
தென்காசி மாவட்டம் குற்றாலம் வனப்பகுதியில் யானை தாக்கி உயிரிழந்த வேட்டை தடுப்பு காவலர் முத்துராஜ் உடலை வனத்துறையினர் மீட்டனர். பின்னர் முத்துராஜ் உடல், தென்காசி மாவட்ட மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது.
குற்றாலம் வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக யானை ஒன்று உலா வந்து கொண்டிருந்தது. அந்த யானையை வனத்துறை அதிகாரிகளும் வேட்டை தடுப்பு காவலர்களும் நேற்று வனப்பகுதியில் விரட்டும் பணியை மேற்கொண்டனர்.
அப்போது வேட்டை தடுப்பு காவலர் முத்துராஜ் என்பவரை அந்த யானை தாக்கியது. யானை மிதித்ததில், முத்துராஜ் உயிரிழந்தார். தொடர்ந்து யானை அவரது உடல் அருகில் நின்றதால் வனத்துறையினர் அங்கு முகாமிட்டு தீ மூட்டி உடலை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பின்னர் யானை விரட்டப்பட்டு, இன்று காலை முத்துராஜ் உடல் மீட்கப் பட்டு, மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப் பட்டது.



