
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் பாமூரு பகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு சாலை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரளாகக் குவிந்தனர். இதில் நெரிசலில் சிக்கி சிலர் கால்வாயில் விழுந்து படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் சிகிச்சைப் பலனின்றி 8 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திரபாபு நாயுடு நேரில் சென்று சந்தித்தார். அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். ஆந்திர மாநிலம் கந்துகுருவில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
காயமடைந்த கட்சித் தொண்டர்களை மருத்துவமனையில் சென்று சந்தித்த சந்திரபாபு நாயுடு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு அறிவித்தார். மேலும் அவர்களின் குழந்தைகளின் கல்விக்கு என்டிஆர் அறக்கட்டளை நிதியளிக்கும் என்றும் கூறினார். இந்த நிலையில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் நடந்த அசம்பாவிதத்தால் வேதனை அடைந்தேன். உயிரிழந்த குடும்பங்களுக்கு அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். உதவித் தொகையாக, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





