கன்னியாகுமரியில் சினிமா சூட்டிங்கிற்கு பயன்படுத்தும் போலி ரூபாய் நோட்டுகளை கொண்டு நிதி நிறுவனம் நடத்தி வாடிக்கையாளரை ஏமாற்றிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அடுத்த வெள்ளாங்கோடு பகுதியில் தனியார் முந்திரி ஆலையில் கள்ளப் பணம் பதுக்கி வைத்திருப்பதாக உளவு பிரிவு காவல்துறை உதவி ஆய்வாளர் சிவசங்கரனுக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து காவலர்கள் அங்கு சென்று விசாரித்தபோது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு சொகுசு காரில் மூன்று இரும்பு லாக்கர்கள் இருந்துள்ளது.
இதில் லாக்கர்களில் 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 50 லட்ச ரூபாய் இருப்பதை கண்டு அவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில் பளுகல் பகுதியில் பம்பா என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் நடத்தும் சிந்து என்பவர் இந்த பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக விசாரணையில் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அவரை கைது செய்து விசாரித்ததில், இவர் நிதி நிறுவனம் நடத்தி குறைந்த வட்டிக்கு பெரும் தொகையை கடனாகப் பெற்று தருவதாக கூறி பலரிடம் கமிஷன் தொகையாக லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார்.
கடன் பணத்தை கேட்பவர்களை நம்ப வைப்பதற்காக திரைப்பட சூட்டிங்களுக்கு பயன்படும் போலி கள்ள ரூபாய்களை லாக்கரில் வைத்து அவர்கள் இருப்பிடத்திற்குச் சென்று லாக்கரை திறந்து பணம் இருப்பதாக காண்பித்துவிட்டு, லாக்கர் சாவியை தான் கொண்டு சென்றுவிட்டு போலி பணத்தை பயனாளிகள் வீட்டிலேயே வைத்துவிட்டு அவர்களை நம்ப வைத்துள்ளார்.
இதனால் உறுதியாக தங்களுக்கு குறைந்த வட்டியில் பணம் கிடைக்கும் என நம்பிய சிலர், தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை இவரிடம் குறைந்த வட்டியில் கடன் வழங்க இவரை பரிந்துரைத்து உள்ளனர்.
இவரிடம் குறைந்த வட்டிக்கு பணம் கிடைக்கும் என நம்பி நூற்றுக்கு மேற்பட்டோர் ஏமாந்து உள்ளனர்.
சினிமா சூட்டிங்கிற்கு பயன்படும் போலி ரூபாய்களைக் கொண்டு நிதி நிறுவனம் நடத்தி வாடிக்கையாளரை ஏமாற்றிய பளுகலை சேர்ந்த சிந்துவை போலிஸார் கைது செய்து அவர் பயன் படுத்திய சொகுசு காரையும் லாக்கர்களையும் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கு உடந்தையாக இருந்த கேரளாவை சேர்ந்த சினிமா இயக்குனர் உட்பட ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர்