spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்தமிழகத்தில் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

தமிழகத்தில் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

- Advertisement -
edappadi video conference1

தமிழகத்தில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப் படுவதாக, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஊரடங்கின் போது கூடுதல் தளர்வுகளும் அறிவிக்கப் பட்டுள்ளது.

இதன்படி…
12 மாவட்டங்களில் ஊரடங்கு தொடரும்.
25 மாவட்டங்களில் e paass இல்லாமல் போக்குவரத்து இயக்கம்
கேளிக்கை நிலையங்கள் தடை தொடர்கிறது.
திருமணம், இறுதி ஊர்வலம் தற்போதைய நிலையே தொடரும்.
ஆலயங்கள் திறப்பு தடை தொடரும்.

தமிழக அரசின் அறிவிப்பு :

செ. கு. எண்: 069 நாள்: 17.05.2020

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்களின் அறிக்கை – 17.5.2020

சீனாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றைப் பற்றி அறிந்தவுடன், தமிழ்நாடு அரசு, ஜனவரி 2020 முதல் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஜனவரி முதல் மார்ச் 2020க்குள் 146 கோடி ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியமான மருந்துகளும், 21 லட்சம் பாதுகாப்பு கவச உடைகளும், 1.45 கோடி முகக்கவசங்களும் (3ply)
மற்றும் 24 லட்சம் N95 முகக்கவசங்களும் பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம், இதனை உலகளாவிய நோய் தொற்றாக அறிவித்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு இந்த நோயை பரவாமல் தடுக்க தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939, தொற்று நோய் சட்டம் 1897ன் கீழ் அறிவிக்கை வெளியிட்டது.

மத்திய அரசு, இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 25.3.2020 முதல் அமல் படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல் படுத்தியது.

மேலும், மத்திய அரசு இந்த ஊரடங்கினை 17.5.2020 வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்ததை பின்பற்றி தமிழ்நாடு அரசும் இதை நடைமுறைப்படுத்தியது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து தமிழ்நாட்டு மக்களை காத்து, அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அதனால் தான், தமிழ்நாட்டில் நோய் தொற்று பரவல் அதிகம் இல்லாமலும், சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது.

கடந்த 13.5.2020 அன்று எனது தலைமையில் நடந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 33 சதவீதம் பணியாளர்கள் அளவை 50 சதவீதம் வரை உயர்த்தியும், சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட
பகுதிகளைத் தவிர, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் (ஜவுளித் தொழிற்சாலைகள், விசைத்தறி உட்பட) 50 சதவீத தொழிலாளர்களைக் கொண்டு இயங்கவும், சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ளSEZ, EOU & Export Units –50 சதவீத தொழிலாளர்களை கொண்டு இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டு அரசாணையும்
வெளியிடப்பட்டுள்ளது.

நான் பல்வேறு தினங்களில் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில், குறிப்பாக, 13.5.2020 அன்று நடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் காணொலிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும்; மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் 14.5.2020 அன்று நடத்தப்பட்ட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து எடுத்த முடிவுகளின் அடிப்படையிலும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 31.5.2020 நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு வரைமுறைகளுடனும், தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:-

  1. பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள்.
  2. வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு
    மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.
  3. பொதுமக்கள் அதிக அளவில் கூடும் திரையரங்குகள்,
    கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள் உடற்பயிற்சிக் கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற இடங்கள்.
  4. அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.
  5. பொது மக்களுக்கான விமானம், இரயில், பேருந்து
    போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையேயான இரயில்
    போக்குவரத்து, சென்னை மாநகரத்திலிருந்து பிற
    பகுதிகளுக்கான இரயில் போக்குவரத்து ஆகியவற்றிற்கு
    அனுமதி கிடையாது. ( மத்திய / மாநில அரசின் சிறப்பு அனுமதி பெற்று இயக்கப்படும் விமானம், இரயில், பொதுப்பேருந்து போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்படும்.)
  6. டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா.
  7. மெட்ரோ இரயில் / மின்சார இரயில்.
  8. தங்கும் விடுதிகள் (பணியாளர் விடுதிகள் தவிர), தங்கும்
    ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள்.
  9. இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக்
    கூடாது.
  10. திருமண நிகழ்ச்சிகளுக்கு, தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும்.

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள்:

 சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் ஏற்கனவே நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும். தளர்வுகள் ஏதும் இல்லை.

 நீலகிரி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலா தலத்திற்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

 தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில்
(Containment Zones)) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

 பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர (Except Containment Zones) பிற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி தொடரும்.

 பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர (Except Containment Zones), பிற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு அனுமதி தொடரும்.

புதிய தளர்வுகள்:-

ஊரடங்கை படிப்படியாக விலக்குவதற்கு பரிந்துரை செய்ய அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழுவின் பரிந்துரையின்படி கீழ்க்காணும் தளர்வுகள் அறிவிக்கப்படுகிறது:

 கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் நீலகிரி
ஆகிய 25 மாவட்டங்களுக்கு மட்டும் கீழ்க்காணும் சில தளர்வுகள் வழங்கப்படுகின்றன:

 அந்தந்த மாவட்டங்களுக்குள் போக்குவரத்து இயக்கத்திற்கு மட்டும் TN e-pass இல்லாமல் இயக்க தளர்வு அளிக்கப்படுகிறது.

 மாவட்டத்திற்குள் நோய் தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கும், அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் சென்று வர போக்குவரத்தை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு சென்றுவர TN e-pass பெற்று செல்லும் தற்போதைய நடைமுறையே தொடரும்.

 அரசுப்பணிகள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிகபட்சமாக 20 நபர்களும், வேன்களில் 7 நபர்களும், Innova போன்ற பெரிய வகை கார்களில் 3 நபர்களும், சிறிய கார்களில் 2 நபர்களும் (வாகன ஓட்டுநர் தவிர) செல்ல அனுமதிக்கப்படுகிறது.

 மாவட்டங்களுக்குள் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ள 25 மாவட்டங்களில் TN e-pass இல்லாமல் வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை அத்தியாவசிய பணிகளுக்கான வேளாண்மை, வியாபாரம், மருத்துவம் போன்ற பணி நிமித்தம்
பயணம் செய்ய மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும்.
தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் செல்வதை
கண்டிப்பாக பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

 தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் – தற்போதுள்ள 50 சதவீத பணியாளர்களை 100 சதவீத பணியாளர்களாக உயர்த்துவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

 சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தற்போதுள்ள தளர்வுபடி 50 நபர்களுக்கு குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகளில் 100 சதவீதம் பணியாளர்களும், 50 நபர்களுக்கு மேல் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ள தொழிற்சாலைகளில் 50 சதவீதம் பணியாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இதை மேலும் தளர்வு செய்து 100 நபர்களுக்கும் குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகளில், 100 சதவீதம் பணியாளர்களும், 100 நபர்களுக்கு மேல் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ள தொழிற்சாலைகளில், 50 சதவீதம் பணியாளர்கள் அல்லது குறைந்தபட்சம் 100 பணியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

 ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் தனியார் மற்றும் வியாபார நிறுவனங்களின் அத்தியா வசிய பராமரிப்புப் பணிகளுக்காக மட்டும் குறைந்தபட்சம் பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதி.

 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத் தாள்களை திருத்தும் பணி மட்டும் நடைபெற விலக்களிக்கப்படுகிறது.

 தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கு தனி பயிற்சியாளர் மூலம் பயிற்சி பெறுவது மட்டும் விலக்களிக்கப் படுகிறது. இதற்காக சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், சென்னை மாநகர ஆணையரிடமும் அனுமதி பெற வேண்டும்.

 மாவட்டங்களுக்குள் போக்குவரத்து அனுமதிக்கப் படாத 12 மாவட்டங்களில் டி என் இ பாஸ் உடன் மருத்துவ சிகிச்சைக்கு மட்டும் சென்று வர பயன்படுத்தப்படும் டாக்ஸி, ஆட்டோவுக்கு மட்டும் விலக்களிக்கப்படுகிறது.

பொது :

அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், மாநகராட்சி ஆணையர்களும் அரசால் அறிவுறுத்தப்பட்ட, முக கவசங்களை அணியவும், சமூக இடைவெளியினை பின்பற்றவும், சோப்பை உபயோகப்படுத்தி அடிக்கடி கைகளை கழுவும் நடைமுறையை பின்பற்றவும், போதுமான கிருமி நாசினிகளை பயன்படுத்தவும், பணியாளர்கள், மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதை கண்காணிக்கவும், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு
நடைமுறைகளை (Standard Operating Procedures) தீவிரமாக கடைபிடிப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு தொடர்வதால், பொது இடங்களில், ஐந்து நபர்களுக்கு மேல் மக்கள் கூடாமல் இருப்பதை கண்காணிக்கவும் அறிவுறுத்தப் படுகிறது.

நோய்த் தொற்றின் பரவலை தமிழ்நாடு அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. நோய்த் தொற்று குறையக் குறைய, தமிழ்நாடு அரசு மேலும் தளர்வுகளை அறிவிக்கும்.

வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்புவதற்கு முடியாமல் உள்ள தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களை மத்திய அரசின் “வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் 10 சிறப்பு வானூர்திகள் மூலம் 1,665 நபர்களும், 2 கப்பல்கள் மூலம் 264 நபர்களும் தமிழ்நாடு திரும்பியுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து தமிழ்நாடு திரும்ப விரும்பும் மேலும் பல தமிழர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து அவர்களையும் அழைத்து வர உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

மேலும் பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் தமிழர்களை சிறப்பு இரயில் மூலம் படிப்படியாக அழைத்து வர விரைவான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். அதேபோல், புதுடில்லியிலிருந்து இந்த வாரம் இரண்டு முறை ராஜதானி விரைவு இரயில் இயக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் வாரத்திற்கு 2 நாட்கள் இந்த விரைவு இரயில் இயக்க மத்திய அரசின் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த மாண்புமிகு அம்மாவின் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, பொது மக்கள், முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மு. பழனிசாமி
தமிழ்நாடு முதலமைச்சர்

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe