
மதுரை: தமிழகத்தில் பெண்களின் கனவை நனவாக்கியவர், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என, தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பேசினார்.
மதுரை பொன்னகரத்தில் வெள்ளி வீதியார் மாநகராட்சி பள்ளியில், வாழ்வதார இயக்கம் சார்பில் மகளிர் குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கி அவர் பேசியது:
தமிழகத்தில் பெண்களுக்கென தனி இட ஒதுக்கீடு, தொட்டில் குழந்தைத் திட்டம், தாலிக்கு தங்கம், இலவச மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா. அம்மா உணவகம் திட்டத்தை, இன்று பல மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தியுள்ளது.
ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு உரிய அளவில் பொருட்களை வழங்கவேண்டும் என, அறிவுறுத்தப் பட்டுள்ளது. தமிழக அரசானது, பொது மக்கள் நலன் கருதி பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது என்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு, மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார்.மாநகராட்சி ஆணையர் விசாகன், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பாண்டியன், பாண்டியன் கூட்டுறவு அங்காடித் தலைவர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை