சம்பல்பூர்: கட்டிய கணவன் கொடுத்த தொல்லை தாங்க முடியாமல், விவாகரத்து கோரிய மனைவியை ஒடிஸா நீதிமன்றத்திலேயே வைத்து வாளால் வெட்டிக் கொன்ற கணவரை போலீஸார் கைது செய்தனர்.
பீகார் மாநிலம், சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள சிந்தூர்பங் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் குமார் (24), அதே பகுதியைச் சேர்ந்த சஞ்ஜிதா சௌத்ரியை (18) காதலித்தார். இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பிறகுதான், கணவனின் தொல்லைகள் சஞ்சிதாவுக்கு தாங்க இயலாமல் போனது. 4 மாத திருமண வாழ்வு கசந்தது. சஞ்ஜிதா மீண்டும் தாய் வீட்டுக்கே திரும்பினார்.
அடுத்து, கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி ஒடிஸா குடும்ப நல நீதிமன்றத்தில் சஞ்ஜிதா மனு தாக்கல் செய்தார். ஆனால் ரமேஷ் குமாரோ, மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக நீதிமன்றத்தில் கூறினார். இதை சஞ்ஜிதா ஒப்புக் கொள்ளவில்லை.
இதனால் வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்துக்கு வரும் சஞ்ஜிதாவைக் கொல்ல திட்டமிட்டார் ரமேஷ்குமார். நேற்று தன் தாய் லலிதா சௌத்ரியுடன் நீதிமன்றத்துக்கு வந்த சஞ்ஜிதாவிடம், ரமேஷ் குமார் தன்னுடன் வருமாறு வற்புறுத்தினார். ஆனால், சஞ்சிதா மறுக்கவே, ஆத்திரமடைந்த ரமேஷ் குமார் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்தார்.
இதைக் கண்டு அதிர்ந்த சஞ்சிதா, நீதிமன்ற வளாகத்துக்குள் ஓடினார். விடாமல் துரத்திய ரமேஷ் குமார் அவரை மடக்கிப் பிடித்து வாளால் வெட்டினார். இதைத் தடுக்கச் சென்ற லலிதா சௌத்ரிக்கும் காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த சஞ்ஜிதாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்தார்.
மனைவியை நீதிமன்ற வளாகத்திலேயே வெட்டிக் கொன்ற ரமேஷ் குமார் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பரபரப்பு நிறைந்த நீதிமன்ற வளாகத்திலேயே இத்தகைய சம்பவம் நடந்தது அங்கிருந்தோருக்கு பலத்த அதிர்ச்சியை அளித்தது.