4 மாநிலத்தில் ஆட்சியை பறிகொடுக்கின்றன அந்த அந்த மாநிலங்களை ஆளும் கட்சிகள் : மணிப்பூரில் மட்டும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது
சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற 5 மாநிலத்தில் 4 மாநிலங்களில் ஆளும் கட்சி ஆட்சியை பறிகொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது உத்திரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்திரகாண்ட் ஆகிய 4 மாநிலங்களிலும் ஆளுங்கட்சி ஆட்சியை பறிகொடுத்துள்ளது. மேலும் மணிப்பூரில் மட்டும் பாஜக – காங்கிரஸ் இடையே இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
உத்திரபிரதேசம்: உத்திரபிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை பிடிக்கிறது. 300 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது. உத்திரபிரதேசத்தில் ஆளும் கட்சியாக இருந்த சமாஜ்வாதி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால் அங்கு வெறும் 71 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
பாஜக 307 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால் சமாஜ்வாதி கட்சி ஆட்சியை பறிகொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப்: பஞ்சாப்பில் சிரோன்மணி அகாலிதளம் – பாஜ கூட்டணி ஆளும் கட்சியாக உள்ளது. ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் இந்த கூட்டணி வெற்றி பெறவாய்ப்பில்லை என கருத்து கணிப்புகள் கூறி உள்ளன. அதே நேரத்தில், டெல்லியை தாண்டி முதல் முறையாக களமிறங்கியிருக்கும் ஆம் ஆத்மிக்கும், காங்கிரசுக்கும் கடும் போட்டி இருக்கும் என கூறப்பட்டது. அதே போல் காங்கிரஸ் கட்சி 117 இடங்களில் 76 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
கோவா: கோவாவில் ஆளும் கட்சியாக பாஜக உள்ளது. ஆனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. மேலும் கோவா முதலமைச்சர் லட்சுமிகாந்த் பர்சேகர் தாம் போட்டியிட்ட தொகுதியில் தோல்வியை சந்தித்துள்ளார். கோவா 40 தொகுதிகளை கொண்டது. 17 தொகுதிகளில் இதுவரை காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. இதனால் ஆளும் கட்சியான பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை.
உத்திரகாண்ட்: உத்திரகண்ட்டில் ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சியாக உள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் பாஜக 55 தொகுதிகளில் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இங்கும் ஆளும் கட்சிக்கு ஆட்சி பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.
மணிப்பூர்: மணிப்பூரில் பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மேலும் அங்கு தொங்கு சட்டசபை அமையவும் வாய்ப்புகள் உள்ளனர். மற்ற கட்சிகளின் ஆதரவு பொறுத்தே ஆட்சி அமைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிப்பூரில் மொத்தம் 60 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மணிப்பூரில் பாஜக 24 இடங்களிரும், காங்கிரஸ் 19 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.



