
குற்றாலம் பிரதான அருவியில் குளித்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வரத்து அதிகரித்துக் காணப் பட்டது. அருவியில் வெள்ளப் பெருக்கு இருந்த நிலையில் குளிக்க தடை விதிக்கப் பட்டிருந்தது. பின்னர் நேற்று பெரிய அளவில் மழை இல்லாமல் நீர் வரத்து சீராக இருந்தது.

நீர்வரத்து சீரான நிலையில் நேற்று மாலை முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மெயின் அருவியில் அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், வியாழக்கிழமை இன்று காலை மெயின் அருவியில் குளித்துக் கொண்டிருந்த ராமலிங்கம் என்ற முதியவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

முன்னதாக நேற்று மாலை ஐந்தருவியில் நீர்வரத்து சீரான நிலையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு போலீஸார் அனுமதி அளித்தனர். அப்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவி உள்ளிட்ட 3 பேருக்கு தலையில் சிறு சிறு கற்கள் விழுந்து காயம் ஏற்பட்டது.



