
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்தும், சேலம் ஜோதிடர், கருத்து கணிப்பை வெளியிட்டு, சிக்கலுக்கு உள்ளாகி உள்ளார்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட, மார்ச், 27 முதல், ஏப்., 29 இரவு, 7:00 மணி வரை, தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. சமூக வலைதளம்சேலம், அம்மாபேட்டையைச் சேர்ந்த ஜோதிடர் பாலாஜி ஹாசன், 33. இவர், தமிழகம், புதுச் சேரியில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பாக, யார் வெற்றி பெறுவார் என்பதை, ஜோதிட ரீதியாக கணித்து, தன் முகநுால் பக்கத்திலும், ‘யுடியூப்’ சேனலிலும் வெளியிட்டார்.
புதுச்சேரியில், யார் ஆட்சியை பிடிப்பார், யார் முதல்வர் என்பதையும், ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக, யார் வெற்றி பெறுவார் என்பதையும் வெளியிட்டார்.
அடுத்தபடியாக, தமிழகத்தின் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெரும்பான்மையான தொகுதிகளை எந்த கட்சி கைப்பற்றும் என, ஜோதிட கணிப்பை வெளியிட்டார். இந்த வீடியோக்கள், சமூக வலைதளங்களில் பரவின. தேர்தல் விதிகளை மீறி, அவர் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளதாக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் சென்றன. புதுச்சேரி தேர்தல் அதிகாரிகள், இவருக்கு விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் பரவியது.
இதையடுத்து, பாலாஜி ஹாசன், இரண்டு நாட்களுக்கு முன், தன் ஜோதிட கருத்து கணிப்பு பதிவுகளை நீக்கினார். சட்ட சிக்கல்ஜோதிடர் பாலாஜி ஹாசன் கூறியதாவது:என் பதிவுக்கு தேர்தல் கமிஷனிடம் இருந்து, விளக்கம் கேட்டு, எந்த நோட்டீசும் வரவில்லை. தேர்தல் கமிஷன் உத்தரவை, நண்பர்கள் என் கவனத்துக்கு கொண்டு வந்ததால், பதிவுகளை நீக்கி விட்டேன். நீங்கள் செய்தி வெளியிட்டு, எனக்கு சட்ட சிக்கலை ஏற்படுத்தி விடாதீர்கள்.இவ்வாறு அவர் கூறினார்