சென்னை:
நாளை முதல் மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது. சென்னையின் நடைபெற்ற உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை மீறி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது. மேலும், போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு அனைவரும் வர வேண்டும் என தமிழக அரசு கோரிக்கையை அது நிராகரித்துள்ளது.
புதிய ஓய்வூதியத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரி, தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பாக கடந்த 7, 8ஆம் தேதிகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம், பட்டதாரி ஆசிரியர் கழகம், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம், இடைநிலை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட 17 சங்கங்கள் பங்கேற்றன. அரசு ஊழியர்களின் காலவரையற்ற போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது.
வேலை நிறுத்தப் போராட்ட காலத்திலான ஊழியர்களின் சம்பளத்தைக் கட் செய்வதாக அரசு அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ஊழியர்கள் போராடுவது, அவர்களின் அடிப்படை உரிமை ஆகாது என்ற உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையை உயர் நீதிமன்றம் எடுத்துரைத்துள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளது. முன்னதாக, செப்டம்பர் 7, 8ஆம் தேதிகளில் மறியல் போராட்டம் நடத்தியது ஜாக்டோ ஜியோ அமைப்பு. இருப்பினும் உயர் நீதிமன்ற அறிவுரையை மீறி, செப்டம்பர் 11ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.



