சபரிமலை விவகாரம் கேரளத்தில் பற்றி எரிகிறது. உச்ச நீதிமன்றமும், கேரள அரசும் சேர்ந்து, கேரளத்தின் அமைதியைக் குலைத்துக் கொண்டிருக்கின்றன. மக்களின் உணர்வுகளில் விளையாடும் சட்டம் நீதி அதிகார மையத்தின் செயல்பாடுகளால் இப்போது கேரளத்தின் சட்டம் ஒழுங்கு அமைதிக்கு பங்கம் நேர்ந்திருக்கிறது.
சபரிமலை தீர்ப்பு விவகாரத்தின் பின்னே அரசியல் சூது நிறைந்திருக்கும் நிலையில், அதனைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் ஹிந்துக்கள். தங்கள் மத நடைமுறைகளுக்கு மட்டும் நெருக்கடி ஏற்படுத்தப் படுவது கண்டு, கொதித்துப் போய் இப்போது களத்தில் குதித்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் இரு வருடங்களுக்கு முன்னர் தமிழக ஹிந்துக்களின் பாரம்பரிய விளையாட்டு மற்றும் ஆன்மிக வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு, கிறிஸ்துவ அமைப்பு பீட்டா மற்றும் அது சார்ந்த சிந்தனையுள்ளவர்களால் உச்ச நீதிமன்றத்தில் தடை ஏற்படுத்தப் பட்ட போது, அதற்காக தெருவில் இறங்கி போராடினார்கள் ஹிந்துக்கள். தொடர்ந்து தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் அளவுக்கு செயல்பட்டு, மத்திய அரசின் உதவி மற்றும் வழிகாட்டலில் சட்டமாக்கப்பட்டு தமிழக ஹிந்துக்கள் அமைதிப் படுத்தப் பட்டார்கள்.
இப்போது அது போல் சபரிமலை விவகாரத்தில் கேரளத்தில் ஹிந்துக்களிடம் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் பின்னணியில் கிறிஸ்துவ கம்யூனிஸ்ட்களும், இஸ்லாமியர்களும் இருக்கிறார்கள். இதனால் தங்களின் மத நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைக்காக ஆன்மிக நம்பிக்கை கொண்டவர்கள் தெருவில் இறங்கியிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்காக பரிந்து அவசரச் சட்டம் இயற்ற வேண்டிய மாநில அரசோ, இது போன்ற தீர்ப்பையே தாம் விரும்பிப் பெற்றதாகக் கூறி, தீர்ப்பை எந்த வித தாமதமும் இன்றி உடனடியாக அமல்படுத்த வேகம் காட்டி களத்தில் இறங்கிவிட்டது.
இதனால்தான் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சபரிமலை கோயிலுக்குச் சொந்தக்காரர்களாக இருந்து, அதனை கேரள அரசிடம் தாரைவார்த்துவிட்டு, இப்போது வெறும் வழிபாட்டு சடங்குகளில் மட்டுமே தங்களது ஆளுமையை வைத்துக் கொண்டிருந்த பந்தள அரச குடும்பத்துக்கு பேரிடியாக அமைந்திருக்கிறது இந்தத் தீர்ப்பு. இதனால் பந்தள அரச குடும்பமுமே தெருவில் இறங்கிப் போராட வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறது.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் தேவை என தேவஸ்வம் போர்டால் அறிவுறுத்தப் பட்டு, அதனலேயே நாட்கள் நகர்ந்தன. இந்நிலையில் விடுமுறை முடிந்து 22ம் தேதிதான் நீதிமன்றம் மீண்டும் செயல்பட்டு, அப்போது சீராய்வு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படலாம் என்ற நிலை ஏற்பட்டது.
மக்களுக்கு எந்த விதத்திலும் நலம் பயக்காத ஒன்றுக்கும் உதவாத விவகாரங்களுக்கு எல்லாம் நள்ளிரவிலும் நீதிபதி வீட்டின் கதவைத் தட்டி, நீதிபதியும் தன் வீட்டிலேயே நீதிமன்றத்தை நடத்தி, தடைகள் கொடுத்த வரலாற்றுப் புகழ் மிக்க செயல்கள் எல்லாம் இந்த நாட்டில் நடந்துள்ளன.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் எப்படித்தான் இத்தனை நாட்கள் சட்டத்தின் பிடிகளுக்கு உட்படாமல் நீதிபதிகளின் தயவில் தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற வியப்பை வெளிப்படுத்தாத இந்தியர் இல்லை! அரசியல் ரீதியாக கர்நாடகத்தைப் போல் வரும் விவகாரங்களுக்கு எல்லாம் நள்ளிரவிலும் நடக்கின்றன நீதிமன்றங்கள்.
ஆனால் மக்களின் உணர்வுகளுடன் விளையாடும் விவகாரத்தில் மட்டும் உச்ச நீதிமன்றம் குறட்டை விட்டுத் தூங்கி விடுமுறையைக் கழித்து விட்டுத்தான் சோம்பல் முறித்து பணிக்கு வரும் என்ற அளவுக்கு இருப்பதை ஹிந்துக்கள் விமர்சித்து தங்கள் உணர்வுகளைக் கொட்டித் தீர்க்கிறார்கள். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றமும் கைவிட்டு, தாங்கள் ஏமாற்றப் படுத்தப் படுகிறோம், உதாசீனப் படுத்தப் படுகிறோம் என்ற எண்ணம் வலுவாக வேரூன்றி இருக்கிறது.
இவ்வாறு மாநில அரசு, நீதிமன்றம், சட்டம் எல்லாம் கைவிட்ட நிலையில், மத்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கருத்தைத்தான் பலரும் முன்வைக்கிறார்கள்! அயோத்தி மட்டுமே கோவில் என்று பாஜக., கருதுகிறதா? சபரிமலை அதற்குக் கோயிலாகத் தெரியவில்லையா என்றெல்லாம் கருத்துகள் முன்வைக்கப் பட்டன.
இதற்கு பதிலளிக்கும் வகையில், இந்துத்துவ சிந்தனையாளரும் துக்ளக் ஆசிரியருமான எஸ்.குருமூர்த்தி தனது டிவிட்டர் பதிவொன்றில் இவ்வாறு கருத்திட்டார்.
Asking what Central govt is doing in sabarimala issue? Temples are in state list, not in concurrent list, in the constitution. So, Centre has no role. Its not even party in SC. BJP Kerala is leading the protest. Sabarimala issue was raked up by PIL litigants, not faithfuls.
— S Gurumurthy (@sgurumurthy) October 17, 2018
“சபரிமலை கோயில் விவகாரத்தில் மத்திய அரசு என்ன செய்கிறது என்று கேட்கிறார்கள்! கோயில்கள் மாநிலப் பட்டியலில் உள்ளது.
எனவே இதில் மத்திய அரசின் பங்கு இல்லை. வழக்கில் அது ஒரு வாதியாகவும் இல்லை. கேரள பாஜக போராட்டத்தை முன்னின்று நடத்துகிறது.
சபரிமலை கோயில் நீதிமன்றம் சென்றதன் காரணம் பொதுநலன் வழக்கு. நம்பிக்கையாளர்கள் தொடர்ந்தது அல்ல அந்த வழக்கு. மத நம்பிக்கை அற்றவர்கள் தொடர்ந்தது அந்த வழக்கு” – என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், உண்மையில் மத்திய அரசால் இந்த விவகாரத்தில் ஒன்றுமே செய்ய முடியாதா? பாஜக.,தானே இப்போது கேரளத்தில் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறது. காங்கிரஸும் அதற்கு கைகோத்திருக்கிறது!
சொல்லப் போனால், இதுவரை நீதிமன்றம் கூறிய தீர்ப்புகளை அப்படியே ஏற்று, மத்திய பாஜக., அரசு இதுவரை தலையாட்டியா வந்திருக்கிறது! எந்த விவகாரத்துக்குமே மறு சீராய்வும், சட்டத் திருத்தமும் செய்யவில்லையா?
-இத்தகைய கேள்விகள் எழுவது இயற்கைதான்!
சபரிமலையில் ஐயப்பனின் புனிதம், பாரம்பரியத்தை காக்கும் வகையில் மத்தியில் ஆளுகிற பாஜக அரசு உடனடியாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற முன்வர வேண்டும் என்பது ஹிந்துக்களின் எதிர்பார்ப்பு. இதைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என்றால், அது ஹிந்துக்களின் காவலன் என்று சொல்லிக் கொள்வதையோ, மத்தியில் ஆட்சியில் செய்கிறோம் என்ற எண்ணத்தையோ தூக்கி எறிந்துவிடலாம்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் ( SC/ST Atrocities Act ) உச்ச நீதிமன்றம் திருத்தம் கொண்டுவந்த போது அதை எதிர்த்து உடனடியாக அப்பீலுக்குச் சென்றது மத்திய அரசு. அப்பீலை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்.
நாடு முழுவதும் தலித் அமைப்புகள் போராட்டம் நடத்தின. அதை அடுத்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயலிழக்க வைக்கும் வகையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றி சட்டமாக்கியது.
சபரிமலை விவகாரத்தில் ஹிந்துக்களின் நம்பிக்கை, பாரம்பரியத்தை சீர்குலைக்கும் வகையில் வந்துள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தென் தமிழகமும் கேரளமும் கொந்தளித்துக் கொண்டுள்ளது.
மத்திய பாஜக அரசுக்கு உண்மையிலேயே ஹிந்து பாரம்பரியம், கலாசாரத்தைக் காப்பதில் அக்கறை இருக்குமென்றால், நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வந்து ஐயப்பனின் புனிதத்தை காக்க நடவடிக்கை எடுக்க முடியும்.
ஹிந்து ஆலயங்களின் பாரம்பரியம் காக்கும் விவகாரங்களில் நீதிமன்றத் தலையீட்டைத் தடுக்கும் வகையில் சட்டமும் கொண்டு வர முடியும்! எனவே மத்திய பாஜக., அரசு இந்த நிகழ்வுகளின் பின்னணி அல்லது விளைவுகளில் இருந்து தப்பிக்க முடியாது!
– செங்கோட்டை ஸ்ரீராம்





