
ஐபிஎல் 2022 – 1 மே 2022 இரண்டு ஆட்டங்கள்
K.V. பாலசுப்பிரமணியன்
நேற்று, மே மாதம் முதல் நாள் இரண்டு ஆட்டங்கள் நடந்தன. முதல் ஆட்டம் லக்னோ, டெல்லி அணிகளுக்கிடையே மும்பை வான்கடே கிரிக்கட் மைதானத்தில் நடந்தது. இரண்டாவது ஆட்டம் சென்னை அணிக்கும் சன்ரைசர்ஸ் அணிக்கும் இடையே புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
முதல் ஆட்டம் லக்னோ VS டெல்லி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (195/3, கே.எல். ராகுல் 77, தீபக் ஹூடா 52, ஷர்துல் தாகூர் 3/40) டெல்லி அணியை (189/7, மார்ஷ் 37, பந்த் 44, போவல் 35, அக்சர் படேல் 42*, மொஹிசின் கான் 4/16) 6 ரன் வித்தியாசத்தில் வென்றது.
டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் மட்டையாட முடிவுசெய்தது. தொடக்க வீரர்கள் டி காக், ராகுல் இருவரும் மிக நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். டி காக் 4.2ஆவது ஓவரில் 23 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த விக்கட்டிற்கு ராகுலும் ஹூடாவும் 95 ரன்கள் சேர்த்தனர். ஹூடா 15ஆவது ஓவரிலும், ராகுல் 19ஆவது ஓவரிலும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் மூன்று விக்கட் இழப்பிற்கு லக்னோ அணி 195 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து ஆடவந்த டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் ப்ருத்வி ஷா, வார்னர் இருவரும் இரண்டாவது ஓவரிலும் மூன்றாவது ஓவரிலும் ஆட்டமிழந்தனர். ரிஷபும் மார்ஷும் வேகமாக ரன் சேர்த்தனர். ஆனால் மார்ஷ், லலித் யாதவ், ரிஷப் ஆகிய மூவரும் விரைவில் ஆட்டமிழந்தனர். ரிஷப் உடன் சேர்ந்து விளையாடி ரன் சேர்த்த போவல் 16.1 ஓவரில் ஆட்டமிழந்தார். அப்போது 23 பந்துகளில் 50 ரன் எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் டெல்லி வீரர்களால் 189 ரன் மட்டுமே அடிக்க முடிந்தது. எனவே ஆறு ரன் வித்தியாசத்தில் டெல்லி அணியை லக்னோ அணி வென்றது.
இரண்டாவது ஆட்டம் சென்னை vs சன்ரைசர்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (202/2, கெய்க்வாட் 99, கான்வே 85, நடராஜன் 2/42) சன்ரைசர்ஸ் அணியை (189/6, நிக்கோலஸ் பூரன் 64*, கேன் வில்லியம்ஸ் 47, அபிஷேக் ஷர்மா 39, முகேஷ் 4/46) 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி சென்னை அணியை மட்டையாடச் சொன்னது.
சென்னை அணியில் ப்ராவோ, ஷிவம் ஆடவில்லை. அவர்களுக்குப் பதிலாக கான்வே, சிமர்ஜீத் சிங் ஆடினார்கள். ரவீந்தர் ஜதேஜாவிற்குப் பதிலாக இன்றிலிருந்து அணித்தலைவர் தோனி. சென்னை அணியின் தொடக்க வீரர்கள் மெதுவாக ஆடத் தொடங்கினார்கள். முதல் ஐந்து ஓவரில் 31/0 எடுத்தனர். அதன் பின்னர் ஸ்கோரிங் வேகமெடுத்தது.
10ஆவது ஓவரில் 85/0; 15ஆவது ஓவரில் 153/0; 18ஆவது ஓவர் முடிவில் ருதுராஜ் கெய்க்வாட் 99 ரன்னில் (4 ஃபோர், 6 சிக்சர்) ஆட்டமிழந்தார். சன்ரைசர்ஸின் அனைத்து பந்துவீச்சாளர்களும் கெய்க்வாட், கான்வே ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. எப்போதும் சிறப்பாக பந்து வீசும் உம்ரான் மாலிக் இன்று 4 ஓவரில் 48 ரன் கொடுத்தார்.
எனவே சென்னை அணி 20 ஓவர் முடிவில் இரண்டு விக்கட் இழப்பிற்கு 202 ரன் எடுத்தது. 203 ரன் என்ற இமாலய இலக்கை சேஸ் செய்யத் தொடங்கிய சன்ரைசர்ஸ் அணி தொடக்கத்தில் மிகப் பிரமாதமாக ஆடியது. சென்னை அணி முதல் 50 ரன்களை அடிக்க 45 பந்துகள் ஆனது. ஆனால் சன்ரைசர்ஸ் அணி 29 பந்துகளில் 50 ரன் அடித்தது. அதன் பின்னர் ரன்ரேட் குறைய ஆரம்பித்தது. ஆறாவது ஓவரில் இரண்டு விக்கட்டுகள் அடுத்தடுத்து விழுந்தன.
ஆனால் கடைசி இரண்டு ஓவர்களில் அதாவது 12 பந்துகளில் 50 ரன் அடிக்கவேண்டியிருந்தது. நிக்கோலஸ் பூரன் மட்டையாளராக இருந்தார். அவரால் 50 ரன் அடிக்க முடியவில்லை. எனவே சென்னை அணி தனது மூன்றாவது வெற்றியைப் பெற்றது. நாலு ஓவர் வீசி, 46 ரன் கள் கொடுத்து 4 விக்கட் வீழ்த்திய சென்னை அணியின் முகேஷ் சௌத்ரி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
தோனி அணித்தலைவராக வந்ததும் அணி வெற்றி பெற்றுவிட்டது என தோனி ரசிகர்கள் குதிக்கப் போகிறார்கள். ஆனால் தொடக்க ஆட்டக்காரர்கள், முகேஷ் சௌத்ரி ஆகியோர் சிறப்பாக ஆடினர்; அதனால் அணி வென்றது.