
அதிகப்படியாக நீராவி சிகிச்சை எடுத்துக் கொள்வது கருப்பு பூஞ்சை நோய் ஏற்படுவதற்கு ஒரு காரணமாக அமைந்துவிடும் என்று எச்சரிக்கிறார் பெங்களூரை சேர்ந்த பிரபல காது மூக்கு தொண்டை மருத்துவ நிபுணரை தீபக் ஹல்திப்பூர்.
கொரோனா இரண்டாவது அலையால் நாடு மிகப்பெரிய பாதிப்பில் சிக்கிக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் கொரோனா நோயாளிகள் மத்தியில் கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை மஞ்சள் பூஞ்சை என கலர்கலராக நோய்கள் பரவி வருவது தெரியவந்தது.
அதிலும் கருப்பு பூஞ்சை நோய் நாடு முழுக்க ஆயிரக்கணக்கான மக்களிடம் பரவியுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவிலும், இதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
முகத்தில் வீக்கம், கண் பகுதியில் வீக்கம் போன்றவை இந்த நோய்க்கான அறிகுறிகளாகும். கண்கள் சிவப்பாக மாறுவது போன்றவை தீவிர அறிகுறிகள். இப்படி ஏதாவது தென்பட்டால், உடனடியாக, காது மூக்கு தொண்டை நிபுணரை பார்த்து இந்த நோயை சரி செய்யாவிட்டால் கிருமி மூளைக்கு சென்று சேர்ந்து நோயாளி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும் வாய்ப்பு இருக்கிறது.
கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்படுவதாலும், ஸ்டீராய்டு ஊசிகள் போடப்படுவதாலும்தான் இதுபோல பாதிப்பு ஏற்படுவதாக ஆரம்பத்தில் கருதப்பட்டது. ஆனால் இதற்கு வேறு காரணங்கள் இருப்பதாக கூறுகிறார் மருத்துவர் தீபக்.
இதுபற்றி அவர் ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கூறுகையில், கடந்த வருடம் கொரோனா நோய்த்தொற்று பரவியபோது கருப்பு பூஞ்சை நோய் அதிகமாக காணப்படவில்லை. ஆனால், அதை ஒப்பிடும்போது இப்போது இந்த நோய் பரவல் ஏற்பட்டு இருக்கும் விகிதம் அதிகரித்து இருக்கிறது.
இதற்கு காரணம் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் ஏற்படுத்தக்கூடிய பக்கவிளைவு. இரண்டாவது விஷயம், தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பது. பெரும்பாலும் கருப்பு பூஞ்சை நோய், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத நோயாளியிடம்தான் அதிகமாக பரவியதை பார்க்க முடிகிறது.
இன்னொரு விஷயம், ஒரு நாளைக்கு 10 முறை தண்ணீரை சூடுபடுத்தி அதில் ஆவி பிடித்து கொரோனாவை விரட்டி விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அதிகப்படியாக நீராவிப் பிடிப்பதால் மூக்கின் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடுகிறது.
கருப்பு பூஞ்சை (mucormycosis) நோய்க்கிருமி காற்றில் பரவி இருக்கிறது. இதை நமது மூக்கு தடுத்துக் கொள்ளும். ஆனால், நீராவி பிடிப்பதன் மூலமாக அந்த தடுப்பு திறன் குறைகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு தான் கருப்பு பூஞ்சை நோய் ஏற்படுவதாக ஒரு கருத்து இருந்தது. அது தவறான தகவல். வீட்டிலிருந்து கொரோனா மருந்து மாத்திரை மட்டும் எடுத்துக் கொண்டு இருக்கும் நோயாளிகளுக்கும் இந்த நோய் தொற்று பரவியுள்ளது.
எனவே, ஸ்டீராய்டு ஊசிகள், ஆக்ஸிஜன் ஏற்றுவது ஆகியவைதான் இந்த நோய்களுக்கு காரணம் என்று நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். அறிகுறிகள் தென்பட்டதும் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் கருப்பு பூஞ்சை தொடர்பாக அதிகப்படியான அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் தீபக் ஹல்திப்பூர் என்பது குறிப்பிடத்தக்கது.