ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டி
பதிநான்காம் நாள்
ஆப்கானிஸ்தான் vs நியூசிலாந்து
சென்னை – 18.10.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
நியூசிலாந்து அணி (288/6, க்ளன் பிலிப்ஸ் 71, டாம் லேதம் 68, வில் யங் 54, நவீன் 2/48, அஸ்மத்துல்லா 2/56) ஆப்கானிஸ்தான் அணியை (34.4 ஓவரில் 139, ரஹ்மத் ஷா 36, அஸ்மத்துல்லா 27, லோக்கி ஃபெர்கூசன் 3/19, போல்ட் 2/18, சாண்ட்னர் 3/39) 149 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவா தலையா வென்ற ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை முதலில் மட்டையாடச் சொன்னது. கடந்த முறை கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியை வென்ற உற்சாகத்தோடு களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி இன்று நியூசிலாந்து அணியையும் வெல்லலாம் என்ற கனவுடன் விளையாடியது.
ஆனால் திறமை வாய்ந்த நியூசிலாந்து அணி அதற்கு இடம் கொடுக்கவில்லை. இன்றைய வெற்றியுடன் சேர்த்து, இதுவரை ஆடிய நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி எட்டு புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு வந்தது.
நியூசிலாந்து அணி ஆடியபோது 21ஆவது ஓவரில் 109/1 என்ற நல்ல நிலையில் இருந்து அடுத்த ஒன்பது பந்துகளில் 110/4 என்ற நிலைக்கு வந்தபோது, ஆப்கானிஸ்தான் கனவு நனவாகுமோ என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் டாம் லேதம், கிளன் பிலிப்ஸ் இருவரும் 144 ரன்னுக்கு ஜோடி போட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணியில் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமையவில்லை. மிட்சல் சாண்ட்னர் மற்றும் லோகி ஃபெர்கூசன் இருவரும் சிறப்பாகப் பந்துவீசினார்கள். 14 ரன்கள் மற்றும் 24 பந்துகள் இடைவெளியில் ஆப்கானிஸ்தான் ஐந்து விக்கட்டுகளை இழந்தது. இதனால் 34.4 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 139 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. எனவே நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில், நல்ல நெட் ரன் ரேட் விகிதத்தில் வென்றது.
கிளன் பிலிப்ஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை புனே நகரத்தில் இந்தியா வங்கதேசம் இடையேயான ஆட்டம் ஹடைபெறவுள்ளது.