தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம், சிங்கரேணி கிராமத்தைச் சேர்ந்தவர் அஸ்மீரா நாஜி (75). வயது மூப்பு காரணமாகப் பிள்ளைகள் வீட்டிலிருந்து வெளியேற்றியதால், மூதாட்டி அஸ்மீரா, கடந்த சில மாதங்களாக வீடில்லாமல் பொதுவெளிகளில் தங்கிவந்ததாகக் கூறப்படுகிறது.
சிங்கரேணி கிராமத்திலிருந்து கரேபள்ளி கிராமத்துக்கு மூதாட்டி கடந்த வாரம் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்திருக்கிறார். யாசகம் பெற்றும், வீடு வீடாக உணவு கேட்டுச் சாப்பிட்டும் தங்கியிருந்த மூதாட்டி அஸ்மீராவை, அதே பகுதியைச் சேர்ந்த உபேந்தர் (53) என்ற நபர் கவனித்து வந்திருக்கிறார். அடிக்கடி மூதாட்டிக்கு உணவளிப்பதுபோல் உபேந்தர் உதவியிருக்கிறார்.
இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மூதாட்டி அஸ்மீராவுக்கு உணவளிப்பதாகக் கூறி, உபேந்தர் அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
வீட்டுக்குள் வந்ததும் உபேந்தர் மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். சற்றும் எதிர்பாராத மூதாட்டி அஸ்மீரா கத்திக் கூச்சலிட்டு உதவிக்கு அக்கம் பக்கத்தினரை அழைத்திருக்கிறார்.
அதனால் ஆத்திரமடைந்த உபேந்தர் மூதாட்டியின் தலையில் பலமாகத் தாக்கினார். அதில் ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து சரிந்த அஸ்மீரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மூதாட்டி உயிரிழந்ததை அடுத்து, அவரது உடலை யாருக்கும் தெரியாமல் அப்புறப்படுத்த நினைத்த உபேந்தர், அவரது தலை மற்றும் கால்களை வெட்டி அருகிலுள்ள வனப்பகுதிக்கு எடுத்துச் சென்று எரித்துவிட்டார்.
தொடர்ந்து உடல் பாகங்களைத் துண்டு துண்டாக வெட்டி சாக்குப்பையில் போட்டு அதைத் தனது நண்பர் ஒருவரிடம் காட்டுப்பன்றியின் சடலம் என்று கூறி டோர்னக்கல் மற்றும் கார்லா ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் தண்டவாளங்களில் வீசச் சொல்லி அனுப்பிவைத்தார்.
உபேந்தரின் நண்பரும் சாக்குப் பையில் சடலத்தைக் கொண்டு வந்து கார்லா ரயில் நிலையத்துக்கு அருகில் வீசி விட்டுச் செல்ல முயன்றிருக்கிறார்.
அவர் மூட்டையிலிருந்து எதையோ வீசுவதைக் கண்ட ரயில்வே பணியாளர்கள் அவரைப் பிடித்து விசாரித்திருக்கின்றனர். உபேந்தரின் நண்பர் கொண்டு வந்த மூட்டைகளைத் திறந்து பார்த்ததில் பன்றியின் சடலத்துக்கு பதிலாக மனித உடல் பாகங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரயில்வே ஊழியர்கள், உடனடியாக கம்மம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் உபேந்தரின் நண்பரைப் பிடித்து விசாரித்ததன் மூலம் மூதாட்டியின் கொலை வெளிச்சத்துக்கு வந்தது.
சடலத்தைக் கொண்டுவந்த நபரைக் கைதுசெய்த போலீஸார் உபேந்தரைக் கைதுசெய்ய அவரைத் தேடி அவர் வீட்டுக்கு விரைந்தனர். ஆனால், அதற்குள்ளாக போலீஸார் வருவதைத் தெரிந்துகொண்ட உபேந்தர் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார்.
போலீஸார் கொலை நடந்த வீட்டுக்கு சீல் வைத்துவிட்டுத் தலைமறைவாகியுள்ள குற்றவாளி உபேந்தரை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட மூதாட்டி அஸ்மீராவின் மூன்ரு மகன்கள் மற்றும் ஒரு மகள் ஆகியோர் கம்மம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து குற்றவாளி உபந்தர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
75 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கம்மம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது