மனதின் குரல், 78ஆவது பகுதி
ஒலிபரப்பு நாள்: 27.06.2021
ஒலிபரப்பு: அகில இந்திய வானொலி, சென்னை
தமிழாக்கம் / குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்
பிரதமர் நரேந்திர மோதி தமது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மனதின் குரல் மூலம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இருந்து ஒரு பகுதி…
எனதருமை நாட்டுமக்களே வணக்கம். எப்போதுமே மனதின் குரலில் உங்களுடைய கேள்விகள் அடைமழை போல வந்த வண்ணம் இருக்கும். ஆனால் இந்த முறை, சற்று விலகி, நான் உங்களிடத்தில் வினா எழுப்ப வேண்டும் என்று நினைக்கிறேன். சரி, என்னுடைய வினாக்களை சற்று கவனமாகக் கேளுங்கள்.
……ஒலிம்பிக் போட்டிகளில், தனிநபருக்கான தங்கப் பதக்கத்தை வென்ற முதல் இந்தியர் யார் தெரியுமா?
……ஒலிம்பிக் போட்டிகளில், எந்த விளையாட்டுக்களில் பாரதம் இதுவரை அதிகமான பதக்கங்கள் வென்றிருக்கிறது?
……ஒலிம்பிக் போட்டிகளில் எந்த வீரர் அதிகபட்ச பதக்கங்களை வென்றிருக்கிறார்?
நண்பர்களே, நீங்கள் எனக்கு விடை அனுப்பினாலும் அனுப்பா விட்டாலும், MyGov தளத்தில் ஒலிம்பிக்குகள் தொடர்பான வினாவிடை இருக்கிறது, இதில் இருக்கும் வினாக்களுக்கு விடைகளை அளித்து பல பரிசுகளை வெல்லுங்கள். இதே போல நிறைய வினாக்கள் MyGov தளத்தின் Road to Tokyo Quiz, அதாவது டோக்கியோவுக்கான பாதை வினா-விடைப் போட்டியில் இருக்கிறது. நீங்கள் இந்த Road to Tokyo Quizஇல் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். முன்பு பாரதம் எப்படி செயல்பட்டது?
இப்போது டோக்யோ ஒலிம்பிக்ஸுக்கான தயாரிப்புகள் என்னென்ன? – இவை அனைத்தும் பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள், மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். நீங்கள் இந்த வினா விடைப் போட்டியில் கண்டிப்பாகப் பங்கேற்க வேண்டும் என்று உங்கள் அனைவரிடத்திலும் நான் கேட்டுக் கொள்கிறேன்.
நண்பர்களே, ஒலிம்பிக்ஸ் பற்றிய பேச்சு என்று வரும் போது, மில்கா சிங் என்ற தடகள ஜாம்பவானை யாரால் மறந்து விட முடியும் சொல்லுங்கள்!! சில நாட்கள் முன்பாக, கொரோனா பெருந்தொற்று அவரை நம்மிடமிருந்து பறித்துக் கொண்டது. அவர் மருத்துவமனையில் இருந்த போது, அவரோடு பேசக்கூடிய ஒரு சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. பேசிக் கொண்டிருக்கும் வேளையில் நான் அவரிடத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்தேன்.
நீங்கள் 1964ஆம் ஆண்டு, டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியப் பிரதிநிதியாகப் பங்கெடுத்துக் கொண்டீர்கள், ஆகையால் இந்த முறை, நமது விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக்ஸில் பங்கெடுக்கச் செல்லும் போது, நீங்கள் நமது வீரர்களின் மனோபலத்தை அதிகப்படுத்த வேண்டும், உங்கள் செய்தியால் அவர்களுக்கு உத்வேகமளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
அவர் விளையாட்டுக்களிடத்தில் எத்தனை அர்ப்பணிப்பு உள்ளவர், எத்தனை உணர்வுமயமானவர் என்றால், நோய்பாதிப்பு இருந்ததையும் தாண்டி, உடனடியாகத் தனது சம்மதத்தைத் தெரிவித்தார். ஆனால் துர்பாக்கியவசமாக, விதியின் முடிவு வேறு விதமாக இருந்தது. 2014ஆம் ஆண்டு அவர் சூரத் வந்திருந்தது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. நாங்கள் இரவு மாரத்தான் போட்டி ஒன்றைத் தொடங்கி வைத்தோம்.
அப்போது அவரோடு நான் கலந்து பேசிய பொழுது, விளையாட்டுக்கள் பற்றிப் பேசினோம், அது எனக்கு மிகுந்த கருத்தூக்கமாக அமைந்தது. மில்கா சிங் அவர்களின் குடும்பம் முழுவதுமே விளையாட்டுக்களிடத்தில் அர்ப்பணிப்பு உடையது, பாரதத்திற்குப் பெருமை சேர்ப்பது என்பதை நாமறிவோம்.
நண்பர்களே, திறமை, அர்ப்பணிப்பு, மனவுறுதி மற்றும் போட்டி நேர்மைப் பண்பு எல்லாம் ஒருசேர இணையும் போது, ஒரு சாம்பியன் உருவாகிறார். நம்முடைய தேசத்தில் பெரும்பாலான விளையாட்டு வீரர்கள், சின்னச்சின்ன நகரங்கள், பகுதிகள், கிராமங்களிலிருந்து உருவாகிறார்கள். டோக்கியோ செல்லவிருக்கும் நமது ஒலிம்பிக் அணியிலும் கூட, பல விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை நமக்கு பெரும் கருத்தூக்கம் அளிக்கவல்லதாய் இருக்கிறது.
நம்முடைய பிரவீண் ஜாதவ் அவர்களைப் பற்றி நீங்கள் கேட்டால், எத்தனை கடினமான இடர்ப்பாடுகளை எல்லாம் தாண்டி பிரவீண் அவர்கள் இந்த நிலையை எட்டியிருக்கிறார் என்பதை நீங்களே உணர்வீர்கள். பிரவீண் ஜாதவ் அவர்கள், மஹாராஷ்ட்டிர மாநிலத்தில் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறிய கிராமத்தில் வசிப்பவர்.
அவர் வில்வித்தையில் அற்புதமான வீரர். இவருடைய பெற்றோர் கூலித்தொழில் செய்து குடும்பத்தை நிர்வாகம் செய்கிறார்கள்; இப்போது இவர்களின் மகன், தனது முதல் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கெடுக்க டோக்கியோ செல்லவிருக்கிறார். இது அவருடைய பெற்றோருக்கு மட்டுமல்ல, நம்மனைவருக்குமே கூட பெரும் கௌரவத்தை ஏற்படுத்தும் விஷயம்.
இதே போல, இன்னொரு விளையாட்டு வீரர் தான் நமது நேஹா கோயல் அவர்கள். டோக்கியோ செல்லவிருக்கும் பெண்கள் ஹாக்கி அணியின் ஒரு உறுப்பினர் தான் இந்த நேஹா. இவருடைய தாயும், சகோதரிகளும், சைக்கிள் தொழிற்சாலையில் வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றார்கள். நேஹாவைப் போன்றே, தீபிகா குமாரி அவர்களுடைய வாழ்க்கைப் பயணமும் மேடு பள்ளங்கள் நிறைந்த ஒன்றாகவே இருந்து வருகிறது.
தீபிகாவின் தந்தை, ஆட்டோ ரிக்ஷா ஓட்டி வருகிறார், தாய் செவிலியாக வேலை பார்க்கிறார், இப்போது டோக்கியோ ஒலிம்பிக்ஸில், பாரதத்தின் பிரதிநிதியாக தீபிகா, தனியொரு பெண் வில்வித்தை வீராங்கனையாக பங்கெடுக்க இருக்கிறார். ஒரு சமயத்தில் உலகிலேயே வில்வித்தைப் போட்டியில் முதலாவதாகத் திகழ்ந்த தீபிகாவுக்கு நம்மனைவரின் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
நண்பர்களே, வாழ்க்கையில் நாம் எந்த இடத்தை எட்டினாலும், எத்தனை உயரத்தைத் தொட்டாலும், நிலத்துடனான நமது தொடர்பு, எப்போதும் நமது வேர்களோடு நம்மைப் பிணைத்து வைக்கும். போராட்டக்காலங்கள் கழிந்த பிறகு கிடைக்கும் வெற்றியின் ஆனந்தம் அலாதியானது.
டோக்கியோ செல்லும் நமது வீரர்களும் வீராங்கனைகளும், தங்கள் சிறுவயதில் கருவிகள்-வசதிகள்-வாய்ப்புகள் குறைபாட்டை எதிர்கொண்டார்கள் என்றாலும், அவர்கள் உறுதியோடு இருந்தார்கள், தொடர்ந்து முயன்றார்கள். உத்திரப்பிரதேசத்தின் முஸஃபர்நகரைச் சேர்ந்த பிரிங்கா கோஸ்வாமி அவர்களின் வாழ்க்கை நமக்கு மிகுந்த படிப்பினையை அளிக்கிறது.
பிரியங்கா அவர்களுடைய தந்தையார் ஒரு பேருந்து நடத்துநராகப் பணிபுரிகிறார். சிறுவயதில் பிரியங்காவிற்கு, பதக்கம் வெல்லும் வீரர்களுக்குக் கிடைக்கும் பை மிகவும் பிடித்துப் போயிற்று. இதனால் கவரப்பட்டு, இவர் முதன்முறையாக Race Walking, அதாவது வேகமாக நடத்தல் போட்டியில் பங்கெடுத்துக் கொண்டார். இன்று, இவர் இந்தப் போட்டியில் மிகப் பெரிய சாம்பியனாக விளங்குகிறார்.
Javelin Throw என்ற ஈட்டியெறிதல் போட்டியில் பங்கெடுக்கவிருக்கும் ஷிவ்பால் சிங் அவர்கள், பனாரஸில் வசிப்பவர். ஷிவ்பால் சிங் அவர்களின் குடும்பம் முழுவதுமே இந்தப் போட்டியோடு தொடர்புடையது. இவரது தந்தையார், சிற்றப்பா, சகோதரர் என அனைவரும் ஈட்டி எறிதலில் வல்லவர்கள்.
குடும்பத்தின் இந்தப் பாரம்பரியம் தான் இவருக்கு டோக்கியோ ஒலிம்பிக்ஸில் கைகொடுக்க இருக்கிறது. டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பங்கெடுக்கவிருக்கும் சிராக் ஷெட்டியும் இவரது கூட்டாளியுமான சாத்விக் சாய்ராஜ் ஆகியோரின் தன்னம்பிக்கையும் உத்வேகம் அளிக்கவல்லது. தற்போது சிராகின் தாய்வழிப் பாட்டனார், கொரோனா காரணமாக இறந்து விட்டார். சாத்விக்கும் கூட கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
ஆனால் இந்த இடர்களை எல்லாம் தாண்டி, இந்த இருவரும், Men’s Double Shuttle Competition, அதாவது ஆடவர் இரட்டையர் களுக்கான சிறகுப்பந்தாட்டப் போட்டியில், தங்களது மிகச் சிறப்பான பங்களிப்பை அளிக்கும் தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். மேலும் ஒரு விளையாட்டு வீரரை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். இவர் தான் ஹரியாணாவின் பிவானீயைச் சேர்ந்த மனீஷ் கௌஷிக் அவர்கள். மனீஷ் அவர்கள் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறுவயது முதற்கொண்டே, வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போதிலிருந்தே, மனீஷுக்கு குத்துச் சண்டை மீது ஆர்வம் ஏற்பட்டுப் போனது.
இன்று இந்த ஆர்வம் இவரை டோக்கியோ கொண்டு போக இருக்கின்றது. மேலும் ஒரு விளையாட்டு வீரரின் பெயர், சீ. ஏ. பவானீ தேவீ அவர்கள். பெயரும் பவானீ, வாட்சிலம்ப வல்லுநர். சென்னையில் வசிக்கும் பவானீ, ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றிருக்கும் முதல் இந்திய fencer, வாட்சிலம்புக்காரர். பவானீயின் பயிற்சி தொடர வேண்டும் என்பதற்காக இவரது அன்னை தனது நகைகளைக்கூட அடகு வைத்தார் என்பதை நான் ஒருமுறை எங்கோ படிக்க நேர்ந்தது.
நண்பர்களே, இப்படி கணக்கேயில்லாத பெயர்கள் ஆனால், மனதின் குரலில் என்னால் ஒரு சில பெயர்களை மட்டுமே குறிப்பிட முடிந்திருக்கிறது. டோக்கியோ செல்லவிருக்கும் நமது விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவரும் போராடி வந்திருக்கிறார்கள், பல்லாண்டுக்கால கடின உழைப்பு உழைத்திருக்கின்றார்கள்.
இவர்கள் தங்களுக்காக மட்டும் செல்லவில்லை, தேசத்திற்காகச் செல்கிறார்கள். இந்த விளையாட்டு வீரர்கள் பாரதத்தின் கௌரவத்தை உயர்த்த வேண்டும், மக்களின் மனங்களையும் வெல்ல வேண்டும், ஆகையால் என் இனிய நாட்டுமக்களே, நான் உங்களுக்கும் ஒரு ஆலோசனை அளிக்க விரும்புகிறேன்.
தெரிந்தோ தெரியாமலோ கூட நாம் நமது இந்த வீரர்கள் மீது எந்த விதமான அழுத்தத்தையும் கொடுத்து விடக் கூடாது; மாறாக திறந்த மனத்தோடு இவர்களுக்கு நமது ஊக்கத்தை அளிக்க வேண்டும், ஒவ்வொரு விளையாட்டு வீரரின் உற்சாகத்தையும் அதிகரிக்க வேண்டும்.
சமூக ஊடகங்களில் நீங்கள் #Cheer4India வோடு நமது இந்த விளையாட்டு வீரர்களுக்கு நல்வாழ்த்துக்களை அளிக்கலாம். நீங்கள் மேலும் புதுமையான ஒன்றைச் செய்ய விரும்பினால், அப்படியும் அவசியம் செய்யுங்கள். உங்கள் மனதில் ஒரு எண்ணம் உதித்தால், அதை தேசம் முழுவதும் இணைந்து நமது விளையாட்டு வீரர்களுக்காகச் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அதைக் கண்டிப்பாக எனக்கு எழுதி அனுப்புங்கள். நாமனைவரும் இணைந்து டோக்கியோ செல்லவிருக்கும் நமது விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிப்போம் – Cheer4India!!!Cheer4India!!!Cheer4India!!!