரை பயன்படுத்தி யு.ஏ.இ.,யில் இருந்து தங்கம் கடத்தி வரப்பட்டது அண்மையில் கண்டுபிடிக்கப் பட்டது.
இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை -என்.ஐஏ., அதிகாரிகள் மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் யு.ஏ.இ.,யில் இருந்து முஸ்லிம்களின் மத நூலான குர்ஆன் அதிக அளவில் வந்ததும், அது கேரளத்தில் பல இடங்களில் விநியோகிக்கப் படுவதாகச் சொல்லி பல்வேறு இடங்களுக்கு அனுப்பப் பட்டதும், அதன் பேரில் தங்கக் கடத்தல் நடந்துள்ளது குறித்தும், இந்தப் போர்வையில் வேறு பொருட்கள் கடத்தப்பட்டதா என்பது குறித்தும் சுங்கத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து சுங்கத் துறை மூத்த அதிகாரிகள் கூறியபோது… மார்ச் 4ஆம் தேதி, யு.ஏ.இ.,யில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் மூலமாக 4,479 கிலோ எடையுள்ள பார்சல், தூதரகத்துக்கு வந்துள்ளது.
அதில் கேரளாவில் இலவசமாக வினியோகிக்க 6,000 குரான் புத்தகங்கள் கொண்டு வரப்பட்டதாக, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.டி. ஜலால் கூறியுள்ளார். மேலும், அந்த பார்சலை எடுத்துச் செல்வதற்கு கேரள அரசின் வாகனம் பயன்படுத்தப்பட்டது. இதற்கு, மாநில அரசால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி தடையில்லா சான்றிதழ் அளித்துள்ளார்.
ஆனால் மதம் தொடர்பான பொருட்கள் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 6,000 குரான் புத்தகங்கள் அதில் இருந்திருந்தால் அதன் எடை இன்னும் அதிகமாக இருந்திருக்க வேண்டும். இது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குரான் பெயரில் வேறு ஏதாவது பொருட்கள் கடத்தி வரப்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்று கூறியுள்ளனர்.
இதனிடையே, இப்போது இந்த விசாரணைக் குழுவினர் யுஏஇ சென்று அடைந்திருப்பதாகவும், அங்கும் விசாரணை தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



