8 ஆண்டுக்கு பிறகு ரஜினிகாந்த் இன்று தான் தனது ரசிகர்களை சந்தித்துள்ளார்.
அவர் இன்று முதல் 19ம் தேதி வரை சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை
சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.
அவரை சந்திக்க ரசிகர்களுக்கு பார்கோடுடன் கூடிய அடையாள அட்டை
வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பார்கோடு அடையாள அட்டை வைத்திருந்தவர்கள் மட்டுமே திருமண
மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இன்று குமரி, திண்டுக்கல், கரூர்
மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை ரஜினி சந்தித்தார்.
இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், ரஜினி நிலையான
முடிவு எடுக்கமாட்டார், பின்வாங்குவார், தயங்குகிறார் என சிலர் கூறினார்கள்.
நல்ல படங்களை கொடுப்பேன். ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன். படம் ஓடுவதற்காக ஏதாவது
சொல்வார். இறைவனின் ஆசியால், உங்களின் அன்பால் அப்படி பண்ண வேண்டிய
அவசியமில்லை. படம் நல்லா இருந்தால் மட்டுமே ரசிகர்கள் ரசிப்பார்கள்.
இல்லாவிட்டால் என்ன குட்டிகரனம் போட்டாலும் ஒன்றும் செய்ய முடியாது.
கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் விபத்து நடந்தது. ஒரு கூட்டணிக்கு ஆதரவு
அளிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. அரசியல் ஆதாயத்துக்காக என் பெயரை
சிலர் பயன்படுத்துகின்றனர்.
ரசிகர்கள் தான் எம்.பி., எம்.எல்.ஏ., அமைச்சராக வேண்டும் என ஆசைப்படுவது
தவறில்லை. ஆனால் அதை வைத்து பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை என்ன சொல்வது?
ஒருவேளை நான் அரசியலுக்கு வர வேண்டிய சூழ்நிலை வந்தால், பணம் சம்பாதிக்க
நினைப்பவர்களை பக்கத்தில் கூட சேர்க்க மாட்டேன் என்றார்.
என் வாழ்க்கை அந்த ஆண்டவன் கையில் உள்ளது. இப்போது நடிகனாக என்னை
பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். நடிகனாக நடிக்கிறேன். நாளை நான் என்ன செய்ய
வேண்டும் என்பதை அவர் தான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.
பல ஆண்டுகளுக்கு பின்னர் ரசிகர்களை சந்திக்கும் ரஜினிகாந்த் தனது அரசியல்
பிரவேசம் குறித்து முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான்
அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் தான் இருக்கிறது என்று மீண்டும் தனது
வழக்கமான கருத்தையே தெரிவித்தால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.



