
நந்தி தீர்த்த க்ஷேத்ரம்
பழமை வாய்ந்த பல கோவில்களுக்குப் பெயர் போன ஊர், பெங்களூரின் மல்லேஸ்வரம். குறிப்பாக சம்பிகே சாலைக்கு இணையாகச் செல்லும், 13 மற்றும் 15ஆம் குறுக்குத் தெருக்களுக்கு நடுவே அமைந்த தெருவை “கோவில் தெரு” என்றே அழைக்கிறார்கள். இங்கிருக்கும் காடு மல்லேஸ்வரர் மற்றும் நரசிம்ம மூர்த்தி, கங்கம்மா தேவி கோவில்களுக்கு நேர் எதிரே, வெற்று நிலமாக காட்சியளித்த இடத்தில் பதினேழு வருடங்களுக்கு முன் பூமிக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டது, ஒரு நந்தீஸ்வரர் கோவில்.
1999ஆம் ஆண்டு அடுக்குமாடி கட்டுவதற்காகத் தோண்டிய போது நிலம் உள்ளே சதுசதுப்பாக இருக்க.. ஆச்சரியத்துடன் மேலும் தோண்டத் தோண்ட.. பரபரப்பு, பிரமிப்பு, விடுவிக்க முடியாத புதிர்களோடு வெளியே வந்தது,“தக்ஷிண முக நந்தி தீர்த்த கல்யாணி க்ஷேத்ரம்”என்றழைக்கப்படும் இந்த ஆலயம். சாலையிலிருந்து பல அடிகள் இறக்கத்தில் அமைந்த கோவிலுக்குத் தற்போது வெளிப்புற, உட்புற நுழைவாயில்களும் சுற்றுச் சுவர்களும் கட்டப்பட்டுள்ளன. Carbon dating முறையில் கோவிலுக்கு ஏழாயிரம் வயது இருக்கலாமெனக் கருதுகிறார்கள் தொல்லியல் ஆய்வாளர்கள். அத்தனை ஆண்டு காலப் பழமையானதா என்பது கேள்விக் குறியே. பதினேழாம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னரும், சத்ரபதி சிவாஜியின் தம்பியுமான வெங்கோஜி ராவ் போன்ஸ்லே, திராவிடக் கட்டிடக் கலையைப் பின்பற்றி எழுப்பிய கோவில் சாலைக்கு மறுபக்கமிருக்கும் காடு மல்லேஸ்வரர் ஆலயம். நந்தி தீர்த்த கோவிலும் இந்த சமயத்திலேயே அவரால் கட்டப்பட்டு பூமிக்குள் சென்றிருக்க வேண்டும் என்பதும் ஒரு அனுமானமாக இருந்து வருகிறது.
பன்னெடுங்காலமாய் புதைந்து கிடந்திருந்தாலும் அழகு குன்றாமல் பொலிவுடன் திகழுகிறது. பழமை வாய்ந்த உறுதியான கற்தூண்கள் தாங்கி நிற்கும் அழகான முற்றம். நடுவே படிக்கட்டுகளுடன் கல்யாணி தீர்த்தம். வழவழப்பான கருங்கல்லில் பொன் வண்ணத்தில் தீட்டப்பட்ட கண்களோடு வடிவாகச் செதுக்கப்பட்ட நந்தி. நந்திக்குச் சற்றே தாழ்ந்த நிலையில் அதே பளபளப்பான கருங்கல்லில் சிவலிங்கம். பார்ப்பவரை எல்லாம் வியப்பில் ஆழ்த்தும் கட்டமைப்புடன், நந்தியின் வாயிலிருந்து தெள்ளிய நீர் தொடர்ந்து சிவனில் மேல் விழுந்து அபிஷேகம் ஆகிக் கொண்டிருக்கிறது. தற்போது செம்பினால் ஆன பெரிய கொள்கலனில் இந்த நீர் விழுந்து, கீழுள்ள துளை வழியாக சிவனை அபிஷேகம் செய்வது போல் அமைத்துள்ளார்கள். இருபத்து நான்கு மணிநேர அபிஷேகத்தில் உளம் குளிந்து மக்களை ஆசிர்வதித்துக் கொண்டிருக்கிறார் சிவ பெருமான்!
சிவன் மேல் தொடர்ந்து விழுகின்ற நீர் படிக்கட்டுகள் வழியாகச் சென்று முற்றத்துக் குளத்தில் சேகரமாகிறது. குளத்தின் நடுப்பாகத்தில் 15 அடி ஆழம் கொண்ட நீர்ச்சுழல் ஒன்றும் உள்ளது. எங்கிருந்து நீர் வருகிறது, எவ்வண்ணம் அது நந்தியின் வாய்வழி சிவலிங்கத்தின் மேல் பொழிகிறது, எப்படிச் சுழல் உண்டாயிற்று, சுழல் வழியாக நீர் எங்கே செல்கிறது, வடிவமைத்த திறன்மிகு சிற்பி யார் என்பன யாவும் இன்றளவிலும் புரியாத புதிராகவே உள்ளது.
குளத்தில் ஆமைகள் பல நீந்தி விளையாடுகின்றன. பக்தர்கள் தம் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி நாணயங்களைக் குளத்தில் வீசிச் செல்வதும் நடக்கிறது. வேண்டுகிற பக்தர்களுக்கு அபிஷேக நீர் பாட்டில்களில் சேகரித்துத் தரப்படுகிறது. இப்புனித நீரை அருந்துவதாலும் நோய் வாயப்பட்டவர் மேல் தெளிப்பதாலும் தீராத நோய்கள் தீருமென நம்பி நம்பி மக்கள் எடுத்துச் செல்கிறார்கள். தரிசனம் முடித்து விட்டு அமைதியான அச்சூழலை இரசித்தபடி திரும்பிச் செல்ல மனமில்லாமல் படிக்கட்டுகளில் பக்தர்கள் அமர்ந்து விடுகிறார்கள். குடும்பத்துடன், நண்பர்களுடன் வந்து பேசி மகிழ்ந்திருக்கிறார்கள்.
கோவிலுக்கு சற்று தொலைவிலும் மேல் மட்டத்திலும் இருக்கும் சாங்கி ஏரியிலிருந்து நீர் வருகிறதோ எனும் அனுமானம் உறுதி செய்யப்படவில்லை. தொன்மையும் பாரம்பரியமும் வாய்ந்த கோவில் மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
சிவனைப் பார்த்து அமர்ந்திருக்கும் நந்தியின் காதில் தங்கள் வேண்டுதலைச் சொல்லிச் செல்கிறார்கள். கோவிலுக்குள் இருக்கும் இரு நந்திகளோடு, கோவிலின் வாயிலில் மற்றும் சுற்றுச் சுவர்களில் எங்கெங்கும் நந்தி தேவரே.
இங்கு மகா சிவராத்திரி மிகச் சிறப்பாக பாலபிஷேகத்துடன் நடைபெறுகிறது. பெங்களூர் வருகிறவர்கள் தவறாமல் தரிசிக்க வேண்டிய கோவில்களில் இதுவும் ஒன்று.
கோவில் நேரம்: காலை 7:30 மணி முதல் மதியம் 12 மணி வரை.
மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை.
– ராமலக்ஷ்மி