கொரோனாவால் லேசான பாதிப்புக்கு ஆளானவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்வதற்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டவர்களுக்கு ஏழு நாட்களுக்கு மேல் காய்ச்சல், கடுமையான இருமல் தொடர்ந்தால் மருத்துவரின் ஆலோசனைபடி குறைந்த டோஸ் கொண்ட ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் அளவு குறைந்தாலோ, மூச்சுத்திணறலால் அவதியடைந்தாலோ உடனடியாக மருத்துவமனையில் சேர வேண்டும்.
உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இருதய நோய், நுரையீரல், சிறுநீரக நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கும் மேற்பட்டோர், மருத்துவர் ஆலோசனை பெற்றுதான் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.
ரெம்டெசிவிர் மருந்தை வீட்டில் தனிமையில் இருப்பவர்கள் பயன்படுத்த கூடாது. மருத்துவரின் பரிந்துரையின்படி மருத்துவமனையில்தான் எடுத்து கொள்ள வேண்டும்
வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டவர்கள் சூடான நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும் அல்லது ஒரு நாளைக்கு இரண்டு முறை ஆவி பிடிக்க வேண்டும். கொரோனா நோயாளியை வீட்டில் கவனிப்பவர்கள் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை எடுத்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நெறிமுறைகளை மத்திய அரசு கூறியுள்ளது.
நல்ல காற்றோட்டமுள்ள அறையில் கொரோனா நோயாளிகள் தனிமைப்படுத்தி கொள்ளலாம் என்றும், அதே சமயம், மூன்று அடுக்குள்ள முக கவசத்தை அணிந்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் திரவ உணவுகளை எடுத்து கொண்டு ஓய்வு எடுக்க வேண்டும்.
கொரோனா அறிகுறிகளை தென்பட்ட பிறகு குறைந்தது 10 நாட்கள் கழித்தும், காய்ச்சல் போன பிறகு மூன்றுநாட்கள் கழித்தும்தான் தனிமையிலிருந்து வெளியே வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்துதலுக்கு பிறகு கொரோனா பரிசோதனை அவசியமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.