புது தில்லி: போனி புயல் மேற்கு வங்கத்தை பாதித்துள்ள நிலையில், அரசியலும் வெகுவாக பாதித்திருக்கிறது. பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தாவுடன் பேசவில்லை என்று ஒரு புறம் அரசியல் நடந்துகொண்டிருக்கும் நிலையில், பானி புயல் பாதிப்பு தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை இரண்டு முறை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றும் அவருடன் பேச முடியவில்லை என்று பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
போனி புயல் கடந்த மே 3ம் தேதி காலை 8:30க்கு ஒடிஸா மாநிலம் புரி அருகே கோபால்பூர் – சந்த்பாலி இடையே கரையைக் கடந்தது. மணிக்கு 175 கி.மீ., வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசியது. ஒடிசாவில் கரை கடந்த புயல் அதன் பின்னர் அண்டை மாநிலமான மேற்கு வங்கத்துக்குள் சென்றது. அங்கும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. .
இந்நிலையில், புயலால் பாதிக்கப் பட்டுள்ள ஒடிஸா மாநிலத்தின் முதல்வர் நவீன் பட் நாயக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உடனடியாக பாதிப்புகளைக் குறித்து கேட்டறிந்தார் பிரதமர் மோடி. மேலும், ஒடிஸா மாநிலத்துக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என்று கூறினார்.
இதை அடுத்து, மேற்கு வங்க மாநில பாதிப்பு குறித்து அம்மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதியிடம் கேட்டறிந்தார். பிரதமர் மோடியும், இந்த உரையாடல் குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.
Spoke to Shri Keshari Nath Tripathi Ji, the Governor of West Bengal on the situation due to Cyclone Fani. Reiterated the Centre’s readiness to provide all help needed to cope with the cyclone. Also conveyed my solidarity with the people of Bengal in the wake of Cyclone Fani.
— Chowkidar Narendra Modi (@narendramodi) May 4, 2019
பிரதமர் மோடி அம்மாநில முதல்வர் மம்தாவிடம் பேசாமல், ஆளுநரைத் தொடர்பு கொண்டதற்கு திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தல் நேரம் என்பதால், இந்த விவகாரம் பெரிதாகியுள்ளது.
இது குறித்து பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகள் விளக்கம் அளித்த போது, மம்தா பானர்ஜியுடன் பிரதமர் மோடி பேசுவதற்காக, நாங்கள் தொலைபேசியில் முதல்வர் அலுவலகத்தை தொடர்பு கொண்டோம். இரு முறையும் எங்களது அழைப்பு ஏற்கப்படவில்லை. ஒரு முறை முதல்வர் சுற்றுப் பயணத்தில் உள்ளார் என தெரிவித்தனர். அதன் பின்னரே ஆளுநருடன் பிரதமர் மோடி பேசினார் என்று கூறினர் அதிகார்கள்!
முன்னதாக, வருடம் ஒருமுறை தனக்கு கோல்கத்தா ரசகுல்லா இனிப்பையும், குர்தாவும் அனுப்பி வைப்பார் மம்தா பானர்ஜி என்று நட்புடன் கூறியதை அதிர்ச்சியுடன் எதிர்கொண்ட மம்தா பானர்ஜி, அதனைத் தொடர் அரசியல் ஆக்கினார். மோடிக்கு இனிமேல் சகதியும் கூழாங்கற்களும் கலந்து செய்த ரசகுல்லாவை அனுப்புகிறேன், அதை சாப்பிட்டு அவர் பல் உடையட்டும் என்று கோபத்தில் கூறினார்.
இதை அடுத்து மோடியும், வங்கத்து புனித மண்ணில் செய்த ரசகுல்லா எனக்கு பிரசாதம் என்றார். தொடர்ந்து தேர்தல் நடைபெறும் நிலையில் இது அரசியல் ஆக்கப் பட்டது. இந்நிலையில், வங்கத்தின் மீண்டும் ஓர் அரசியலை நடத்த மம்தா முயற்சி செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.




