
பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் கரிகிபாடி நரசிம்ஹாராவுக்கு பத்மஸ்ரீ விருது!
-> ராஜி ரகுநாதன், ஹைதராபாத்
குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை இரவு பத்ம விருதுகளை அறிவித்துள்ளது. ஆந்திராவை சேர்ந்த மூவர் பத்மஸ்ரீ பெற்றனர்.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 128 பேர் பத்ம விருதுகளைப் பெற்றுள்ளனர். நான்கு பத்ம விபூஷண், 17 பத்ம பூஷன் மற்றும் 107 பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன.
ஆந்திராவை சேர்ந்த மூவர் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளனர். இலக்கியம் மற்றும் கல்வித் துறையைச் சேர்ந்த புகழ்பெற்ற ஆன்மீக சொற்பொழிவாளர் ஸ்ரீகரிகிபாடி நரசிம்ஹா ராவ், கலைத் துறையைச் சேர்ந்த கோசவீடு ஷேக் ஹசன் (மரணத்திற்குப் பின்), மருத்துவத் துறையைச் சேர்ந்த டாக்டர் சுங்கர வெங்கட ஆதிநாராயண ராவ் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்றனர்.
ஸ்ரீகரிகிபாடி நரசிம்ஹா ராவு:
இலக்கியம் மற்றும் கல்வி என்ற பிரிவில் பத்மஸ்ரீ விருது பெற்ற ஸ்ரீகரிகிபாடி நரசிம்ஹாராவ் பற்றி தெலுங்கு மொழி பேசுபவர்களில் தெரியாதவர்கள் இல்லை எனலாம். தினமும் காலையும் மாலையும் டிவியில், எப்போதும் மேடைகளில், தொடர்ந்து யூடியூபில் தோன்றி ஆன்மீக உபன்யாசம் மட்டுமேயின்றி மனித வள மேம்பாடு குறித்தும் ஆளுமை வளர்ச்சி குறித்தும் சொற்பொழிவாற்றி வருகிறார். அனைத்து தரப்பு மக்களும் அவருடைய உற்சாகமான, சரளமான, நகைச்சுவை இழையோடும் உரைகளைக் கேட்க காத்திருப்பர்.
கரிகிபாடி நரசிம்ஹா ராவு அவதானம் செய்வதில் மிகச் சிறந்தவர். ஒரு மகா சஹஸ்ராவதனமும் நூற்றுக்கணக்கான அஷ்டாவதானங்களும் செய்துள்ளார். முதல் அவதானம் 1992 விஜயதசமி அன்று செய்தார். 1996 ஆம் ஆண்டு காக்கிநாடாவில் 1,116 ப்ருச்சகர்களுடன் (கேள்வி கேட்பவர்கள்) 21 நாட்கள் அவதானம் நிகழ்த்தினார். 2009ல் எட்டு கம்ப்யூடர்களோடு ஹைடெக் அவதானம் செய்தார். ஆயிரக்கணக்கான எபிசோடுகள் டிவி சேனல்களில் இலக்கியம் மற்றும் ஆன்மீகம் பற்றி சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். 14 நூல்கள் எழுதியுள்ளார். அவற்றில் சாகர கோஷம் என்ற கவிதை நூல் மிகப் புகழ் பெற்றது.
கரிகிபாடி நரசிம்ஹா ராவு செப்டம்பர் 14, 1958 அன்று மேற்கு கோதாவரி மாவட்டம், பெண்டபாடு மண்டலம், போடபாடு அக்ரஹாரத்தில் வெங்கட சூர்யநாராயணா மற்றும் வெங்கட ரமணம்மா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். கரிகிபாடி எம்.ஏ, எம்ஃபில், பிஎச்டி முடித்தார். சுமார் 30 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் மனைவி திருமதி சாரதா. கரிகிபாடி நரசிம்ஹாராவு தன் இரண்டு மகன்களுக்கும் பிரபல எழுத்தாளர்களான ஸ்ரீஸ்ரீ மற்றும் குரஜாட அப்பாராவு ஆகியோரின் பெயரைச் சூட்டி இலக்கியத்தின் மீதான தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.
கரிகிபாடி நம் நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பல அவதானங்களும் பிரவசனங்களும் செய்துள்ளார். மிக அருமையான பேச்சாளர். வாழ்க்கை, இலக்கியம், கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் பல தலைப்புகளில் இவரது சொற்பொழிவுகள் கிடைக்கின்றன.
ஆசிரியராகப் பணியைத் தொடங்கியதில் இருந்து பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார். பிரவசன கிரீட்டி, அமெரிக்கன் அவதான பாரதி, தாரண பிரம்ம ராக்ஷசுடு (1997), சஹஸ்ரபாரதி (1996), அவதான சாரதா (1995), சதாவதான கீஷ்பதி (1994), சதாவதான கலா பிரபூர்ணா என்பவை அவற்றில் சில.
கோசவீடு ஷேக் ஹசன்:
புகழ்பெற்ற இந்து கோவில் பத்ராசலத்தில் ஆஸ்தான கலைஞராக பணியாற்றிய நாதஸ்வர கலைஞர் கோசவீடு ஷேக் ஹசன், மத நல்லிணக்கத்தின் அடையாளமாக இருந்தார். அவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது. ஷேக் ஹாசன் மரணத்திற்குப் பின் இந்த விருதைப் பெற்றார்.
ஆதிநாராயண ராவு:
போலியோ ஒழிப்புப் பணியில் முக்கிய பங்காற்றி, ஏழைகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவத் துறையில் புகழ்பெற்ற எலும்பு மூட்டு மருத்துவ நிபுணரான டாக்டர் சுங்கர ஆதிநாராயண ராவ் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். டாக்டர் ஆதிநாராயண ராவ் ஒரு எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர். மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தில் பிறந்தவர். விசாகப்பட்டினத்தில் குடியேறிய இவர் பல்வேறு தேசிய விருதுகளைப் பெற்றவர். ராணி சந்திரமணி தேவி மருத்துவமனையின் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு டாக்டர் ஆதிநாராயண ராவு நண்பர்களுடன் சேர்ந்து விசாகப்பட்டினத்தில் பிரேமா மருத்துவமனையை நிறுவினார்.
வெற்றி பெற்றவர்களுக்கு கவர்னர், முதல்வர் வாழ்த்து தெரிவித்தனர். 2022 ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது வென்றவர்களுக்கு ஆளுநர் பிஸ்வ பூஷன் ஹரிசந்தன் வாழ்த்து தெரிவித்தார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மூன்று முக்கியப் பிரமுகர்கள் இந்த மதிப்புமிக்க கௌரவத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஆந்திர மக்களுக்குப் பெருமை அளிப்பதாகக் கூறினார்.
விருதாளர்களுக்கு ஆந்திர முதல்வர் ஒய்.எஸ் ஜெகன் மோகன் ரெட்டி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு அந்தந்த துறைகளில் அவர்கள் ஆற்றிய பங்களிப்பையும் பாராட்டினார். வெற்றி பெற்றவர்களுக்கு ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண், டிடிபி தேசிய பொதுச்செயலாளர் நாரா லோகேஷ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.