அருணாச்சல பிரதேச மாநிலம் இடாநகரில் இருந்து வடமேற்கே 80 கிலோ மீட்டர் தொலைவில் இன்று அதிகாலை 1 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 3.6 ஆக பதிவாகி உள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்த தேசிய நிலநடுக்கவியல் மையம், அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் பொருள் இழப்புகள் ஏற்பட்டதா? என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
கடந்த 5 நாட்களுக்கு முன்னர் கூட, அருணாச்சல பிரதேசத்தில் பார்கின் பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகி இருந்தது.
அதற்கு முன்னதாக கடந்த மாதம் 19ம் தேதி சாங்லாங் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியிருந்தது.
அந்த நிலநடுக்கம் 48 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் மட்டும் குலுங்கியதே தவிர பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.