கல்லிடைக்குறிச்சி கோயிலில் நடராஜர் திருமேனி ஒப்படைப்பு! பொன்.மாணிக்கவேல் மகிழ்ச்சி!

Published:

natarajar statue1 - 2026

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள குலசேகரமுடையார் கோவிலில், 1982 இல் இருந்த ஐம்பொன்னாலான நடராஜர் விக்கிரகம் திருடப்பட்டு, அது ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டிருந்தது கண்டறியப் பட்டது. தொடர்ந்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் அந்த விக்ரகத்தை மீட்டு சென்னைக்குக் கொண்டு வந்தனர். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அந்த சிலையை கோயிலில் ஒப்படைத்தனர். நடராஜர் விக்கிரகத்துக்கு பக்தர்கள், வழிபாடு செய்தனர். 24 மணி நேரமும் நடராஜர் திருமேனிக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப் பட்டுள்ளது.

முன்னதாக, ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் விக்ரகத்தை கல்லிடைக்குறிச்சி கோவிலில் ஒப்படைக்க கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் குலசேகர பாண்டியனால் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குலசேகரமுடையார் கோவில் உள்ளது. இங்கிருந்து 1982ஆம் வருடம் மாயமானது ஐம்பொன்னால் ஆன நடராஜர் திருமேனி. இந்த விக்கிரகத்தை ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் இருந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டு வந்தனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!
natarajar statue - 2026

கடந்த 13ஆம் தேதி சென்னைக்கு எடுத்து வரப்பட்ட இந்த விக்ரகத்தின் மதிப்பு 30 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த விக்கிரகத்தை நேற்று ஒப்படைத்தனர். தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் ஹிந்து அமைப்பினர் சிவனடியார்கள் உள்ளிட்ட பலர் நடராஜர் திருமேனிக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் சிவபூதகண வாத்திய இசைக் கருவிகளை இசைத்தும் வரவேற்பு அளித்தனர்.

நீதிபதி மாதவ ராமானுஜம் இந்த விக்ரகத்தை ஆய்வு செய்தார். பின்னர் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோயில் செயல் அலுவலர் வெங்கடேசன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடராஜர் விக்கிரகத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த விக்ரகத்தை குலசேகரமுடையார் கோவிலில் உடனடியாக ஒப்படைக்கவேண்டும், நடராஜர் திருமேனிக்கு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்! இதையடுத்து நடராஜர் விக்ரகம் கும்பகோணத்திலிருந்து கல்லிடைகுறிச்சி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது!

ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

தொடர்ந்து, இன்று காலை, ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் திருமேனி, நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோவிலில் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.மாணிக்கவேல், என் விசாரணைக்கு யாராவது இடையூறு செய்தால், அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பேன். இதற்கு சட்டத்தில் இடம் உண்டு. இந்த விக்கிரகத்தை மீட்பதில் போலீஸ் அதிகாரிகள் நல்ல ஒத்துழைப்பு அளித்தனர்.

இந்த நடராஜர் திருமேனிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மற்ற விக்ரகங்களுக்கும் விரைவில் பாதுகாப்பு வழங்கப்படும். அறநிலையத் துறையில் பணிபுரிபவர்களில் 95 சதவீதம் பேர் நல்லவர்கள். 5 சதவீதம் பேர் தான் தவறு செய்கின்றனர்

தெய்வத் திருமேனிகள் திருடு போவதை தடுக்க தரமான கம்பிகள் பயன்படுத்தப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப் படும். இந்தக் கம்பிகளை சாதாரணமாக அறுக்க 6 முதல் 7 மணி நேரம் ஆகும். இதனால், திருட்டுகள் தடுக்கப்படும். அதுவரை சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும். ஆன்மிகவாதிகளும் பாதுகாப்பு பணியில் உதவலாம். என்றார் பொன்.மாணிக்கவேல்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img