
தில்லியை பூர்வீகமாக கொண்டவர்கள் சூரஜ் மல்ஹோத்ரா, ராகுல். இவர்கள் இரண்டு பேரும் நண்பர்கள். எந்த வேலைக்கும் போவது கிடையாது. அழகான பெண்கள் யாராவது கண்ணில் படுகிறார்களா என்று ஊரை சுற்றி வருவதுதான் இவர்கள் வேலை.
குறிப்பாக வட மாநிலத்தை சேர்ந்த பெண்களுக்கு இவர்கள் வலை விரித்துள்ளனர். இளம்பெண்களை கண்டால், அழகாக இருப்பதாக சொல்லி அவர்களிடம் பேச்சை தருவார்களாம்.
பிறகு சினிமாவில் நடித்தால் பெரிய ஹீரோயினாக வரலாம் என்று ஆசைவார்த்தை காட்டுவார்களாம். இதை நம்பிய அந்த பெண்களும், நடிக்க வாய்ப்பு தரும்படி கேட்டு அந்த இளைஞர்கள் பின்னாடியே செல்வார்களாம். இறுதியில், அவர்களை ஏமாற்றி, விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பணமும் சம்பாதித்து வந்தார்கள்.
இதுபோல அவர்கள், அடிக்கடி மும்பை, தில்லியை சேர்ந்த ஏழை மாடலிங் செய்யும் பல பெண்களை நாசம் செய்துள்ளனர். வடஇந்திய பெண்களை எல்லாம், வாய்ப்பு தருவதாக தென் இந்தியா பக்கம்தான் அழைத்து வந்து விபச்சாரத்தில் தள்ளி உள்ளனர். ஆந்திரா ,சென்னை ,பெங்களூரு போன்ற பகுதிகளில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலுக்குள் அழைத்து சென்றிருக்கிறார்கள். புதுஇடம், மொழி பிரச்சனை போன்றவற்றில் சிக்கி கொண்ட அந்த இளம்பெண்களும் தங்கள் வாழ்க்கையை தொலைத்து வந்துள்ளனர்.
இப்படித்தான், 2 பெண்களை கடந்த வாரம் சென்னை அழைத்து வந்துள்ளனர். சினிமா பிரபலங்களிடம் சான்ஸ் வாங்கி தருவதாக சொல்லி, தேனாம்பேட்டையில் உள்ள ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டுள்ளனர். அந்த பெண்கள் ஏற்கனவே மாடலிங் செய்து கொண்டிருந்த பெண்கள் என்பதால், ஸ்டார் ஓட்டலில் தங்க வைத்தது எந்தவித சந்தேகத்தையும் தரவில்லை.
பிறகுதான் அவர்கள், பல சினிமா முக்கிய பிரமுகர்களை அந்த ஓட்டலுக்கு அழைத்து வந்துள்ளனர். அந்த பெண்களையும் இவர்களிடம் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார்கள். இது பற்றி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது.
அதன் பேரில் போலீசார் அந்த ஹோட்டலில் கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தினார்கள். தங்கியிருந்த 2 மாடல் பெண்களையும் மீட்டார்கள். அதற்கு பிறகுதான் தெரிந்தது, அதே ரூமில் ஏற்கனவே சில மாடலிங் செய்யும் பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. வடமாநிலத்தில் இருந்து இங்கு வந்து விபச்சாரம் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள் என்றால், அதற்கு இங்கு யாரோ இந்த 2 இளைஞர்களுக்கும் உதவுகிறார்கள் என்று போலீசார் சந்தேகப்பட்டனர்.
தீவிரமான விசாரணை நடத்தப்பட்டதில், திருமுல்லைவாயலில் வசிக்கும் செந்தில், கொட்டிவாக்கத்தில் வசிக்கும் சரவணன் என்ற 2 புரோக்கர்கள் சிக்கினார்கள். இவர்களை பிடிப்பதற்குள், அந்த தில்லியைச் சேர்ந்த சூரஜ், மல்ஹோத்ரா 2 பேரும் தப்பியோடி விட்டனர். அதனால் அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. அதேசமயம், அந்த ஸ்டார் ஹோட்டலுக்கு சென்ற சினிமாபுள்ளிகள் யார்? விஐபிக்கள் யார் என்ற லிஸ்ட்டும் எடுக்கப்பட்டு வருகிறது!