அண்மையில் நடைபெற்ற டி20 போட்டிகளில் பங்கேற்று, உலகக் கோப்பையைக் கைப்பற்றிய இந்திய அணி வீரர்கள், பிரதமர் மோடியைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 2024ம் ஆண்டுக்கான ‘டி-20’ உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப் போட்டியில், இந்திய அணி, தென்ஆப்ரிக்க அணியை 7 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து, ‘சாம்பியன்’ பட்டம் வென்றது.
17 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். பிரதமர் மோடி, உடனடியாக இரவு வெகுநேரமென்றும் பாராமல், ஒரு வீடியோ வாழ்த்துச் செய்தி வெளியிட்டு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இந்நிலையில், ஜூலை 4 இன்று காலை, வெற்றிக் கோப்பையுடன் தில்லி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் இந்திய அணி வீரர்கள் டி20 உலகக் கோப்பையுடன் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துவாழ்த்துப் பெற்றனர். வட்ட வடிவில் நாற்காலிகளைப் போட்டு அவர்கள் அனைவருடனும் பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் உரையாடி, அவர்களது அனுபவங்களையும் உணர்ச்சிகரமான தருணங்களையும் கேட்டு மகிழ்ந்தார். தொடர்ந்து வீரர்கள் அனைவரும் பிரதமர் மோடியுடன் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
முன்னதாக, உலகக் கோப்பை ஒருநாள் தொடரில் இறுதிப்போட்டியில் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையைப் பெறாமல் போனது. அப்போது நேரில் வந்திருந்து அணி வீரர்களை பிரதமர் மோடி ஆறுதல் படுத்தி, விரைவில் வெற்றி பெறுவீர்கள் என்று நம்பிக்கை அளித்துப் பேசினார். அதன் பின்னர் சுமார் ஏழு மாத இடைவெளியில், டி20 உலகக் கோப்பை வெற்றி வீரர்களாக இந்திய அணியினர் பிரதமர் மோடியைச் சந்தித்து, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதன் பின்னர் இன்று மதியம் மும்பை வரும் இந்திய அணி வீரர்கள், மாலையில் மரைன் டிரைவ் பகுதியில் இருந்து வான்கடே மைதானம் வரை, திறந்தவெளி பஸ்சில் ஊர்வலமாக (ரோடு ஷோ) செல்ல உள்ளனர். இது குறித்து ரோஹித் சர்மா தனது எக்ஸ் சமூகத் தளப் பக்கத்தில் செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.
இன்று இரவில் வீரர்களுக்கு வான்கடே மைதானத்தில், அணி வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. தொடர்ந்து, பி.சி.சி.ஐ., சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ. 125 கோடி பரிசுத் தொகை அணியினருக்கு வழங்கப்பட உள்ளது.