சென்னை:

தினகரன் யார்? அதிமுகவுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? 10 ஆண்டுகளாக அவர் எங்கிருந்தார் என முன்னாள் மேயர் சைதை துரைசாமி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த சைதை துரைசாமி, சசிகலா வழங்கிய பதவியை நான் ஏற்கவில்லை என்று கூறினார். தான் கல்விப் பணிகளில் கவனம் செலுத்துவதாகக் கூறிய அவர், கடந்த டிசம்பர் மாதத்துக்குப் பின்னர் தீவிர அரசியலில் தாம் ஈடுபடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், அ.தி.மு.க இரு அணிகளாகப் பிரிந்த போது எந்த அணியிலும் சேராமல் இருந்தேன். பிளவுபட்ட அதிமுகவில் இருக்க விரும்பமாட்டேன் . தற்போது தினகரன் என்னை வம்புக்கு இழுத்துள்ளார். தினகரனின் முரண்பட்ட செயல்களுக்கு அளவில்லாமல் போய்விட்டது. தினகரன் யார்? அதிமுகவுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? 10 ஆண்டுகளாக தினகரன் எங்கே இருந்தார்? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பிய சைதை துரைசாமி, பின்னர் ஜெயலலிதாவால் தாம் வெளியேற்றப்பட்ட பின்னர், வேறு வழியின்றி மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து சசிகலா மீண்டும் ஜெயலலிதா வீட்டுக்கு வந்ததை நினைவு கூர்ந்து, சசிகலா அப்போது எழுதிய மன்னிப்புக் கடிதத்தைப் படித்துக் காட்டினார். எனவே, சசிகலா கட்சிக்கு தொடர்பில்லாதவர் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும் என்று அவர் கூறினார்.



