
சில்பெல்லாபூர் மாவட்டத்தில் காக்கி உடை அணிந்த 2 நபர்கள் தக்காளி திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தக்காளி உச்சபட்ச விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், இல்லத்தரசிகள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.
தக்காளி விலை குறித்த எக்கச்சக்க மீம்ஸ்கள் இணையத்தில் ஹிட் அடிக்கிறது. தக்காளி விலை உயர்வு சாமானியர்களை கடுமையாக பாதித்துள்ளது.
இந்நிலையில் கர்நாடகா மாநிலம் சிக்கபல்லபுரா மாவட்டம் சிந்தாமணி தாலுக்காவில் காக்கி உடையில் வரும் இருவர் தக்காளியை திருடும் சிசிடிவி காட்சிகள் ஒன்று வெளியாகி உள்ளது.

சிந்தாமணி தாலுக்காவில் உள்ள வேளாண் விலை பொருள் மார்கெட்டில் விடியற்காலை விற்பனைக்காக தக்காளிகள் பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டு அதன் மேல் தார்பாய் கொண்டு வியாபாரிகள் மூடி வைத்துள்ளனர்.
அந்த தக்காளியை விடியற்காலை 3 மணி அளவில் வந்த இரண்டு நபர்கள் திருடி சென்றுள்ளனர். காக்கி உடை அணிந்து வந்த 2 நபர்கள் பெட்டிகளில் உள்ள தக்காளியை திருடி பைகளில் கொண்டு செல்லும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகளை தற்போது மார்கெட் குழு சார்பில் வெளியிட்டு உள்ளனர்.
சமீபத்தில் ஒரு கொள்ளையன் நகையை விட்டு விட்டு தக்காளியை கொள்ளயடிப்பதாக சித்தரிக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதே போன்று தற்போது நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட காலம் போய் தங்கம் விலையில் விற்கும் தக்காளியை திருடிச்சென்ற வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



