
புது பஸ் ஸ்டாண்டில் சுற்றித்திரிந்த இருவரை பிடித்து, போலீசார் விசாரித்தபோது, தங்க சங்கிலி, மடிக்கணினி திருடியவர்கள் என, தெரியவந்ததால், இருவரையும், போலீசார் கைது செய்தனர்.
சேலம், பள்ளப்பட்டியை சேர்ந்தவர் தினேஷ், 37. ஜவுளி தொழில் செய்து வரும் இவர், நேற்று முன்தினம், தர்மபுரி சென்று விட்டு, பஸ்சில், சேலம் திரும்பினார்.
இவர், தான் அணிந்திருந்த, 3 பவுன் தங்க சங்கிலியை, பாதுகாப்பு கருதி, அதை கழற்றி, பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்தார். காலை, 11:30 மணிக்கு, பஸ், சேலம், புது பஸ் ஸ்டாண்ட் வந்தபோது, பேன்ட்டில் இருந்த, சங்கிலி மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து, பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், அவர் புகார் அளித்தார்.
அதேபோல், ஓமலூர் பிரதான சாலையை சேர்ந்தவர் தேவகிருபை டேனியல், 33. தனியார் கிரானைட் நிறுவனத்தில், உதவி மேலாளராக பணிபுரியும் இவர்,
கள்ளக்குறிச்சி செல்ல, கடந்த மார்ச், 8 காலை, 10:30 மணிக்கு பஸ்சில் ஏற முயன்றார். அப்போது, அவரது மடிக்கணினியை, இருவர் பறித்துக்கொண்டு தப்பினர். அவர் புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் விசாரித்தனர்.
நேற்று முன்தினம் இரவு, புது பஸ் ஸ்டாண்டில் சுற்றித்திரிந்த, ஈரோடு, கோபிசெட்டிபாளையம் பாஸ்கரன், 28, கோவை, உக்கடம் முஜிபுர் ரகுமான், 40, ஆகியோரிடம், போலீசார் விசாரித்தபோது,
மேற்கண்ட இரு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என, தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.