
மதுரையில் தேர்தல் பிரசாரத்தின் போது, தற்போதைய திமுக.,வினரின் அரசியல் நடவடிக்கையாக அமைந்துள்ள வேல் கொடுக்கும் நிகழ்வில், திமுக.,வினர் அளித்த வெண்கல வேலை கனிமொழி வாங்க மறுத்து, புறங்கையால் தள்ளிவிட்டார்.
மதுரையில் தி.மு.க., மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி., நேற்று பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

காலையில் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள அஜந்தா அப்பள நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அவரை அஜந்தா அப்பள கம்பெனி உரிமையாளர்கள் சி.எஸ். பிரசாத், சி.எஸ். பிரதீஷ் ஆகியோர் சால்வை அளித்து வரவேற்றனர்.

அவர்களுடன் 92வது வட்ட கழக செயலாளர் பழனிசாமி, அவைத்தலைவர் குமரவேல், பொருளாளர் கருப்பசாமி, துணை செயலாளர் முத்து மற்றும் வட்ட கழக நிர்வாகிகள், இளைஞரணி, விவசாய அணி, மாணவர் அணி நிர்வாகிகள் வரவேற்றனர்.
சிம்மக்கல் பகுதியில் கருணாநிதி சிலை அமைக்கும் பணி நடக்கிறது.அதை பார்வையிட சென்ற போது வடக்குமாசி வீதி, தி.மு.க., வட்ட செயலர் பாலு, பகுதி செயலர் சரவணன் ஆகியோர், கனிமொழிக்கு வெண்கலத்தால் ஆன வேல் கொடுக்க முயன்றனர். வேல் கண்டு பதற்றம் அடைந்த கனிமொழி முகத்தை சுளித்து வேலைக் கையில் வாங்க மறுத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிகழ்வு குறித்து வட்ட செயலாளர் பாலு கூறிய போது, திருப்புவனம் அருகே எங்கள் ஊரில் உள்ள கோவிலுக்குக் கொண்டு செல்ல வேல் செய்து, அதை ஆட்டோவில் கொண்டு சென்றோம். கனிமொழியைப் பார்க்கச் செல்லும்போது ஆட்டோவிலேயே அதை வைத்திருந்தால், யாராவது எடுத்துச் சென்றுவிடலாம் என்ற அச்சத்தில், அதனைக் கையில் கொண்டு சென்றோம். ஆனால் அந்த வேலினை தனக்குத் தான் கொடுக்க வருகிறார்கள் போலும் என்று கனிமொழி நினைத்துவிட்டார். அதனால் அது தனக்கு வேண்டாம் என்று மறுத்தார். ஆனால், நாங்கள் அவருக்கு வேல் கொடுக்கவில்லை என்று கூறி சமாளித்தார்.



