கோடை காலத்தில் சூரிய கதிர்வீச்சுக்களின் தாக்கத்தால் சருமம் பாதிப்புக்குள்ளாகும். நோய் தொற்றுகளாலும் சருமத்தில் பிரச்சினை உண்டாகும். அதனை தவிர்க்க எண்ணெய் வகைகளை உபயோகப்படுத்த வேண்டியது அவசியமானது.
லாவண்டர், ரோஸ்மேரி, சந்தனம், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவை சரும நலனுக்கு ஏற்றது. அதனை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் சரும பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
- லாவண்டர் எண்ணெய் பல்வேறு பிரச்சினைகளுக்கு விரைவான நிவாரணம் தரும். விபத்தில் ஏற்படும் காயங்கள், தீக்காயங்கள், தோல் அரிப்பு போன்ற பிரச்சினைகளை போக்கும். இந்த எண்ணெய்யை நுகர்ந்தால் மன அழுத்தமும் கட்டுப்படும்.
- கோடை காலத்தில் வியர்வை அதிகமாக வெளியேறும். அவை உடலில் படியும்போது நோய் கிருமிகள் அதிக அளவில் உருவாகிவிடும். ரோஸ்மேரி எண்ணெய்யுடன் தண்ணீரையோ அல்லது தேங்காய் எண்ணெய்யையோ சிறிது கலந்து வியர்வை வெளியேறும் பகுதியில் தடவி வரலாம். எண்ணெயின் வாசத்தில் நோய் பரப்பும் கிருமிகள் அழிந்துவிடும். மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.
- சந்தனம் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் சந்தனத்தை தூள் செய்து பருக்கள் இருக்கும் இடத்தில் தடவி வரலாம். சருமத்தில் சிவப்பு நிற திட்டுக்கள் இருந்தால் அதற்கும் சந்தனத்தூள் நிவாரணம் தரும். சந்தன எண்ணெய் வெப்ப தாக்கத்தில் இருந்து சருமத்தை காக்கும். வீக்கத்தை குறைக்கவும் உதவும். வெளியே செல்லும்போது சருமத்தில் சந்தன எண்ணெய் தடவலாம்.
- புதினா எண்ணெய் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுத்தும் தன்மை கொண்டது. வீக்கம் மற்றும் குமட்டலையும் போக்கும். கழுத்து பகுதியில் புதினா எண்ணெய்யை தடவினால் குளிர்ச்சியை உணரலாம்.
- கோடை காலத்தில் எலுமிச்சையின் பயன்பாடு அதிகமிருக்கும். எலுமிச்சை சாறையும் சருமத்திற்கு பயன்படுத்தலாம். அவை சருமத்திற்கு கூடுதல் பொலிவு சேர்க்கும். முகப்பரு, சரும வறட்சி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நிவாரணம் தரும்.
- லாவண்டர், ரோஸ்மேரி, சந்தனம், புதினா போன்ற எண்ணெய்களை அப்படியே பயன்படுத்தக்கூடாது. அவைகளுடன் தேங்காய், ஆலிவ் போன்ற ஏதாவதொரு எண்ணெய்யை கலந்து பயன்படுத்துவது நல்லது
மனஅழுத்தம், பதற்றம் போன்ற காரணங்களால் உடல் ஓய்வை விரும்பாது. இதனால் தூக்கமின்மை நோய் வாட்டும். இதன் விளைவு கண் வீக்கம், வறட்சி, கருவளையம் போன்ற பிரச்னைகள் வரும் இதற்கு லாவண்டர் எண்ணெய் பயன்படுத்துவது நல்லது.
சம்மரில் ஏசி அறையாக இருந்தாலும், வெயிலில் சுற்றும் நபராக இருந்தாலும் உடலின் நீர் வறட்சி ஏற்படும். ஒருபக்கம் தூசிகள் சருமத் துளைகளில் தேங்கி சேதமாக்கிவிடும். இதைத் தடுக்க யூக்கலிப்டஸ் எண்ணெய், கேமொமைல் எண்ணெய், ஜாஸ்மின் எண்ணெய், ரோஸ் எண்ணெய் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்தால் தெளிவான முகம் கிடைக்கும்.
கடுமையான வெப்பம் உடலை மேலும் பாதிக்கும். இதனால் உடல் ஓய்வின்றி தவிக்கும். இதைத் தடுக்க உடலுக்கு ஓய்வு தரும் விதமாக கேமொமைல் எண்ணெய், லாவண்டர் எண்ணெய், ஆரஞ்சு எண்ணெய் மற்றும் ஏலக்காய் எண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒன்றை தடவி உடல் முழுவதும் மசாஜ் செய்தால் உடல் நல்ல ஓய்வு பெற்று நிம்மதியான உறக்கம் வரும்.
டிஹைட்ரேஷன் காரணமாக சரும வறட்சி ஏற்பட்டு சருமச் சுருக்கங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதற்கு ரோஸ் எண்ணெய், ஏலக்காய் எண்ணெய், டீ ட்ரீ எண்ணெய், கிராம்பு எண்ணெய் ஆகியவற்றில் ஒன்றைப் பயன்படுத்தலாம்.
கோடைகாலத்தில் வெளியாகும் எண்ணெய் முகப்பருக்களை உண்டாக்கும். இதற்கு டீ ட்ரீ எண்ணெய், ரோஸ்மெர்ரி எண்ணெய். அல்கினா எண்ணெய் போன்ற எண்ணெய்களைப் பயன்படுத்தினால் நாளடைவில் சரியாகும்.