சத்தீஸ்கரில் தனது குடும்பத்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி விடுதியை 7 நாட்களில் 200 படுக்கைகள் கொண்ட கோவிட் மருத்துவமனையாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் மாற்றியுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.
மேலும் பல நோயாளிகள் இடம் கிடைக்காமல் மருத்துவமனைகளின் வளாகங்கள், கார்களில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் சத்தீஸ்கரின் ராய்பூரில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பிரிஜ்மோகன் அகர்வால் ஒரு பொறியியல் கல்லூரி விடுதியை 7 நாட்களில் 200 படுக்கைகள் கொண்ட கோவிட் மருத்துவமனையாக மாற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.
இது தொடர்பாக பா.ஜ. எம்.எல்.ஏ. பிரிஜ்மோகன் அகர்வால் கூறியதாவது: மாநிலத்தில் வீழ்ச்சி அடைந்துள்ள சுகாதார அமைப்புக்கு மத்தியில் பாதிப்பு அதிகரித்து வருவதையும், மக்கள் நம்மை சுற்றி இறப்பதையும் நான் பார்த்தேன். என மூத்த சகோதரர் அபிஷேக் கிருதி இன்ஸ்ட்டியுட் ஆப் டெக்னாலஜிஸ் அண்டு என்ஜினீயரிங் கல்லூரியை நடத்தி வருகிறார்.
தற்போது வரை கடந்த ஓராண்டு அந்த கல்லூரியின் விடுதி காலியாக உள்ளது. அந்த விடுதியை கோவிட் பராமரிப்பு மையமாக மாற்றலாம் என எனக்கு யோசனை ஏற்பட்டது. நாங்கள் உடனடியாக விடுதி பகுதியை முழுமையாக சுத்தம் செய்து சென்டருக்கான இடத்தை தயார் செய்தோம்.
இங்குள்ள பா.ஜ.க. மருத்துவ குழுவின் உறுப்பினர்களை நான் நாடினேன். கடந்த ஆண்டு அக்ராசனெ தமில் கோவிட் கேர் மையத்தை நிறுவிய அகர்வால் சமாஜ் உறுப்பினர்களை தொடர்பு கொண்டேன். ஆக்சிஜன் பைப்லைன் நிறுவினால் நோயாளிகளுக்கு சிறந்த சேவை வழங்கலாம் என டாக்டர்கள் குழு எங்களிடம் தெரிவித்தார்கள்.
3 நாட்களில் அந்த வசதிகளை செய்து கொடுத்தோம். கடந்த ஏப்ரல் முதல் இந்த கோவிட் கேர் சென்டர் பயன்பாட்டுக்கு வந்தது. நோயாளிகளுக்கு உணவு, மருந்து மற்றும் ஆக்சிஜன் இலவசமாக வழங்கப்படுகிறது.
இதுவரை 40 நோயாளிகள் குணமடைந்து சென்றுள்ளனர். மொத்தம் 50 பணியாளர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.