
சிவகாசி அருகே பரிதாபம்.. மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தந்தை தற்கொலை முயற்சி… ஒரு பெண்குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு…!
சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம் புதூரைச் சேர்ந்தவர் சிவமணி (35). இவர் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, தேர்தல் பிரிவு அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேணி அதே ஊரில் உள்ள பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார்.
இவர்களுக்கு விஜயலட்சுமி (9), சிவரஞ்சனி (7), சிவபிரசாத் (4) என மூன்று குழந்தைகள் உள்ளனர். இன்று காலை சிவமணி வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்திருக்கிறார். அவரது மனைவி வழக்கம் போல பட்டாசு ஆலைக்கு சென்று விட்டார். மாலை திரும்பி வந்து பார்த்தபோது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சி செய்துவிட்டு, சிவமணியும் விஷம் குடித்துவிட்டு, கையை கத்தியால் அறுத்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.
விஷம் குடித்த நான்கு பேரும் வீட்டுக்குள் மயங்கிக் கிடந்ததைப் பார்த்த அவர் அலறித் துடித்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் மயங்கிக் கிடந்த நான்கு பேரையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிகிச்சை பலனளிக்காமல், சிவரஞ்சனி பரிதாபமாக இறந்தார். மேலும் சிவமணிக்கும், இரண்டு குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குழந்தைகளை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்ய முடிவெடுத்ததற்கு என்ன காரணம் என தெரியவில்லை. சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ரவிச்சந்திரன், மதுரை