ம.பி.யில் பஸ் ஆற்றில் கவிழ்ந்து 15 பேர் பலி

இடார்சி:

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பஸ் ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 15 பேர் உயிரிழந்தனர்.

ஹோஷானாபாத் மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த அந்த பஸ், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை திடீரென இழந்து, பாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோதியது. மோதிய வேகத்தில் ஆற்றுக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயம் அடைந்தனர்.

இன்று காலை அந்த தனியார் பஸ் இந்தூரில் இருந்து பராசியாவுக்குச் சென்றது என்றும், அப்போது இந்த விபத்து நேரிட்டதாகவும் கூறப்பட்டது. விபத்து நேரிட்ட பகுதியில் மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள கிராம மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் சிலரின் நிலை மோசமாக உள்ளது. விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.