புது தில்லி: பொய்ச் செய்தி வெளியிட்டால், பத்திரிகையாளர்களின் அங்கீகாரம் ரத்து செய்யப் படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. இது பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய நேரத்தில், மத்திய அரசு அந்த உத்தரவை ரத்து செய்தது.
பத்திரிகைகளில் வெளியானது பொய்ச் செய்தி என்கிற சந்தேகம் ஏற்பட்டால் அந்தச் செய்தி பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான செய்தி பொய் என்ற சந்தேகம் ஏற்பட்டால், நியுஸ் பிராட்காஸ்டர்ஸ் அசோசியேஷன் பரிசீலனைக்கு அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஒரு செய்தி, பொய்யானது என்று அளிக்கப்படும் புகாருக்கு உள்ளாகும் செய்தியை 15 நாட்களுக்குள் ஆய்வு செய்து பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா மற்றும் நியுஸ் பிராட்காஸ்டர்ஸ் அசோசியேஷன் முடிவை அறிவிக்க வேண்டும். ஒரு செய்தி பொய்யானதுதானா என்று ஆய்வுக்கு உட்பட்டிருக்கும் போது அந்த செய்தியை அளித்த பத்திரிகையாளர்களின் அரசு அங்கீகாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும்.
ஒரு செய்தி தவறானது அல்லது பொய்யானது என்பது உறுதிப்படுத்தப் பட்டால் அந்த செய்தியை வெளியிட்ட செய்தியாளரின் அங்கீகாரம் முதல் முறை 6 மாதங்களுக்கு சஸ்பென்ட் செய்யப்படும். இரண்டாவது மற்றும் மூன்றாவது முறையும் அதே செய்தியாளர் பொய்யான செய்தியை வெளியிட்டால், அவரது அரசு அங்கீகாரம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.
இப்படி மத்திய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இன்று புதிய அறிவிப்பை திடீரென வெளியிட்டது. இது பெரிய அளவில் இன்று காலை ஊடகங்களில் விவாதிக்கப் பட்டது.
இந்நிலையில், தவறான செய்தி வெளியிட்டால் செய்தியாளர் அங்கீகாரம் ரத்து என்ற ஆணை திரும்பப் பெறப் பட்டுள்ளதாக அமைச்சகம் கூறியது. மத்திய செய்தித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி வெளியிட்ட ஆணையை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
ஆங்கில மற்றும் இந்தி ஊடகங்கள் மட்டுமல்லாது, இந்தியாவில் பல்வேறு ஊடகங்களிலும் தவறான உள்நோக்கம் கொண்ட தகவல்கள் குறிப்பாக மத்திய அரசையும், பிரதமரையும் அவதூறு கிளப்பும் வகையில் செய்திகள் வெளியிடப் பட்டு வருகின்றன என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கலாம் என்று கருதப் படுகிறது.