
ஆளுநர் ரவி மீது புகார் தெரிவித்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அனுப்பிய கடிதம், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் உள்துறை அமைச்சகம் முடிவு எடுக்கும் என்று கூறப்படுகிறது.
தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி மீது, தொடக்கம் முதலே தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆளும் அமைச்சர்கள், திமுக.,வினர் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றனர். சட்டமன்றத்தில் சட்டவிரோத தீர்மானம் நிறைவேற்றுவது, சட்டமன்றத்தில் இருந்து ஆளுநர் வெளியேறிய போது போய்யா என்று அநாகரிகமாக சைகை காட்டுவது என கீழ்த்தரமான அரசியலில் ஈடுபட்டு வரும் திமுக.,வினர், ஆளுநர் அரசியல் பேசுகிறார் என்று கூறி அரசியல் செய்து வருகின்றனர். இந்நிலையில், தங்கள் கட்சியின் கொள்கைக்கு முரணாக ஆளுநர் பொது மேடைகளில் பேசுகிறார் என்று, ஆளுநரையும் திமுக.,வின் உறுப்பினர் என்ற அளவுக்கு நினைத்துக் கொண்டு, ஆளுநர் மீது புகார் தெரிவித்து, ஒரு புகார்க் கடிதத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார்.
அந்தக் கடிதத்தில், அரசின் கொள்கைகளுக்கு முரணாகவும், அரசின் பணிகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையிலும் செயல்படும் ஆளுநர் ரவி, பதவியில் இருந்து நீக்கப்படத் தகுதியானவர் என தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்ட அந்தக் கடிதத்தை குடியரசுத் தலைவர் முழுமையாக படித்துப் பார்த்ததாகவும், அதன்பின், அக்கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. .
இந்தக் கடிதத்தின் மீது, மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு எடுக்கும் என்று தெரிகிறது. இதனிடையே ஆளுநர் ரவி ஒரு வார கால பயணமாக தில்லியில் தங்கி இருக்கிறார். தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகளையும் தமிழக அரசுக்கு தான் அனுப்பிய கடித விவரங்களையும் குடியரசுத் தலைவர் மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் ஏற்கெனவே பகிர்ந்து கொண்டுள்ளார். தமிழகத்தில் நிலவும் விவரங்களை அனுப்பியும் வைத்திருக்கிறார். இந்த நிலையில் தான் இரு தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தம் அரசு பதவி போனாலும் பரவாயில்லை இதை சொல்ல வேண்டி இருக்கிறது என்ற ரீதியில் ஒரு கருத்தை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.