பொதிகை எக்ஸ்பிரஸை நெல்லைக்கு மாற்றுவதா?! பயணிகள் கடும் எதிர்ப்பு!

உரத்த சிந்தனை சற்றுமுன் தமிழகம் நெல்லை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
sengottai railwaystn1 - 2026

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை நெல்லை – சென்னை இடையே இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படும் தகவல் பயணிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கோட்டையில் இருந்து சென்னைக்கும் சென்னையில் இருந்து செங்கோட்டைக்கும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகிறது. வர்த்தக நகரங்களை இணைக்கும் ரயிலாக பொதிகை எக்ஸ்பிரஸ் இயங்குகிறது. குறிப்பாக, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி மற்றும் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிகம் இந்த எக்ஸ்பிரஸ் ரயிலை பயன்படுத்துகின்றனர்.

தமிழக-கேரள பகுதியை ஒட்டியுள்ள செங்கோட்டையிலிருந்து இந்த ரயில் புறப்படும் என்பதால் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பயணிகளும் அதிகளவில் இந்த ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தென் மாவட்டத்தில் இயக்கப்படும் ரயில்களில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில்தான் எப்போதுமே பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

sengottai railwaystn1 podhigai - 2026

இந்த விரைவு ரயில், செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர் ஆகிய தென்மாவட்ட நகரங்களை இணைத்து, சென்னைக்கு செல்கிறது.

இந்த நிலையில் திடீரென பொதிகை விரைவு ரயிலை சென்னையிலிருந்து நெல்லைக்கு இயக்குவதற்கு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. நெல்லையிலிருந்து இயக்கப்பட இருக்க இருப்பதாக கூறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்வதற்காக செங்கோட்டை – நெல்லை இடையே இணைப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது!

இந்தத் தகவலால் பயணிகள் கடும் கொதிப்படைந்துள்ளனர். இதுகுறித்து செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவர் முரளி, செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் சுந்தரம் ஆகியோர் கூறும்போது…

sengottai railwaystn3 - 2026

“ பொதிகை ரயிலை செங்கோட்டையிலிருந்து திருநெல்வேலிக்கு மாற்ற கடையத்தைச் சேர்ந்த அந்தோணி என்பவர் ஒரு மனுவை ஆங்கிலத்தில் தயார் செய்தார். இரு நாட்களுக்கு முன்பு திருச்சியில் நடந்த MPக்கள் கூட்டத்தில்
திருநெல்வேலி MP ஞானதிரவியம் இந்த வேண்டுகோளையும் தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் கொடுத்துள்ளார்.

“பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் பல ஆண்டுகளாக இந்தப் பகுதியில் ரயில் பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட்டு வருகிறது. தென்னக ரயில்வே ஆலோசனைக் கூட்டத்தில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை சென்னையில் இருந்து நெல்லை வரை மட்டும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று பேசியதாக தகவல் வெளியானது!

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் செங்கோட்டை தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருத்தங்கல் பகுதி மக்களின் வசதிக்காக இயக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் செங்கோட்டை – சென்னை செல்லும் போதும் சென்னையில் இருந்து செங்கோட்டை வரும் போதும் கூட்டம் அதிகமாகவே இருக்கும்! பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல் தற்போது இயங்கிவரும் வழித்தடத்தில் இயங்க வேண்டும்” என்று கூறினர்.

senkottai rail passengers2 - 2026

பொதுவாக, சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு வரும் பொதிகை ரயில், சிலம்பு ரயில் உள்ளிட்ட ரயில்களின் பராமரிப்பு செங்கோட்டை ரயில் நிலையத்திலேயே மேற்கொள்ளப் பட வேண்டும். நீண்ட தூரம் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளில் நிறுத்தப்படும் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

மின்சப்ளை, தண்ணீர் இன்ஜின் சரிபார்ப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ள செங்கோட்டையில் முன்னர் வசதி இருந்தது. ஆனால் அந்த வசதியை, பணியாளர் குறைப்பு காரணத்தால் படிப்படியாக ரயில்வே நிர்வாகம் அகற்றி விட்டது.

sengottai railwaystn4 - 2026

இருப்பினும், பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில், நாள்தோறும் செங்கோட்டையில் தண்ணீர் வசதி, மின்சார பராமரிப்பு சரிபார்ப்பு உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகிறது. ஆயினும், லோகோ ஷெட் வொர்க் இயங்காததால், செங்கோட்டையில் இதற்கான முழுப் பராமரிப்பும் மேற்கொள்ளப்படுவதில்லை என்று ஆலோசனைக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்க பட்டுள்ளது.

எனவே தான் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை நெல்லைக்கு இயக்க ரயில்வே நிர்வாகம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறதாம்.

இந்த பிட்லைன் வசதி காரணமாகத்தான் இந்த ஆலோசனை என்று இருந்தால் செங்கோட்டையில் முன்னர் இருந்தது போல், ரயில் இன்சின் பராமரிப்பு, பெட்டிகள் பராமரிப்புக்கு என பிட்லைன் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர்கூட, அகல பாதை மாற்றத்தின் போது செங்கோட்டையில் தனியாக பராமரிப்பு வசதி, பணியாளர்கள் தங்கும் வசதி, பணியாளர்களுக்கான தனி மருத்துவமனை வசதி என்று பல்வேறு வசதிகள் இருந்தன.

sengottai railwaystn6 - 2026

ஆனால், அண்மைக்காலமாக பணியாளர் குறைப்பு நடவடிக்கையால் அந்த வசதிகள் நீக்கப் பட்டதன் காரணத்தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படலாம் என்று தெரிகிறது.

ஏற்கனவே சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு வரும் ரயில், பின்னர் செங்கோட்டையில் இருந்து சென்னைக்குச் சென்று, அங்கிருந்து நெல்லைக்கு நெல்லை விரைவு ரயிலாக இயக்கப் படுகிறது. பின்னர் மறு சுற்றில் அது செங்கோட்டைக்கு பொதிகை ரயிலாக இயக்கப் படுகிறது. காரணம், இரு நாட்களுக்கு ஒருமுறை, நெல்லையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதுதான்.

sengottai railwaystn5 - 2026

இவ்வாறு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பொதிகை மற்றும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்களில் ரயில் பெட்டிகளில் சென்னை – செங்கோட்டை -திருநெல்வேலி என்று எழுதப் பட்டிருக்கும் போர்டுகளைப் பார்த்து பயணிகள் பல நேரங்களில் குழப்பம் அடைவர்.

எனவே செங்கோட்டையில் முன்பு போல் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும், தென்காசி தனி மாவட்டம் என்று ஆகும் போது, மாவட்டத்துக்கு முக்கியத்துவம் தருவதாக இருக்கும் போது, ரயில் நிலையத்தை மேலும் விரிவாக்குவதுதான் சரியானது என்றும் கூறுகின்றனர் பயணியர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.