spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாகாசி பெருவழிப்பாதை திறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் உரை (முழு வடிவம்)

காசி பெருவழிப்பாதை திறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் உரை (முழு வடிவம்)

- Advertisement -

PM Modi’s address at inauguration of the Kashi Vishwanath Dham in Varanasi, Uttar Pradesh
– தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன் –

ஹரஹர மஹாதேவ்!!  ஹரஹர மஹாதேவ்!!  நமஹ பார்வதிபதயே, ஹரஹர மஹாதேவ!! மாதா அன்னபூர்ணாவுக்கு….. ஜே!!  கங்காமையாவுக்கு…. ஜே!!  இந்த வரலாற்றுசிறப்பு மிக்க நிகழ்ச்சியிலே பங்கெடுக்கும்,  உத்திரபிரதேசத்தின் ஆளுநரான, திருமதி ஆனந்திபேன் படேல் அவர்களே,  உத்திர பிரதேசத்தின் முதலமைச்சர், கர்மயோகி, திரு. யோகி ஆதித்யநாத் அவர்களே, பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவரும், நம்மனைவரின் வழிகாட்டியுமான, திரு. ஜே.பி. நட்டா அவர்களே, துணை முதல்வர்… திரு. கேஷவ் பிரசாத் மௌர்யா அவர்களே தினேஷ் ஷர்மா அவர்களே, மத்தியிலே அமைச்சரவையின் என் சகாவான மஹேந்திரநாத் பாண்டே அவர்களே, உத்திரபிரதேச பாரதீய ஜனதா கட்சியின் தலைவர், ஸ்வதந்திர தேவ் சிங் அவர்களே, இந்த மாநிலத்தின் அமைச்சர் திரு. நீலகண்ட் திவாரி அவர்களே, தேசத்தின் அனைத்து இடங்களிலிருந்தும் வந்திருக்கும், பூஜிக்கத்தகுந்த புனிதர்களே, மேலும், எனக்குப் பிரியமான காசிவாஸிகளே.  மேலும் தேசத்திலும் அயல்நாடுகளிலும், இந்தக் காட்சியைக் கண்டு கொண்டிருக்கும், அனைத்து பக்தர் பெருமக்களே.  காசியின் அனைத்து சகோதரர்களோடும், விஸ்வநாதரின் சரண கமலங்களில் நான், சிரம் பதிக்கின்றேன்.  மாதா அன்னபூர்ணாவின் சரண கமலங்களிலே, மீண்டும்மீண்டும் நான் தலை வணங்குகிறேன். இப்போது நான், பாபாவைத் தவிர மேலும், நகரின் காவலனான, காலபைரவரையும் தரிசனம் செய்துவிட்டுத் தான் வருகிறேன்.  நாட்டுமக்களுக்காக, அவருடைய ஆசிகளை வேண்டிக்கொண்டு வருகிறேன்.  காசியிலே சிறப்பானது எது இருந்தாலும்,  புதிதானது எது இருந்தாலும், முதலில் அவருடைய அனுமதியைப் பெறுவது அவசியமாகும்.  நான் காசியின் காவலனின் பாதாரவிந்தங்களிலும் பணிந்து வணங்குகிறேன். 

க³ங்கா³தரங்க³ரமணீயஜடாகலாபம்ʼ,
கௌ³ரீநிரந்தரவிபூ⁴ஷித, வாமபா⁴க³ம்
நாராயணப்ரிய, மனங்க³மதா³பஹாரம்ʼ
வாராணஸீ …. புரபதிம்ʼ,   ப⁴ஜ விஶ்வநாத²ம் ॥

நான் பாபா விச்வநாதரின் சந்நிதியிலிருந்து, உலகின் அனைத்துப் பகுதி பக்தகோடிகளுக்கும் தலை வணங்குகிறேன்.  யாரெல்லாம் தங்களுடைய இடங்களிலிருந்து, இந்த மஹாயாகத்திற்கு சாட்சியாக இருக்கிறார்களோ, நான் காசிவாசிகளான அனைவருக்கும், வணக்கம் தெரிவிக்கிறேன்.  உங்களுடைய ஒத்துழைப்பினால் தான், இந்த சுபவேளை சாத்தியமாகி இருக்கிறது.  நான் நெக்குருகிப் போகிறேன்.  மனதில் ஆனந்தம் பொங்குகிறது.  உங்கள் அனைவருக்கும் பல்லாயிரம் நல்வாழ்த்துக்கள். 

நண்பர்களே, நம்முடைய புராணங்களிலே என்ன கூறப்பட்டிருக்கிறது என்றால், எந்த ஒரு நொடியிலே, ஒருவர் காசிக்குள் பிரவேசிக்கின்றாரோ, அனைத்து பந்தங்களிலிருந்தும் அவர் விடுபட்டுப் போகிறார்.  பகவான் விஸ்வேஸ்வரருடைய ஆசிகள், ஒரு சிறப்பான சக்தி இங்கு வரும் பொழுதே, நம்முள் உறையும் ஆன்மாவை விழிப்படையச் செய்கிறது.  மேலும் இன்று, இந்த நிரந்தர விழிப்பளிக்கும் காசியின் விழிப்புநிலையிலே, ஒரு வித்தியாசமான அதிர்வலை இருக்கிறது.  இன்று காசியின் உலகிற்கப்பாற்பட்ட தன்மையிலே, ஒரு வித்தியாசமான ஒளி இருக்கிறது.  இன்று, சாசுவதமான பனாரசின் உறுதிப்பாட்டிலே, ஒரு வித்தியாசமான திறமை பளிச்சிடுகிறது.  நாம் சாஸ்திரங்களிலே கேள்விப்பட்டிருக்கிறோம், எப்போது ஒரு புண்ணியமான வேளை வருகிறதோ, அப்போது அனைத்துத் தீர்த்தங்களும்,  அனைத்து தைவீக சக்திகளும், பனாரஸிலே,  பாபாவின் சந்நிதிக்கே வந்து விடுகின்றன.  இதே போன்றதொரு அனுபவம், இன்று எனக்கு, பாபாவின் சந்நிதிக்கு வரும் போது நடக்கின்றது.  எனக்கு எப்படி இருக்கிறது தெரியுமா?  ஏதோ ஒட்டுமொத்த அண்டசராசரங்களும், இதோடு இணைந்திருக்கிறது என்று.  பார்க்கப் போனால், தனது மாயையின் விரிந்துபட்ட நிலையை, பாபா தானே அறிவார்?  ஆனால்,  நம்மைப் பொறுத்த மட்டிலே, நமது மனித கண்ணோட்டத்திலே, விஸ்வநாதர் கோயிலின் இந்தப் புண்ணியமான ஏற்பாட்டுடன், குறித்த நேரத்தில் முழுமையாக,  உலகம் முழுவதும் இணைந்திருக்கின்றது. 

நண்பர்களே, இன்று, பகவான் சிவனுக்குப், பிரியமான நாளான திங்கட்கிழமை.  இன்று, விக்ரம ஆண்டு, இரண்டாயிரத்து எழுபத்திஎட்டு.  மார்கசீர்ஷம் சுக்லபட்சம்.  தஸமி திதி.  ஒரு புதிய சரித்திரம் படைக்கப்பட்டு வருகிறது.  மேலும் நமக்கெல்லாம் உள்ள நற்பேறு, இங்கே நாம், இந்தத் திதியின் சாட்சிகளாக அமைந்திருக்கிறோம்.  இன்று, விஸ்வநாதர் தலம், கற்பனை செய்ய முடியாத, முடிவேயில்லாத சக்தியால் நிரம்பியிருக்கிறது.  இதன் பெருமை, மேலும் பரவிக் கொண்டே இருக்கிறது.  இதன் சிறப்புத்தன்மை, விண்ணைத் தொட்டுக் கொண்டிருக்கிறது.  இங்கே அக்கம்பக்கத்திலே, அநேகமான பண்டைய கோயில்கள், காணாமல் போய் விட்டன.  இவையும் கூட, மீண்டும் நிறுவப்பட்டு இருக்கின்றன.  பாபா, தன்னுடைய பக்தர்களின், பல நூற்றாண்டுக்கால சேவையால், மகிழ்ந்து போயிருக்கிறார்.  ஆகையினால், அவரே, இன்றைய நாளன்று நமக்கெல்லாம் ஆசியளித்திருக்கிறார்.  விஸ்வநாதர் தலத்தின் இந்தப் புதிய முழுமையான வளாகமும், ஒரு பிரமாதமான கட்டிடம் மட்டுமல்ல.  இது நமது பழமையான, பாரதீய கலாச்சாரத்த்தின் சனாதனத்தை எடுத்துக் காட்டுகிறது.  நம் ஆன்மீக ஆன்மாவை,  நமக்கு இது எடுத்துக் காட்டுகிறது.  இது மேலும் நமக்கு, பாரதத்தின் பழமையையும்,  பாரம்பரியங்களையும், பாரதத்தின் சக்தியை-இயங்குதன்மையை செப்புகிறது.  நீங்கள் அனைவரும், இங்கே வரும் போது, இங்கே வெறும், நம்பிக்கையை மட்டும் காண்பீர்கள் என்பதல்ல.  உங்களால் இங்கே, உங்கள் கடந்த காலத்தின் பெருமிதத்தையும் உணர முடியும்,  அதாவது எப்படி, பழைமையோடு கூடவே புதுமையும், ஒருங்கே உயிர்ப்போடு இருக்கின்றன, எப்படி பழைமையின் உத்வேகங்கள், எதிர்காலத்திற்கான திசை காட்டுகின்றன, இதை நேரடியாக உங்களால், விஸ்வநாதரிடம் கிடைக்கும்.

நண்பர்களே, இங்கே அன்னை கங்கை, உத்தரவஹினியாகி பாபாவின் திருவடி நாடி காசி வருகிறாளோ, அந்த அன்னை கங்கையும் கூட, இன்று பெரும் ஆனந்தத்தில் இருக்கிறாள்.  இப்போது நாம், பகவான் விஸ்வநாதரின் பாதங்களில் பணியும் போது, மனதைச் செலுத்தும் போது, அப்போது அன்னை கங்கைத் தொட்டு வரும் காற்று, நம்மீது அன்பைப் பொழியும், நமக்கு ஆசிகளை அளிக்கும்.  நம் அன்னை கங்கை, களிப்படையும் போது, மகிழும் போது, பாபாவின் தலத்திலே நாம், கங்கையின் அலைகளின் கலகலவொலி, கங்கையின் அலைகளின் கலகலவொலியையும் நன்றாக, அனுபவித்துணர முடியும்.  பாபா விஸ்வநாதர், அனைவருக்கும் உரித்தானவர்.  அன்னை கங்கையும், அனைவருக்கும் சொந்தமானவள்.  இவர்களுடைய ஆசிகள்,  அனைவருக்கும் உண்டானவை.  ஆனால், காலம் மற்றும் சூழல் காரணமாக, பாபா-அன்னை கங்கையின் சேவையின் சுலபத்தன்மை, சிரமத்திற்குள்ளானது.  இங்கே அனைவரும் வர விரும்பினார்கள்.  ஆனால், பாதைகள் மற்றும் இடத்திற்குப் பற்றாக்குறை.  மூத்தவர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு, இங்கே வருவது மிகவும் சிரமமானதாக இருந்தது.  ஆனால் இப்போதோ, விஸ்வநாதர் தலத்தின் திட்டம் முழுமை அடைந்த நிலையில், இங்கே அனைவராலும், சுலபமாக வந்து தரிசிக்க முடியும்.  நம்முடைய மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகள், வயதான தாய் தந்தையர், நேரடியாக, படகிலிருந்து படகுத்துறைக்கு வரலாம், அங்கிருந்து படித்துறைக்கு வரவும் கூட, எஸ்கலேட்டர்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.  அங்கிருந்து நேரடியாக, கோயில் வரை வர முடியும்.  குறுகலான பாதைகள் காரணமாக, தரிசனம் செய்ய மணிக்கணக்காக, பலமணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருந்தது.  இதனால் உளைச்சல், இதுவும் கூட, இப்போது குறைந்து விட்டது.  முன்பெல்லாம், இங்கிருந்த கோயில் தலம் மட்டும், வெறும் 3000 சதுர அடியாக இருந்தது, அது இப்போது, கிட்டத்தட்ட 5 இலட்சம் சதுர அடியாக ஆகி விட்டது.  இப்போது கோயில் மற்றும் கோயில் வளாகத்திலே, 50 முதல் 70000 வரையிலான பக்தர்கள், தரிசிக்க முடியும்.  அதாவது, முதலில் அன்னை கங்கையை தரிசனம் செய்த பிறகு, அங்கிருந்து நேரடியாக விஸ்வநாதர் கோயில்.  எத்தனை அற்புதம்!!  ஹரஹர மஹாதேவ்!!

நண்பர்களே, நான் பனாரஸ் வந்த போது, ஒரு நம்பிக்கையைத் தாங்கி வந்தேன்.  நம்பிக்கை, என்மீது உள்ளதை விட அதிகமாய்,  பனாரஸ் வாசிகளின் மீது இருந்தது.  உங்கள் மீது இருந்தது.  இது, கணக்குப் பார்க்கும் நேரமல்ல.  ஆனால் எனக்கு நினைவிருக்கிறது.  அப்போது சிலர், இப்படியும் சிலர் இருந்தார்கள், இவர்கள் பனாரஸ்வாசிகளை சந்தேகப் பட்டார்கள்.  எப்படி இது நடக்கும்?  நடக்கவே நடக்காது.  இங்கெல்லாம் இப்படித்தான்.  இந்த மோதி மாதிரி நிறைய பேர் வந்தார்கள் சென்றார்கள்.  எனக்கு என்ன ஆச்சரியமாக இருந்தது என்றால், இந்த பனாரஸ் பற்றி, இப்படிப்பட்ட கருத்துக்களை உருவாக்கியிருந்தார்கள்.  இப்படிப்பட்ட வாதங்கள் பேசப்பட்டன.  இந்தச் செயலின்மை, பனாரஸுடையது கிடையாது, அப்படி இருக்கவும் முடியாது.  கொஞ்சம் அரசியல் கலப்பும் இருந்தது.  இதோடு கொஞ்சம், சிலருடைய தனிப்பட்ட சுயநலம்.  ஆகையினால், பனாரஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டு வந்தது.  ஆனால், காசி.. இது காசியல்லவா?  காசி அமரத்துவமானது அல்லவா?  காசியிலே, ஒரே அரசாங்கம் தான் உள்ளது.  அவரது கையினிலே, டமருகம் உள்ளது.  அவருடைய அரசாங்கம் தான்.  எங்கே கங்கை, தனது பெருக்கை மாற்றிப் பெருகுகிறாளோ, அந்தக் காசியை யாரால் தடுத்து நிறுத்த முடியும?!  காசிகண்டத்திலே, பகவான் சங்கரரே கூற்யிருக்கிறார்,

வினா மம பிரஸாதம்வை, கஹ காசி ப்ரத்யுத்ததே. 

“विना मम प्रसादम् वै, कः काशी प्रति-पद्यते”

அதாவது என்னுடைய அனுமதியில்லாமல், யாரால் காசிக்குள் நுழைய முடியும்?  யாரால் இதை அனுபவிக்க இயலும்?  காசியில் மஹாதேவரின் விருப்பம் இல்லாமல், இங்கே யாரும் வர முடியாது, அவருடைய ஆசியன்றி இங்கே எதுவுமே நடக்காது.  இங்கே, எதுவெல்லாம் நடக்கிறதோ, மஹாதேவரின் விருப்பப்படியே நடக்கிறது.  இங்கே, எதுவெல்லாம் நடந்ததோ, அதை மஹாதேவரே தான் செய்தார்.  இந்த விஸ்வநாதர் கோயில், பாபாவினுடைய ஆசிகளால் தான் நடந்தேறியிருக்கிறது.  அவர் விரும்பா விட்டால், யாராலாவது ஒரு இலைக்கூட அசைத்திருக்க முடியுமா?  ஒருவர் எத்தனை பெரிய ஆளாக இருந்தாலும், அதெல்லாம் வீட்டுக்குள்ளே தான்.  அவர் விரும்பினால் தான், யாராலும் வரவும் முடியும் எதையும் செய்யவும் முடியும்.

நண்பர்களே, பாபாவைத் தவிர, வேறு நபர்களின் பங்களிப்பு உண்டு என்று சொன்னால், அவர்கள், பாபாவின் கணங்களுடையது தான்.  பாபாவின் கணங்கள் அதாவது, நமது காசிவாசிகள் அனைவரும்.  அனைத்துக் காசிவாசிகளும்.  அவர்கள், தாங்களே, மஹாதேவரின் சொரூபங்கள் தாம்.  எப்போதெல்லாம், பாபா தன்னுடைய சக்தியை வெளிப்படுத்த விரும்புகிறாரோ, அப்போது காசிவாசிகள் மூலமாகவே அவர் செய்கிறார்.  பிறகு காசி செய்கிறது உலகமே பார்க்கிறது.  இதம் சிவாய இதம் ந மம.  இதம் சிவாய,  இதம் ந மம.

சகோதர சகோதரிகளே, நான் இன்று,  என்னுடைய அனைத்து, தொழிலாளர் சகோதர சகோதரிகளுக்கும், என் நன்றிகளை வெளிப்படுத்த விரும்புகிறேன்.  இவர்களுடைய வியர்வை, இந்த உன்னதமான அமைப்பை உருவாக்க சிந்தப்பட்டிருக்கிறது.  கொரோனாவின் இந்தச் சங்கடமான வேளையிலும் கூட, இவர்கள், இங்கே வேலைத் தடைப்பட விடவில்லை.  இப்போது தான், நமது தொழிலாளர் நண்பர்களை, சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.  அவர்களுடைய ஆசிகளைப் பெறும் பேறும் கிடைத்தது.  நம்முடைய கைவினைஞர்கள், கட்டுமானப் பொறியியலோடு தொடர்புடையோர், நிர்வாகத்தினர், இங்கே வீடுகள்,  இருந்தவர்களின் குடும்பங்கள், நான் அனைவரையும் நெஞ்சார வழுத்துகிறேன்.  இவர்கள் அனைவரையும் தவிர, நான் உபி அரசு, நம்முடைய கர்மயோகி யோகி ஆதித்யநாத் அவர்களுக்கும், அவருடைய குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.  இவர்கள் காசி விஸ்வநாதர் கோயில் வளாகத் திட்டத்தை நிறைவேற்ற, இரவுபகலாகப் பாடுபட்டிருக்கிறார்கள். 

நண்பர்களே, நம்முடைய இந்த வாராணசியானது, பல யுகங்களைக் கண்டிருக்கிறது.  வரலாற்றின் ஆக்கங்களையும் அழிவுகளையும் பார்த்திருக்கிறது.  எத்தனையோ காலகட்டங்கள் வந்தன சென்றன.  எத்தனையோ பேரரசுகள் எழுந்தன.  மண்ணோடு மண்ணாயின.  இவற்றைத் தாண்டி, பனாரஸ் உயிர்ப்போடு இருக்கிறது.  பனாரஸ்…. தனது மணத்தைப் பரப்பி வருகிறது.  பாபாவின் இந்தத் தலம், சாசுவதமாக மட்டும் இருக்கவில்லை, இதன் அழகும் கூட, எப்போதும், உலகை வியக்கவும் வைத்தது ஈர்க்கவும் செய்தது.  நம்முடைய புராணங்களிலே, இயற்கை எழில் கொஞ்சம் காசி என, காசியின் திவ்வியமான சொரூபம் பற்றி வர்ணிக்கப்பட்டிருக்கிறது.  நாம் பண்டைய நூல்களையும் சாஸ்திரங்களையும் ஆராய்ந்தால் புரியும்.  வரலாற்று ஆசிரியர்களும் கூட, மரங்கள்…. குளங்கள் நீர்நிலைகள் நிறைந்த காசியின் அற்புத ரூபத்தை வர்ணித்திருக்கிறார்கள்.  ஆனால், காலம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.  மாபாதகர்கள், இந்த நகரத்தின் மீது தாக்குதல் தொடுத்தார்கள்.   இதை அழித்தொழிக்க முயன்றார்கள்.  ஔரங்கசேபின் கொடுமைகளுக்கு,  அவனுடைய தீவிரவாத சரித்திரமே சாட்சியாகும்.  அவன் நாகரீகத்தை வாளின் துணைக்கொண்டு மாற்ற முயற்சித்தானோ,  அவன் கலாச்சாரத்தைத் மதவெறியால் நசுக்க முயற்சித்தான்.  ஆனால், இந்த தேசத்தின் மண்ணானது, உலகின் பிற இடங்களிலிருந்து மாறுபட்டது.  இங்கே ஒருவேளை, ஔரங்கசேப் வந்தால், சிவாஜி மஹராஜும் தோன்றுவார்.  ஒருவேளை, ஒருவேளை ஏதோவொரு சாலார் மசூத் வலுத்தால், ராஜா சுஹேல்தேவ் போன்ற வீரன் ஒருவன், அவனுக்கு….. நம்முடைய ஒற்றுமையின் வலிமையை உணர வைப்பான்.  ஆங்கிலேயர்களின் காலத்திலும் கூட, வாரன் ஹேஸ்டிங்க்சுக்கு என்ன நிலையை காசிவாசிகள் ஏற்படுத்தினார்கள்!!  இதை காசியின் மக்கள், அவ்வப்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  காசிவாசிகள் நாவுகள் ஒன்று கூறுவதுண்டு….. குதிரையின் மீது அம்பாரி மேலும், குதிரையின் மீது அம்பாரி, மேலும் யானை மீது, உயிரைப் பிடித்துக் கொண்டு ஓடிப் போனான் ஹேஸ்டிங்ஸ்.

நண்பர்களே, இன்று காலத்தின் சுழற்சியைப் பாருங்கள்!!  பயங்கரவாதத்தின் அந்த அத்தியாயம், வரலாற்றின் கரும்பக்கங்களோடு குறுகிப் போனது.  ஆனால் என்னுடைய காசி, என்னுடைய காசி முன்னேறிக் கொண்டிருக்கிறது.  தன்னுடைய பெருமிதத்திற்கு மேலும் பெருமிதம் சேர்த்துக் கொண்டிருக்கிறது. 

நண்பர்களே, காசியைப் பற்றி நான் எத்தனை கூறினாலும், அத்தனை நான் மூழ்கிப் போகிறேன்.  அதே போல, உணர்ச்சியில் திளைக்கிறேன்.  காசி என்பது சொற்களோடு நின்று போவதில்லை.  காசி புரிந்துணர்வின் படைப்பாக்கம்.  காசி எது தெரியுமா?  இங்கே விழிப்புநிலையே வாழ்க்கையாகும்.  காசி எது தெரியுமா?  இங்கே மரணம் கூட மங்கலமாகும்.  காசி எது தெரியுமா?  இங்கே சத்தியமே கலாச்சாரமாகும்.  காசி எது தெரியுமா?  இங்கே அன்பே அனவரதம் ஆகும். 

சகோதர சகோதரிகளே, நம்முடைய சாஸ்திரங்களும் கூட, காசியின் மகிமை பற்றிப் பரவியுள்ளன.  பனுவல்களின் இறுதிப்பகுதியிலே, கடைசியிலே என்ன கூறியிருக்கின்றன?  நேதிநேதி என்றும் கூறியுள்ளன.  அதாவது, கூறியது மட்டுமல்ல, இதோடு நிறுத்தவில்லை, இதையும் தாண்டி இன்னும் இருக்கிறது என்கின்றன.  நம்முடைய சாஸ்திரங்களில் என்ன கூறப்பட்டிருக்கிறதென்றால், शिवम् ज्ञानम् इति ब्रयुः, शिव शब्दार्थ चिंतकाः”  அதாவது, சிவ என்ற சொல்லை தியானிப்போர்க்கு, சிவத்தையே ஞானம் என்கிறார்கள்.  ஆகையாலே, இந்தக் காசி, சிவமயமானது.  இந்தக் காசி, ஞானமயமானது.  அந்த வகையிலே, ஞானம், தேடல், ஆய்வு செய்தல், இவை காசிக்கும் பாரதத்திற்கும், விசுவாசமாக இருந்து வந்துள்ளன.  பகவான் சிவன் தானே கூறியிருக்கிறார் – सर्व क्षेत्रेषु, भू पृष्ठे, सर्व क्षेत्रेषु, भू पृष्ठे, काशी क्षेत्रम् च, मे वपु:” அதாவது, பூமியின் தலங்களிலே காசியானது, சாட்சாத், என்னுடைய உடலாக உள்ளது.  ஆகையினாலே, இங்கே இருக்கும் கல்லும், இங்கிருக்கும் ஒவ்வொரு கல்லும், சங்கரனாகும்.  ஆகையினால் தான், நாம் நமது காசியை உயிருள்ளதாகக் கருதுகிறோம்.  இந்த உணர்வு மூலமே நாம், தேசத்தின் ஒவ்வொரு அணுவிலும், தாய்மை உணர்வைத் தெரிந்து கொள்கிறோம்.  நம்முடைய சாஸ்திரங்களின் வாக்கியம் – दृश्यते, सवर्ग सर्वै:, काश्याम् विश्वेश्वरः तथा அதாவது, காசியில் அனைத்து இடங்களிலும், அனைத்து உயிர்களிலும், பகவான் விஸ்வேஸ்வரனையே நம்மால் தரிசனம் செய்ய முடிகிறது.  ஆகையினால், காசி, ஜீவாத்மாவை நேரடியாக, சிவத்துவத்தோடு இணைக்கின்றது.  நம்முடைய ரிஷிகளும் கூறியிருக்கிறார்கள் –  विश्वेशं शरणं, यायां, समे बुद्धिं प्रदास्यति அதாவது, பகவான் விஸ்வேஸ்வரனிடம் தஞ்சம் புகும் போது, சமபுத்தி, எங்கும் நிறைந்து விடுகிறது.  பனாரஸ் என்ற நகரத்திலிருந்து, இங்கே தான், ஜகத்குரு சங்கராச்சாரியாருக்கு ஸ்ரீடோம் அரசனின் தூய்மையிலிருந்து உத்வேகம் பிறந்தது.  அவர், தேசத்தை ஒற்றுமை என்ற இழையில் இணைக்கும் மனவுறுதியை மேற்கொண்டார்.  இந்த இடத்தில் தான், பகவான் சங்கரனின் கருத்தூக்கத்தால், கோஸ்வாமி துளசிதாசர், ராமசரிதமானஸ் போன்ற தெய்வீக நூலை அருளினார்.  இந்த பூமியானது, சாரநாத்திலே, பகவான் புத்தர் பற்றிய, விழிப்பினை, உலகனைத்திற்கும் வெளிப்படுத்தியது.  சமூக சீர்திருத்தத்திற்காக, கபீர்தாசர் போன்ற பெரியோர் இங்கே தோன்றினார்கள்.  சமூகத்தை இணைப்பதற்கான தேவை இருந்த போது, புனிதர் ரைதாஸரின் பக்தியின் சக்தியின் மையமாக, இந்தக் காசி ஆனது.  இந்தக் காசி, அகிஸை மற்றும் தவத்தின் திருவுருவம், 4 ஜெயின் தீர்த்தங்கரர்களின் பூமியாகும்.  ராஜா ஹரிஸ்சந்திரனின் வாய்மை விரதம் முதல், வல்லபாச்சாரியர் இராமானந்தரின் ஞானம் வரை, சைதன்ய மஹாபிரபு மேலும் சமர்த்த இராமகுரு, சமர்த்த இராமதாசர் வரை, சுவாமி விவேகானந்தர் மதன் மோஹம் மாளவியா வரை, எத்தனையோ ரிஷிகள் மற்றும் ஆச்சாரியர்களின் தொடர்பு, காசியின் புனிதமான பூமியோடு இருந்துள்ளது.  சத்ரபதி சிவாஜி மஹராஜுக்கு உத்வேகம் அளித்த பூமி இது.  ராணி லக்ஷ்மிபாய் தொடங்கி, சந்திரசேகர் ஆஸாத் வரை, எத்தனையோ சுதந்திரப் போராளிகள் கர்மபூமி ஜன்மபூமி, காசியாகவே இருந்துள்ளது.  பாரதேந்து ஹரிச்சந்திரர், ஜெய்ஷங்கர் பிரஸாத், முன்ஷி பிரேம்சந்த், பண்டிட் ரவிஷங்கர், மேலும் பிஸ்மில்லாஹ் கான் போன்ற ஆளுமைகள், இந்த…….. இந்த நினைவினை, எந்த நிலைக்குக் கொண்டு சென்றார்கள் எங்கே இட்டுச் சென்றார்கள், களஞ்சியம் கொட்டிக் கிடக்கிறது.  எப்படி காசி எல்லையில்லாததோ, அதே போலவே, காசியின் பங்களிப்பும் எல்லையில்லாதது.   காசியின் வளர்ச்சியில், இந்த எல்லையற்ற புண்ணியான்மாக்களின் சக்தியும் எல்லையில்லாதது.  இந்த வளர்ச்சியிலே, பாரதத்தின் எல்லையற்ற பாரம்பரியங்களின் மரபும் உள்ளடங்கியது.  ஆகையினாலே, சமயப்பிரிவுகளைச் சேர்ந்த ஒவ்வொருவரும், பல்வேறு மொழிகளைப் பேசும் ஒவ்வொருவரும், இங்கே வருகின்றார்கள், இந்த இடத்தோடு தங்கள் இணைப்பை உணர்ந்து கொள்கின்றார்கள்.

நண்பர்களே, காசி நம்முடைய பாரதத்தின் கலாச்சார ஆன்மீக, தலைநகராக விளங்குகின்றது என்று இருந்தாலும், இது பாரதத்தின், ஆன்மாவினுடைய ஒரு உயிர்ப்புநிறை அவதாரமும் ஆகும்.  நீங்களே கவனிக்கலாம், கிழக்கையும் வடக்கையும் இணைக்கும், உபியிலே இருக்கும் இந்தக் காசியிலே, விஸ்வநாதர் ஆலயம் தகர்க்கப்பட்டது, ஆலயத்தின் புனர்நிர்மாணத்தை, தாய் அஹல்யா பாய் ஹோல்கர் செய்வித்தார்.  இவர் ஆனால் மஹாராஷ்டிரத்திலே பிறந்தவர்.  இவருடைய கர்மபூமி இந்தோர்-மஹேஷ்வர் மற்றும்…. பல இடங்களில் இருந்தன.  அத்தகைய மாதா அஹில்யாபாய் ஹோல்கரை நான் இன்று, இந்த சந்தர்ப்பத்திலே வணங்குகிறேன்.  200-250 ஆண்டுகள் முன்னால், அவர் காசியின் சேவையில், இத்தனையையும் செய்தார்.   அதன் பிறகு, காசிக்காக இத்தனை பணிகள், இப்போது நடந்துள்ளன.    

நண்பர்களே, பாபா விஸ்வநாதரின் கோயிலின் மாட்சிமையை அதிகரிக்க, பஞ்சாபிலிருந்து, மஹாராஜா ரஞ்ஜித் சிங் அவர்கள், 23 தோலா தங்கம் அளித்தார், இதன் கோபுரத்தை பொன்னால் வேய்ந்தார்.  பஞ்சாபிலிருந்து, பூசிக்கத்தக்க குருநானக் அவர்களும், காசி வந்திருக்கிறார், இங்கே சத்சங்கம் நடத்தியிருக்கிறார்.  பிற சீக்கிய குருமார்களுக்கும் கூட, காசியோரு விசேஷ தொடர்பு இருந்துள்ளது.  பஞ்சாபைச் சேர்ந்த மக்கள்,, காசியின் மீளுருவாக்கத்திற்காக, இதயம் திறந்து கொடையளித்தார்கள்.  கிழக்கிலே வங்கத்தின் அரசி பவானி அவர்கள், பனாரசின் வளர்ச்சிக்காகத் தன் உடைமைகள் அனைத்தையும் அர்ப்பணித்தார்.  மைசூர் மற்றும் பிற தென்னிந்திய அரசர்களும் கூட பனாரசுக்காக, மிகப்பெரிய பங்களிப்பு அளித்துள்ளார்கள்.  இது எப்படிப்பட்ட நகரமென்றால், இங்கே நீங்கள், வடக்கு, தெற்கு, நேபாளி, எனக் கிட்டத்தட்ட, அனைத்துப் பாணிகளிலும் ஆலயங்களை நீங்கள் காண முடியும்.  விஸ்வநாதர் கோயில், இந்த ஆன்மீக விழிப்பின் மையமாக விளங்கியது, இப்போது இந்த விச்வநாதர் கோயில் வளாகம், தனது மகத்தான வடிவத்தில், இந்த விழிப்புக்கு மேலும் வலுவூட்ட இருக்கிறது.

நண்பர்களே, தென்னிந்திய மக்களுக்கு, காசி மீது உள்ள நம்பிக்கை, தென்னிந்தியர்களுக்கு காசி மேலுள்ள விசுவாசமும், காசி தெற்கின் மீது ஏற்படுத்திய தாக்கமும், நாம் நன்றாகவே அறிவோம்.  ஒரு நூலில் எழுதப்பட்டிருக்கிறது – तेनोपयाथेन, कदाचनात्वाराणसिम, पापनिवारणन। आवादी वाणी बलिनाहस्वशिष्यनविलोक्य लीलावासरे वलिप्तान.  கன்னடத்திலே இப்படி கூறப்பட்டிருக்கிறது.  அதாவது, சத்குரு மாத்வாச்சாரியர் அவர்கள், தனது சீடர்களோடு பயணப்பட்டிருந்த போது, அப்போது அவர் கூறினார்….. காசியின் விசுவநாதர், பாவங்களைப் போக்குபவர் என்றிருக்கிறார்.  இவர், தனது சீடர்களிடத்தில், காசியின் மகிமை, மற்றும் உயர்வைத் தெரிய வைத்திருக்கிறார். 

நண்பர்களே, பல நூற்றாண்டுகள் பழமையான இந்த உணர்வு, தொடர்ந்து கொண்டு வருகிறது.  மஹாகவி சுப்பிரமணிய பாரதியின், காசிவாசம் அவருடைய வாழ்க்கையின் போக்கையே மாற்றி விட்டது.  அவர் ஓரிடத்திலே எழுதியிருக்கிறார், தமிழிலே எழுதியிருக்கிறார் – காசிநகர்ப்புலவர், பேசும் உரை தான், காஞ்சியில் கேட்பதற்கோர், கருவி செய்வோம்.  அதாவது, காசியில் இருக்கும் புனிதர்கள் சான்றோரின் உரைகளை, காஞ்சிபுரத்தில் இருப்போர் கேட்க, சாதனங்களை உருவாக்குவோம்.  காசியிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு விஷயமும், இத்தனை பரந்துபட்டது, இது தேசத்தின் போக்கையே மாற்றக்கூடியது.  அதே போல, நான் மேலும் ஒரு விஷயத்தைக் கூறுகிறேன்.  என்னுடைய….. பழைய அனுபவம் இது.  நமது படகுத்துறையில் வசிக்கின்ற, படகினை இயக்குகின்ற, பலமுறை இந்த நண்பர்கள், இதை நீங்களும் அனுபவித்திருக்கலாம்.  தமிழ், கன்னடம், தெலுகு, மலையாளம், இவற்றை எத்தனை அருமையாகப் பேசுகிறார்கள் என்றால், ஏதோ நாம் கேரளம் தமிழ்நாடு கர்நாடகத்துக்கே வந்து விட்டது போன்ற உணர்வு ஏற்படும்.  இத்தனை சிறப்பாகப் பேசுகிறார்கள். 

நண்பர்க்ளே, பாரதத்தின் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் சக்தி, இப்படித்தான் பாதுகாக்கப்பட்டு பேணப்பட்டு வந்திருக்கின்றது.  பல்வேறுபட்ட இடங்களை பகுதிகளை ஓரிழையில் இணைக்கப்படும் போது, அப்போது பாரதம், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற வடிவத்தைப் பெறுகின்றது.  ஆகையினாலே, நாம், சௌராஷ்ட்ரே சோமநாதம், சௌராஷ்ட்ரே சோமநாதம் தொடங்கி, அயோத்தியா மதுரா மாயா காசீ காஞ்சி அவந்திகா ஆகியவற்றை, ஒவ்வொரு நாளும் நினைவில் கொள்ள வேண்டும் என்று கற்பிக்கப்படுகிறது.  நமது நாட்டிலே, 12 ஜோதிர்லிங்கங்களை நினைத்தாலே கிடைக்கும் பலன்கள் கூறப்பட்டுள்ளன.  தஸ்ய தஸ்ய பலப்ராப்தி:.  பவிஷ்யதி ந சம்ஸய:.  அதாவது, சோமநாதர் தொடங்கி விச்வநாதர் வரை, பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்களை நினைத்த மாத்திரமே, அனைத்து எண்ணங்களும் ஈடேறும், இதிலே எந்த ஐயமும் கிடையாது.  இந்த ஐயம் ஏன் இல்லையென்றால், நினைக்கும் மாத்திரத்திலேயே பாரதம் பற்றிய உணர்வு, ஒருங்கிணைத்து விடுகிறது.  பாரதம் பற்றிய உணர்வு வந்தவுடனேயே, சந்தேகம் எங்கே இருக்கப் போகிறது, சாதிக்க முடியாதது என்ன இருக்கும்?

நண்பர்களே, இதுவும் கூட, தற்செயல் நிகழ்வல்ல.  எப்போதெல்லாம் காசி திரும்பியதோ, புதியதாகச் செய்ததோ, தேசத்தின் எதிர்காலமே மாறியிருக்கிறது.  கடந்த 7 ஆண்டுகளாக, காசியில் நடைபெற்று வரும் வளர்ச்சிக்கான பெரும்வேள்வி,  இன்று ஒரு புதிய சக்தியை அடைந்து வருகிறது.  காசி விசுவநாதர் கோயிலை மக்களுக்கு அர்ப்பணித்தல், பாரதத்திற்கு, ஒரு தீர்மானமான திசையை அளிக்கும்.  ஒரு பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி இட்டுச் செல்லும்.  இந்த வளாகம் சான்று பகர்கிறது, நமது வல்லமைக்கு, நமது கடமைக்கு.  ஒன்றை நாம் நினைத்து விட்டால், முடிவெடுத்து விட்டால், சாத்தியமில்லாதது என்று எதுவும் இல்லை.  ஒவ்வொரு பாரதவாசியின் தோள்களில் பலம் இருக்கிறது, ஒவ்வொரு பாரதவாசியின் தோள்களிலும் பலம் இருக்கிறது.  இது சாத்தியமற்றதையும் சாதித்துக் காட்டுகிறது.  நாம் தியானத்தை அறிவோம், நாம் தவத்தை அறிவோம், தேசத்திற்காக, இரவுபகலாக, உழைப்பதை அறிவோம்.  சவால் எத்தனை தான் பெரிதாக இருந்தாலும் கூட, பாரதநாட்டவர் நாமிணைந்து, அதை வென்றெடுக்க முடியும்.  நாசமேற்படுத்துவோரின் சக்தி, என்றைக்குமே பாரதத்தின் சக்தி, மற்றும் பாரதத்தின் பக்தியை விட பெரிதாக இருக்கவே முடியாது. நினைவில் கொள்ளுங்கள், எந்தக் கண்ணோட்டத்தோடு நம்மை நாம் காண்கிறோமோ, அதே கண்ணோட்டத்தோடு தான் உலகும் நம்மைப் பார்க்கும்.  எனக்கு சந்தோஷமாக இருக்கிறது, பல நூற்றாண்டுக்கால அடிமைத்தனம், நம்மீது ஏற்படுத்திய பாதிப்பு, எந்த ஈனமான உணர்வுகளால், நாட்டையே நிரப்பியதோ, இப்போது இன்றைய பாரதம், இவற்றிலிருந்து வெளியேறி வருகிறது.  நமது இன்றைய பாரதம், சோமநாதர் ஆலயத்தை அழகுபடுத்திப் பார்ப்பதோடு நிற்கவில்லை, மாறாக, சமுத்திரத்திலே, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நீளத்துக்கு கண்ணாடி இழை நார் வலைப்பின்னலை உருவாக்கி வருகிறது.  இன்றைய பாரதம், பாபா கேதார்நாத் கோயிலின் குடமுழுக்கினை மட்டும் செய்யவில்லை, மாறாக, தன்னுடைய முயற்சியால், விண்வெளிக்கு, நம் நாட்டவரை அனுப்பக் கச்சை கட்டிக் கொண்டிருக்கிறது.  இன்றைய பாரதம், வெறுமனே, அயோத்தியில் பிரபு ஸ்ரீ இராமருக்குக் கோயிலை மட்டும் கட்டவில்லை, மாறாக, தேசத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், மருத்துவக் கல்லூரியையும் உருவாக்கி வருகின்றது.  இன்றைய பாரதம், வெறும் பாபா விசுவநாதர் கோயிலுக்கு, மகத்தான வடிவத்தை மட்டும் அளிக்கவில்லை, மாறாக ஏழைகள் வசிக்க தரமான வீடுகளையும் கட்டிக் கொடுக்கிறது. 

நண்பர்களே, புதிய பாரதத்திலே, நமது கலாச்சாரம் மீது பெருமிதமும், நமது திறமைகள் மீது நம்பிக்கையும் இருக்கின்றது.  புதிய பாரதத்திலே, பாரம்பரியமும் இருக்கிறது, மேலும், வளர்ச்சியும் இருக்கின்றது.  நீங்களே பாருங்கள், அயோத்தியிலிருந்து ஜனகபுரி சென்றுவருவதை எளிதாக்க, ராமஜன்மப் பாதை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.  இப்போது பகவான் இராமனோடு தொடர்புடைய இடங்கள் இராமாயணச் சுற்றோடு இணைக்கப்பட்டு வருகின்றன.  அது மட்டுமல்ல, இராமாயண ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது.  புத்தச் சுற்று மீதும் பணிகள் நடந்து வருகின்றன.  இதோடு கூட, குஷிநகரில் சர்வதேச விமான நிலையமும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.  கர்த்தார்புர் சாஹிப் இடைவழியும் அமைக்கப்பட்டாகி விட்டது.  அதே போல, ஹேம்குண்ட் சாஹிபின் தரிசனத்தை எளிமையாக்கவும், ரோப்வேயும் அமைக்கப்பட்டு வருகின்றது.  உத்தராகண்டில் சார்தாம் சாலை பெருந்திட்டத்தின் மீதும், விரைவாகப் பணிகள் நடக்கின்றன.  பகவான் விட்டலுடைய, கோடிக்கணக்கான பக்தர்களின் ஆசிகளோடு, ஸ்ரீசந்த் ஞானேஸ்வர் மஹாராஜ் பால்கீ பாதை, மேலும் புனிதர் துக்காராம் மஹாராஜ் பால்கீ பாதை தொடர்பான, பணிகள், சில வாரங்கள் முன்பே தொடங்கி விட்டது. 

நண்பர்களே, கேரளத்திலே, குருவாயூர் கோயிலாகட்டும், அல்லது தமிழ்நாட்டிலே, காஞ்சிபுரம் வேளாங்கண்ணி, தெலங்கானாவின் ஜோகூலாம்பா தேவி கோயிலாகட்டும், அல்லது வங்காளத்தின் பேலூர் மடம், அல்லது குஜராத்தின் துவாரகையாகட்டும்.  அல்லது அருணாச்சல் பிரதேசத்தின் பரசுராமர் நீர்நிலை.  தேசத்தின் பல்வேறு மாநிலங்களிலே, நமது நம்பிக்கை மற்றும் கலாச்சாரத்தோடு தொடர்புடைய, பல புனிதத் தலங்களிலே, முழு பக்தி உணர்வோடு, பணிகள் நடந்திருக்கின்றன நடந்தேறி வருகின்றன. 

சகோதர சகோதரிகளே, நம்முடைய பாரதம், தொலைந்து போன தனது பாரம்பரியத்தை, மீட்டெடுத்துக் கொண்டிருக்கின்றது.  இங்கே காசியிலே, அன்னை அன்னபூரணியே ஆட்சி செலுத்துகின்றாள்.  எனக்கு சந்தோஷமாக இருக்கிறது, காசியிலிருந்து களவாடப்பட்ட, அன்னை அன்னபூரணியின் விக்ரகம், ஒரு நூற்றாண்டுக்கால காத்திருப்புக்குப் பிறகு 100 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது மீண்டும் காசியிலே நிறுவப்பட்டு விட்டது.  அன்னை அன்னபூரணியின் கிருபையால், கொரோனாவின் கடுமையாக காலகட்டத்தில், தேசம் தனது உணவுக் களஞ்சியத்தைத் திறந்து விட்டது.  எந்த ஏழையும் பட்டினியோடு உறங்கக் கூடாது, என்பதிலே கருத்தாக இருந்தோம்.  ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. 

நண்பர்களே, எப்போதெல்லாம், நாம் பகவானை தரிசனம் செய்கின்றோமோ, கோயிலுக்கு வருகிறோமோ, பலவேளைகளில், கடவுளிடம் வேண்டிக் கொள்கிறோம்.  சில உறுதிப்பாடுகளை மனதில் செய்தும் செல்கின்றோம்.  என்னைப் பொறுத்த மட்டிலே, மக்களாகிய அனைவரும், கடவுளின் ரூபங்கள்.  என்னைப் பொறுத்த மட்டிலே, ஒவ்வொரு குடிமகனும், ஈசனின் அம்சங்களே ஆவர்.  எப்படி மக்கள் அனைவரும், இறைவனிடம் சென்று வேண்டிக் கொள்கிறார்களோ, எப்படி நான் உங்களை இறைவனாகக் கருதுகிறேனோ, மக்களாகிய உங்களை ஈசனாகக் காண்கிறேனோ, அதனால் நானின்று, உங்களிடம் வேண்டிக் கொள்ள விரும்புகிறேன்.  நான் உங்களிடத்தில் சிலதை வேண்டுகிறேன்.  நான் உங்களிடத்திலே எனக்காக அல்ல, நம்முடைய தேசத்திற்காக, மூன்று உறுதிப்பாடுகளை வேண்டுகிறேன்.  மறந்து விடாதீர்கள்.  மூன்று மனவுறுதிகளை வேண்டுகிறேன்.  நான் இதை பாபாவின் புண்ணிய பூமியிலிருந்து வேண்டுகிறேன்.  முதலாவதாக, தூய்மை.  இரண்டாவதாக, உருவாக்கம்.  மூன்றாவது தற்சார்பு பாரதத்திற்காகத் தொடர் முயற்சிகள்.  தூய்மை, வாழ்க்கை முறையாகிறது.  தூய்மை, ஒழுங்குமுறையாகிறது.  இது தன்னோடு கூட, கடமைகளின் ஒருமிகப்பெரிய தொடரைக் கொண்டு வருகிறது.  பாரதம் எத்தனை வளர்ச்சி அடைந்தாலுமே, தூய்மையாக இல்லையென்றால், அப்போது…. நம்மால், முன்னேற்றம் காண்பது கடினமாகி விடும்.  இந்தத் திசையில் நாம் நிறைய முன்னேறியிருக்கிறோம்.  ஆனால் நாம், நமது முயற்சிகளை மேலும் அதிகரிக்க வேண்டும்.  கடமையுணர்வோடு கூடிய உங்களுடைய ஒரு சின்ன முயல்வு, தேசத்திற்கு பேருதவியைப் புரியும்.  இங்கே பனாரசிலும் கூட, நகரத்திலே, படித்துறைகளிலே, தூய்மையை நாம், ஒரு புதிய நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.  கங்கையன்னையின் தூய்மைக்காக, உத்தராக்கண்டிலிருந்து வங்காளம் வரை, எத்தனையோ முயல்வுகள் நடந்து வருகின்றன.  நமாமி கங்கே இயக்கத்தின் வெற்றி தொடரட்டும்.  இதன் பொருட்டு, நாம் விழிப்போடு, தொடர்ந்து பணியாற்றி கொண்டே வர வேண்டும். 

நண்பர்களே, அடிமைத்தனத்தின் நீண்ட காலகட்டம், எந்த அளவுக்கு நமது மனோபலத்தை, தகர்த்திருக்கிறது என்றால், நாம், நம்முடைய உருவாக்கத்தின் மீதே நம்பிக்கையற்று இருக்கிறோம்.  இன்று, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான இந்தக் காசியிலிருந்து, நாட்டுமக்கள் ஒவ்வொருவருக்கும் நான் அறைகூவல் விடுக்கிறேன்.  முழுத் தன்னம்பிக்கையோடு, உருவாக்குங்கள்.  நூதனமாகச் செய்யுங்கள்.  நூதனமான செயல்முறையைக் கையாளுங்கள்.  பாரதத்தின் இளைஞர்கள், கொரோனாவின் இந்தக் கடினமான காலத்தில், நூற்றுக்கணக்கான ஸ்டார்ட் அப்புகளை உருவாக்க முடிகின்றது, இத்தனை சவால்களுக்கு இடையேயும் கூட, நாற்பதிற்கும் மேற்பட்ட, யூனிகார்ன்களை உருவாக்க முடிகின்றது, இதுவுமே கூட, எதையும் சாதிக்க முடியும் என்பதைக் காட்டுகிறது.  நீங்களே சிந்தியுங்கள், ஒரு யூனிகார்ன் அதாவது, ஸ்டார்ட் அப், கிட்டத்தட்ட, 7000 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமானமுடையது, அதுவும் கடந்த, ஒன்று ஒன்றரை ஆண்டுகள் முன்பு உருவானது.  இத்தனை குறைந்த காலத்திலே.  இதுவரை காணாதது.  ஒவ்வொரு இந்தியனும் எங்கே இருந்தாலும், எந்தத் துறையிலே இருந்தாலும், தேசத்திற்க்குப் புதிதாகப் புரிய, முயல்வுகள் மேற்கொள்வார்.  அப்போது தான், புதிய பாதைகள் திறக்கும், புதிய பாதைகள் உருவாகும்.  நாம் ஒவ்வொரு புதிய இலக்கையும் அடைந்தே தீருவோம். 

சகோதர சகோதரிகளே, நாம் மேற்கொள்ள வேண்டிய, இன்றைய மூன்றாவது உறுதிப்பாடு,  தற்சார்பு பாரதத்தின் பொருட்டு, நமது முயற்சிகளை மேலும் முனைப்பாக்க.  இது சுதந்திரத்தின் அமிர்தகாலம்.  நாடு சுதந்திரம் அடைந்த 75ஆம் ஆண்டிலே இருக்கிறோம்.  என்று பாரதம், தான் சுதந்திரம் அடைந்ததன் 100 ஆண்டுகளைக் கொண்டாடுமோ, அன்றைய பாரதம் எப்படி இருக்க வேண்டும், இதன் பொருட்டு, நாம் இப்போதிலிருந்து பணிகளை ஆற்றத் தொடங்க வேண்டும்.  இதற்கு முக்கியத் தேவை, நாம் தற்சார்பு உடையவர்களாக ஆதல்.  நம் நாட்டின் தயாரிப்புக்கள் குறித்துப் பெருமிதம் கொள்ளும் போது,  உள்ளூர் பொருட்களுக்காக நாம் குரல் கொடுக்கும் போது, நாம் எந்தப் பொருட்களை வாங்குகிறோமோ, அவற்றைத் தயாரிப்பதில், ஏதோ ஒரு இந்தியரின் வியர்வை சிந்தப்பட்டிருக்கிறதோ, இந்த வகையில் இந்த இயக்கத்திற்கு உதவுவோம்.  அமிர்த காலத்திலே, பாரதம், 130 கோடி நாட்டுமக்களின், முயற்சிகளால், அனைவரின் முயற்சிகளால், முன்னேறி வருகின்றது.  மஹாதேவரின் கிருபையால், ஒவ்வொரு பாரதவாசியின் முயற்சிகள் காரணமாக, தற்சார்பு பாரதம் என்ற நமது கனவு மெய்யாவதைக் கண்டே தீருவோம்.  இந்த நம்பிக்கையோடு, நான் பாபா விசுவநாதரின், அன்னை அன்னபூரணியின், காசியின் காவலனின், மேலும் அனைத்து தேவி தேவர்களின் திருவடிகளிலே, ஒருமுறை மீண்டும் வீழ்ந்து வணங்குகிறேன்.  இத்தனை பெரிய எண்ணிக்கையிலே, தேசத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும், பூசனைக்குரிய ஆன்றோர் சான்றோர் வந்திருக்கின்றார்கள்.  இது நமக்கெல்லாம், என்னைப் போன்ற எளிய குடிமகனுக்கு, பெரும்பேற்றினை அளிக்கும் கணம்.  நான் அனைத்துப் பெரியோருக்கும், அனைத்துப் புனிதர்கள் மஹாத்மாக்களுக்கும், தலைவணங்கி, இதயபூர்வமாக, பணிகிறேன், வணங்குகிறேன்.  இன்று நான், காசிவாசிகள் அனைவருக்கும், நாட்டுமக்களுக்கும், மீண்டும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன், பலப்பல நல்வாழ்த்துக்களை அளிக்கிறேன், ஹரஹர மஹாதேவ்!!    

  • ஒலிபரப்பு: ஆலிண்டியா ரேடியோ, சென்னை வானொலி நிலையம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe