சென்னை: கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் உடனே விடுவிக்கப்படாவிட்டால், இந்திய-இலங்கை மீனவர்களுக்கு இடையிலான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. சென்னையில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் என திட்டமிடப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 11 மணிக்கு பேச்சுவார்த்தை துவங்கும். இந்திய-இலங்கை மீனவர்களுக்கு இடையே மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 54 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதையடுத்து, பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என பிரதமரிடம் தமிழக அரசின் சார்பில் கடிதம் மூலம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில், மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க இலங்கை அரசுப் பிரதிநிதிகளும், மீனவர்களும் திங்கள்கிழமை காலை சென்னை வந்தனர். தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. மீனவர்களை விடுவித்து சுமூகமான சூழலில் பேச்சினை நடத்த வேண்டும் என தமிழகத்தின் சார்பில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, மீனவர்கள் அனைவரும் திங்கள்கிழமை மாலை விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்தப் பின்னணியில் இந்திய-இலங்கை மீனவர்களுக்கு இடையிலான மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இலங்கைத் தரப்பில் மீன்வளத் துறை செயலாளர் நிமல் ஹெட்ரிராச்சி, இயக்குநர் ஜெனரல் எம்.சி.எல். பெர்ணாண்டோ, இயக்குநர் டி.எஸ்.நந்தாசேனா உள்ளிட்ட 10 பேர் அடங்கிய அதிகாரிகளைக் கொண்ட குழு பார்வையாளர்களாகவும், டி.சதாசிவம், ஜஸ்டின் ஜோய்சா, ஜி.வி.எம்.ஜெரால்டு, என்.பொன்னம்பலம், பி.செந்தில் நாதன், ஜெ.பிரான்ஸிஸ் ஆகியோர் அடங்கிய 10 மீனவர்களைக் கொண்ட குழுவும் சென்னையில் தங்கியுள்ளன. தமிழகத்தின் சார்பில் 13 மீனவர்கள் பங்கேற்கின்றனர்.
Popular Categories