கேஜ்ரிவால் அலுவலகத்தில் சிபிஐ சோதனை இல்லை: அதிகாரி விளக்கம்

புது தில்லி:
தில்லி முதல்வர் அலுவலகத்தில் இன்று காலை சி.பி.ஐ திடீர் என சோதனை நடத்தியதாக செய்தி வெளியானது. இந்நிலையில், இதுகுறித்து சி.பி.ஐ. அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது முதல்வர் அலுவலகத்தில் சோதனையிடவில்லை. தில்லி தலைமை செயலகத்தின் மூன்றாம் மாடியில் உள்ள முதல்வரின் தலைமைச் செயலர் ராஜேந்தர் குமாரின் அலுவலகம் மற்றும் அவரது வீட்டிலேயே சிபிஐ சோதனை நடத்தப்பட்டிருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜேந்தர் குமார், பல்வேறு நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாக வந்த புகார்களை தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்றிருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் சிபிஐ விளக்கத்தை ஏற்க மறுத்து, கேஜ்ரிவால் இதுகுறித்து கூறும் போது சி.பி.ஐ பொய் சொல்லுகிறது. எனது அலுவலகத்தில்தான் சிபிஐ சோதனை நடத்துகிறது. சில கோப்புகளை எடுத்து பார்த்துள்ளனர். என்னிடம் எந்த கோப்பு வேண்டும் என்று கேட்டிருந்தால் நானே எடுத்து கொடுத்திருப்பேன் சி.பி.ஐ மூலம் பிரதமர் மோடி, தன்னை அரசியல் ரீதியாக பழிவாங்க நினைக்கிறார். இது அவருடைய கோழைத்தனத்தை காட்டுவதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.