தமிழில்: முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஆற்றிய உரை
25.07.2022
ஜோஹர். வணக்கம்.
இந்தியாவின் மிக உயரிய அரசியலமைப்புப் பதவிக்கு என்னைத் தேர்ந்தெடுத்ததற்காக அனைத்து நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் எனக்கு அளித்த வாக்கு, நாட்டின் கோடிக்கணக்கான குடிமக்களின் நம்பிக்கையின் வெளிப்பாடு.
இந்தியாவின் அனைத்து குடிமக்களின் நம்பிக்கைகள், அபிலாஷைகள் மற்றும் உரிமைகளின் அடையாளமான இந்த புனித பாராளுமன்றத்தில் இருந்து அனைத்து சக குடிமக்களையும் நான் பணிவுடன் வாழ்த்துகிறேன். உங்கள் பாசம், நம்பிக்கை மற்றும் ஆதரவு, எனது செயல்பாடுகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் எனக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.
‘ஆசாதி கா அம்ருத் மஹோத்சவ்’ கொண்டாடப்படும் முக்கியமான நேரத்தில் நாடு என்னை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்துள்ளது. இன்ன்னும் சில நாள்களில் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. நாடு சுதந்திரம் அடைந்து 50வது ஆண்டை கொண்டாடும் போது எனது அரசியல் வாழ்க்கை தொடங்கியது என்பது தற்செயல் நிகழ்வு.
இன்று, சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டில், இந்தப் புதிய பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியா தனது தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் முழு வீரியத்துடன் ஈடுபட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நேரத்தில் இந்தப் பொறுப்பு வழங்கப்படுவது எனது பெரும் பாக்கியம்.
சுதந்திர இந்தியாவில் பிறந்த நாட்டின் முதல் ஜனாதிபதியும் நான்தான். சுதந்திர இந்தியாவின் குடிமக்களிடமிருந்து நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இந்த அமிர்தகாலத்தில் நாம் வேகமாகச் செயல்பட வேண்டும்.
இந்த 25 ஆண்டுகளில், அமிர்தகாலத்தின் இலக்குகளை அடைவதற்கான பாதை இரண்டு உள்ளன. – சப்கா பிரயாஸ் அவுர் சப்கா கர்தவ்யா (அனைவரின் முயற்சி மற்றும் அனைவரின் கடமை). இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிய புதிய வளர்ச்சிப் பயணத்தை, நமது கூட்டு முயற்சியால், கடமைப் பாதையைப் பின்பற்றி மேற்கொள்ள வேண்டும்.
நாளை அதாவது ஜூலை 26 ஆம் தேதி கார்கில் விஜய் தினம் கொண்டாடுவோம். இந்த நாள் இந்திய ஆயுதப்படைகளின் வீரம் மற்றும் கட்டுப்பாடு ஆகிய இரண்டின் சின்னமாகும். இன்று, நாட்டின் ஆயுதப் படைகளுக்கும் மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் முன்கூட்டியே எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெரியோர்களே, தாய்மார்களே, நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒடிசாவில் உள்ள ஒரு சிறிய பழங்குடி கிராமத்திலிருந்து எனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினேன். நான் வந்த பின்புலத்திலிருந்து, தொடக்கக் கல்வி பெறுவது எனக்கு ஒரு கனவாக இருந்தது. ஆனால் எத்தனையோ தடைகள் வந்தாலும் என் மன உறுதி வலுப்பெற்று கல்லூரி செல்லும் எனது கிராமத்தின் முதல் மகளானேன்.
நான் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவன். வார்டு கவுன்சிலராக இருந்து இந்திய ஜனாதிபதியாக உயரும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இதுதான் ஜனநாயகத்தின் தாயான இந்தியாவின் மகத்துவம். தொலைதூர பழங்குடியினர் பகுதியில் ஏழை வீட்டில் பிறந்த மகள் இந்தியாவின் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியை அடைய முடியும் என்பது நமது ஜனநாயகத்தின் சக்திக்குக் கிடைத்த மரியாதை.
நான் ஜனாதிபதி பதவியை அடைந்தது எனது தனிப்பட்ட சாதனையல்ல, இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஏழையின் சாதனை. இந்தியாவில் உள்ள ஏழைகள் கனவுகளைக் கொண்டு அவற்றையும் நிறைவேற்ற முடியும் என்பதற்கு எனது தேர்தல் ஒரு சான்று.
மேலும் பல நூற்றாண்டுகளாக ஒதுக்கப்பட்டவர்களும், வளர்ச்சியின் பலன்கள் மறுக்கப்பட்டவர்களும், ஏழைகள், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகியோரின் பிரதிபலிப்பை என்னுள் பார்ப்பது எனக்கு மிகுந்த திருப்தி அளிக்கிறது.
என்னுடைய இந்தத் தேர்தலுக்கு நாட்டின் ஏழைகளின் ஆசீர்வாதம் இருக்கிறது. மேலும் இது நாட்டின் கோடிக்கணக்கான பெண்கள் மற்றும் மகள்களின் கனவுகளையும் திறனையும் பிரதிபலிக்கிறது. என்னுடைய இந்தத் தேர்தல், புதிய பாதைகளில் நடக்கத் தயாராக இருக்கும் இன்றைய இந்திய இளைஞர்களின் துணிச்சலைக் காட்டுகிறது.
இன்று நான் இத்தகைய முற்போக்கான இந்தியாவை வழிநடத்துவதில் பெருமைப்படுகிறேன். இன்று, இந்த நிலையில் பணிபுரியும் போது அவர்களின் நலன்கள் எனக்கு முதன்மையாக இருக்கும் என்று அனைத்து சக குடிமக்களுக்கும் குறிப்பாக இந்திய இளைஞர்கள் மற்றும் இந்திய பெண்களுக்கு உறுதியளிக்கிறேன்.
பெரியோர்களே, தாய்மார்களே,
உலகில் இந்திய ஜனநாயகத்தின் மாண்பைத் தொடர்ந்து வலுப்படுத்திய இந்தியக் குடியரசுத் தலைவர் பதவி எனக்கு முன்னால் உள்ளது. நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் முதல் ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் அவர்கள் வரை இந்த பதவியை அலங்கரித்துள்ளனர். இந்தப் பதவியுடன், இந்தப் பெரிய பாரம்பரியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொறுப்பையும் நாடு என்னிடம் ஒப்படைத்துள்ளது.
அரசியலமைப்பின் வெளிச்சத்தில், எனது கடமைகளை மிகுந்த நேர்மையுடன் நிறைவேற்றுவேன். என்னைப் பொறுத்தவரை, இந்தியாவின் ஜனநாயக-கலாச்சார இலட்சியங்கள் மற்றும் அனைத்து குடிமக்களும் எப்பொழுதும் எனது ஆற்றல் மூலமாக இருக்கும்.
பெரியோர்களே, தாய்மார்களே,
நமது சுதந்திரப் போராட்டம் ஒரு தேசமாக இந்தியாவின் புதிய பயணத்திற்கான வரைபடத்தை தயார் செய்திருந்தது. சுதந்திர இந்தியாவுக்கான பல இலட்சியங்களையும் சாத்தியங்களையும் வளர்த்தெடுத்த போராட்டங்கள் மற்றும் தியாகங்களின் தொடர்ச்சியான நீரோட்டமாக நமது சுதந்திரப் போராட்டம் இருந்தது.
பூஜ்ய பாபு, ஸ்வராஜ், சுதேசி, ஸ்வச்தா மற்றும் சத்தியாகிரகத்தை நாடி, இந்திய கலாச்சார இலட்சியங்களை உணர வழி காட்டினார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், நேருஜி, சர்தார் படேல், பாபாசாகேப் அம்பேத்கர், பகத் சிங், சுகதேவ், ராஜ்குரு, சந்திரசேகர் ஆசாத் போன்ற எண்ணற்ற ஆளுமைகள் தேசப் பெருமையை முதன்மையாக வைத்துக் கொள்ள கற்றுக் கொடுத்துள்ளனர்.
இராணி லக்ஷ்மி பாய், இராணி வேலு நாச்சியார், இராணி கெய்டின்லியு மற்றும் இராணி சென்னம்மா போன்ற பல துணிச்சலான பெண் சின்னங்கள் தேசத்தைப் பாதுகாப்பதிலும் கட்டியெழுப்புவதில் பெண் சக்தியின் பங்கை புதிய உச்சத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
சந்தால் புரட்சி, பைகா புரட்சி முதல் கோல் புரட்சி மற்றும் பில் புரட்சி வரை, இந்த புரட்சிகள் அனைத்தும் சுதந்திர போராட்டத்தில் பழங்குடியினரின் பங்களிப்பை வலுப்படுத்தியது. சமூக மேம்பாடு மற்றும் தேசபக்திக்காக ‘தர்தி ஆபா’ பகவான் பிர்சா முண்டா ஜியின் தியாகத்திலிருந்து நாங்கள் உத்வேகம் பெற்றோம்.
நமது சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடியின சமூகங்களின் பங்கிற்கு அர்ப்பணிக்கப்பட்ட பல அருங்காட்சியகங்கள் நாடு முழுவதும் கட்டப்படுவதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
பெரியோர்களே, தாய்மார்களே,
நாடாளுமன்ற ஜனநாயக நாடாக 75 ஆண்டுகளில், பங்கேற்பு மற்றும் ஒருமித்த கருத்து மூலம் முன்னேற்றம் என்ற உறுதியை இந்தியா முன்னெடுத்துச் சென்றுள்ளது. பன்முகத்தன்மைகள் நிறைந்த நம் நாட்டில், பல மொழிகள், மதங்கள், பிரிவுகள், உணவுப் பழக்கங்கள், வாழ்க்கை முறைகள் மற்றும் பழக்கவழக்கங்களை ஏற்றுக்கொண்டு ‘ஏக் பாரத் – ஷ்ரேஷ்ட பாரத்’ அதாவது ஒரே பாரதம்; உன்னத பாரதத்தின் தயாரிப்பில் நாம் ஈடுபட்டுள்ளோம்.
நமது சுதந்திரத்தின் 75வது ஆண்டில் தொடங்கும் இந்த அமிர்தகாலம், இந்தியாவிற்கு புதிய தீர்மானங்களின் காலமாகும். இன்று எனது நாடு உத்வேகம் பெற்றதையும், புதிய சிந்தனையுடன் இந்தப் புதிய சகாப்தத்தை வரவேற்கத் தயாராக இருப்பதையும் நான் காண்கிறேன். இன்று இந்தியா ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தை சேர்த்து வருகிறது.
கொரோனா தொற்றுநோயின் உலகளாவிய நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதில் இந்தியா காட்டிய திறன், உலகம் முழுவதும் இந்தியாவின் நம்பகத்தன்மையை மேம்படுத்தியுள்ளது. இந்தியர்களாகிய நாம் இந்த உலகளாவிய சவாலை நமது முயற்சிகளால் எதிர்கொண்டது மட்டுமல்லாமல், உலகிற்கு புதிய தரங்களையும் அமைத்துள்ளோம். சில நாட்களுக்கு முன்பு, இந்தியா 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தி சாதனை படைத்துள்ளது.
இந்த முழுப் போரிலும் இந்திய மக்கள் காட்டிய பொறுமை, தைரியம் மற்றும் ஒத்துழைப்பு ஒரு சமூகமாக நமது வளர்ந்து வரும் வலிமை மற்றும் உணர்திறன் ஆகியவற்றின் அடையாளமாகும். இந்த இக்கட்டான சூழ்நிலைகளில் இந்தியா தன்னைக் கவனித்துக்கொண்டது மட்டுமல்லாமல் உலகிற்கு உதவியது.
கொரோனா தொற்றுநோயால் உருவாக்கப்பட்ட சூழலில், இன்று உலகமே இந்தியாவை ஒரு புதிய நம்பிக்கையுடன் பார்க்கிறது. உலகப் பொருளாதார ஸ்திரத்தன்மை, விநியோகச் சங்கிலியின் எளிமை மற்றும் அமைதி ஆகியவற்றை உறுதி செய்வதில் சர்வதேச சமூகம் இந்தியாவிடம் அதிக நம்பிக்கை வைத்துள்ளது.
வரும் மாதங்களில், ஜி-20 குழுமத்தை அதன் தலைவராக இந்தியா நடத்த உள்ளது. இந்தக் குழுவில், உலகின் இருபது பெரிய நாடுகள் இந்தியாவின் தலைமையில் உலகப் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்யும்.
இந்தியாவில் இந்த ஆய்விலிருந்து வெளிவரும் முடிவுகள் மற்றும் கொள்கைகள் வரவிருக்கும் தசாப்தங்களின் திசையை தீர்மானிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
பெரியோர்களே, தாய்மார்களே,
பத்தாண்டுகளுக்கு முன், ராய்ராங்பூரில் உள்ள ஸ்ரீ அரவிந்தோ ஒருங்கிணைந்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. சில நாட்களுக்குப் பிறகு, ஸ்ரீ அரவிந்தரின் 150வது பிறந்த நாளைக் கொண்டாடுவோம். கல்வி பற்றிய ஸ்ரீ அரவிந்தரின் எண்ணங்கள் என்னைத் தொடர்ந்து ஊக்கப்படுத்துகின்றன. பொதுப் பிரதிநிதியாகவும், அதன்பின் ஆளுநராகவும் பல்வேறு பதவிகளில் பணியாற்றிய எனக்கு கல்வி நிறுவனங்களுடன் தீவிர தொடர்பு இருந்தது.
நாட்டின் இளைஞர்களின் உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். நாட்டின் இளைஞர்கள் முன்னேறும்போது, அவர்கள் தங்கள் தலைவிதியை உருவாக்குவது மட்டுமல்லாமல், நாட்டின் தலைவிதியையும் வடிவமைக்கிறார்கள் என்று நமது மதிப்பிற்குரிய அடல்ஜி கூறுவார். இன்று அது நிறைவேறுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.
ஒவ்வொரு துறையிலும் நாடு முன்னேறிச் செல்கிறது – ‘உள்ளூருக்கான குரல்’ முதல் ‘டிஜிட்டல் இந்தியா’ வரை – இன்றைய இந்தியா, உலகத்துடன் இணைந்து அணிவகுத்துச் செல்கிறது, ‘தொழில்துறை புரட்சி நான்கு புள்ளி ஓ’ க்கு தயாராக உள்ளது.
சாதனை எண்ணிக்கையிலான ஸ்டார்ட்-அப்களை உருவாக்குவதிலும், எண்ணற்ற கண்டுபிடிப்புகளிலும், தொலைதூரப் பகுதிகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதிலும் இந்திய இளைஞர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக, பெண்கள் அதிகாரமளிப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் வகுக்கப்பட்ட கொள்கைகளால் நாட்டில் ஒரு புதிய ஆற்றல் புகுத்தப்பட்டுள்ளது.
நமது சகோதரிகள் மற்றும் மகள்கள் அனைவரும் மேலும் மேலும் அதிகாரம் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அதனால் அவர்கள் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒவ்வொரு துறையிலும் தொடர்ந்து தங்கள் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்.
நீங்கள் உங்கள் சொந்த எதிர்காலத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல், எதிர்கால இந்தியாவிற்கு அடித்தளமிடுகிறீர்கள் என்பதை நம் நாட்டின் இளைஞர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன்.
நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் உங்களுக்கு எனது முழு ஒத்துழைப்பையும் எப்போதும் வழங்குவேன்.
பெரியோர்களே, தாய்மார்களே,
வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் என்பது தொடர்ந்து முன்னேறிச் செல்வதைக் குறிக்கிறது, ஆனால் சமமாக முக்கியமானது ஒருவரின் கடந்த காலத்தைப் பற்றிய விழிப்புணர்வு. இன்று, நிலையான வளர்ச்சி பெறும் உலகத்தைப் பற்றி பேசும்போது, இந்தியாவின் பண்டைய மரபுகள் மற்றும் நிலையான வாழ்க்கை முறையின் பங்கு மிகவும் முக்கியமானது.
பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கையோடு இயைந்த பழங்குடி மரபில் பிறந்தவன் நான். என் வாழ்வில் காடுகள் மற்றும் நீர்நிலைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளேன். இயற்கையிலிருந்து தேவையான வளங்களை எடுத்துக் கொண்டு, இயற்கைக்கு சமமான மரியாதையுடன் சேவை செய்கிறோம். இந்த உணர்திறன் இன்று உலகளாவிய இன்றியமையாததாகிவிட்டது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் இந்தியா உலக நாடுகளுக்கு வழிகாட்டி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
பெரியோர்களே, தாய்மார்களே,
என் வாழ்க்கையில் இதுவரை பொது சேவை மூலம் தான் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்தேன். ஸ்ரீ ஜகந்நாத் க்ஷேத்திரத்தின் புகழ்பெற்ற கவிஞரான பீம் போய் ஜியின் கவிதையிலிருந்து ஒரு வரி உள்ளது-
“மோ ஜீபன் பச்சே நர்கே படி தௌ, ஜகதோ உத்தர் ஹேயு”.
அதாவது உலக நலனுக்காக பாடுபடுவது சொந்த நலன்களை விட மிக பெரியது.
இந்த உலக நலனுடன், நீங்கள் அனைவரும் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிலைநாட்ட முழு அர்ப்பணிப்புடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்ற நான் எப்போதும் தயாராக இருப்பேன். பெருமை மிக்க மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமையின் பாதையில் முன்னேறுவோம்.
நன்றி, ஜெய் ஹிந்த்!