கொரோனா பரவல் காரணமாக வீடுகளுக்கு நேரில் சென்று மின் கணக்கீடு செய்ய முடியாத சூழல் உள்ளதால், முந்தைய மாத மின்கட்டணத்தையே மே, ஜூன் மாதங்களில் வசூலிக்க வேண்டும் என்று மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கோரிக்கை விடுத்துள்ளது
இதுதொடர்பாக மின்வாரிய தலைவருக்கு தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் தீவிரமாக பரவி வரும் கொரோனா 2-வது அலையில் சிக்கி, ஏராளமான மின்வாரிய ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியிலும் மின்வாரிய ஊழியர்கள், வீடுகளுக்கு சென்று மின் கணக்கீடு செய்தல், மின் தடை நீக்கம் செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்வதால், நோய்த் தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, வரும் நாட்களில் அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும் 50 சதவீத ஊழியர்களை சுழற்சி முறையில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.
மேலும், மின்நுகர்வோரின் வீடுகளுக்கு நேரில் சென்று மின்சாரம் கணக்கீடு செய்ய முடியாத நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, முந்தைய மாத மின்கட்டணத்தையே மே, ஜூன் மாதங்களில் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிகளில் வேலை நேரம் மதியம் 2 மணி வரை குறைக்கப்பட்டது போல, மின்கட்டண வசூல் மையங்களில் பணி நேரத்தை மதியம் 1.30 வரை குறைக்க வேண்டும்.
தற்போதைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நேரடி ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதையும், பயிற்சி மையத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்துவதையும் அனைத்து அலுவலர்களும் கைவிட வேண்டும்.
வயது வித்தியாசம் இன்றி மின்வாரிய பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட அனைத்து அலுவலகங்களிலும் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.