June 21, 2021, 3:11 am
More

  ARTICLE - SECTIONS

  ஹரியும் நீ ஹரனும் நீ உணர்ந்த நரஹரி!

  panduranga
  panduranga

  பக்தர்களில் வீரசைவர், வீர வைஷ்ணவர் என்று சிலரை நாம் இன்றும் பார்க்கிறோம், அவர்கள் தாம் வழிபடும் தெய்வத்தைத் தவிர வேறு எந்த தெய்வத்தையும் வழிபட மாட்டார்கள். கண்ணாலும் பார்க்க மாட்டார்கள். அப்படி இருந்தாலும் பரவாயில்லையே. மற்றவர்கள் சொன்னாலோ எழுதினாலோ அதை ஆக்ஷேபிப்பது தான் அதிக பக்ஷம்.

  அப்படிப்பட்ட ஒரு வீர சைவன் தான் நரஹரி… ரொம்ப கெட்டிக்கார பொற்கொல்லன் மிகச்சிறந்த நகைகளை தங்கத்தில் வடிப்பவர். நாணயமானவர் என்று பேர் பெற்றவர்.

  பண்டரிபுரத்திலேயே இருந்தும் விட்டலன் கோவில் கோபுரத்தை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டார். கழுத்தை ஒடித்து வேறு புறம் திரும்பிக் கொள்பவர்.

  கோவிலுக்கு அருகே அவனுக்கு ஏதாவது வேலை இருந்தாலும் கோவிலுக்கு பின் பக்கமாக சுற்றிக்கொண்டு தான் செல்வார்!

  விடியற்காலையில் பீமாரதி நதியில் குளித்துவிட்டு மல்லிகார்ஜுன சுவாமியை மனதார வழிபாட்டு 24 மணிநேரமும் சிவ சிவ என்று உச்சரித்துக் கொண்டே தன் காரியங்களைப் பார்ப்பார்.

  ஒரு குழந்தை எப்படி தன் தாயிடம் மட்டும் செல்லுமோ அப்படியே நரஹரி மல்லிகார்ஜுனனை மட்டுமே ஏற்றுக்கொண்டு சிறந்த ஒரு சிவ பக்தனாக விளங்கினார்.

  அதற்காக அவன் பாண்டுரங்கனை தூஷித்தோ, விட்டல பக்தர்களின் மனம் புண் பட எதாவது பேசியோ, நடந்தாரா என்றால், பாவம், அவர் மீது அபாண்டமாக ஒன்றும் சொல்லக்கூடாது. அதற்கு அவருக்கு நேரம் கிடையாது.

  அவரை எல்லோரும் மதிக்கும்படியாகவே வாழ்ந்து வந்தார்.

  பக்கத்து ஊரில் ஒரு பணக்கார வியாபாரி, அவர் மகளுக்கு பல முயற்சிகளுக்கு பிறகு ஒரு நல்ல இடத்தில் சம்பந்தம் கிடைத்து. வியாபாரிக்கு மட்டற்ற மகிழ்ச்சி இருக்குமல்லவா? அவர் ஒரு விட்டல பக்தர்.

  “விட்டலா, உன் அருளால் தான் என் பெண் ஒரு நல்ல இடத்தில் மருமகளானாள். உன் கருணைக்கு நான் எப்படி கைம்மாறு செய்வேன் என்று அவர் வேண்டிக் கொண்டிருக்கும்போது விட்டலன் சந்நிதியில் அவர் அருகில் அப்போது நின்று கொண்டிருந்த ஒரு முதிய பக்தர், “அப்பா, நீ யார், எங்கிருக்கிறாய்?” என்று கேட்டார்.

  “சுவாமி, நான் பக்கத்து ஊர், அரிசி பருப்பு மண்டி வியாபாரம் செய்கிறேன் என்றார்”

  விட்டலன் இடுப்பில் ஒரு தங்க ஒட்டியாணம் செய்து போடேன் . கண்ணுக்கு ஜக ஜோதியாக இருக்கும் பக்தர்கள் கண்டு மகிழ்வார்களே!” என்றார் முதியவர்.

  ஆஹா, இது விட்டலனே என்னிடம் நேரில் வந்து கட்டளை இட்டது போல் படுகிறது, உடனே அவ்வாறே செய்கிறேன் என்றார்.

  வீட்டில் மனைவியோடு கலந்து பேசி பணத்தை திரட்டினான், முடிந்த அளவு தேவையான தங்கம் வைரம், மரகதம், முத்து, கோமேதகம், பவழம் என்று நிறைய வித விதமான ஆபரண கற்களும் வாங்கினார்.

  யார் யாரையோ விசாரித்தார், பலர் “பண்டரிபுரம் நரஹரியிடம் போய்க் கேளுங்கள். சுத்தமானவர் நாணயமாக சரச விலையில் செய்து கொடுப்பார் என்றார்கள்.

  நரஹரி வீட்டை விசாரித்து அறிந்து கொண்டு வந்து கதவை தட்டினார்.

  நரஹரி சிவபூஜையில் இருந்ததால் காத்திருந்து, பிறகு பேச்சு தொடர்ந்தது.
  “வாருங்கள், பூஜையில் இருந்ததால் பாதியில் விட்டு விட்டு வரமுடியவில்லை, யார் நீங்கள்? என்ன வேண்டும்?” என்றார் நரஹரி.

  நான் பக்கத்து ஊரில் வியாபாரம் செய்கிறவன், எனக்கு உங்களிடம் ஒரு காரியம் ஆக வேண்டும்? என்றார்.

  ஆஹா, மல்லிகார்ஜுனன் அருளால் முடிந்தால் செய்கிறேன் என்றார் நரஹரி.

  “இந்த பண்டரிபுரத்தில் விடோபாவுக்கு ஒரு தங்க ஒட்டியாணம் செய்து கொடுக்க வேண்டும்? என்றார் வியாபாரி.

  முடியாதே சுவாமி, நான் ஹரி பக்தன் அல்ல, மேலும் சிவன் கோவில் அன்றி எந்த கோவிலுக்கும் நான் செல்வதில்லையே? என்றார்.

  கேள்விப்பட்டேன், அதற்கு ஒரு வழியும் செய்து தான் வந்தேன், பாண்டுரங்கன் இடுப்பு சுற்றளவு வாங்கி வந்திருக்கிறேன், நீங்கள் செய்து கொடுத்தால் அதை எடுத்து சென்று கோவிலில் அளிக்கிறேன்” என்றார் வியாபாரி.

  அப்படியென்றால் ஒரு ஆக்ஷேபணையுமில்லை, இன்னும் ஒரு வாரத்தில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்” என்றார் நரஹரி.

  இப்படியும் ஒருவரா? பண்டரிபுரத்திலேயே இருந்தும் கூட விட்டலனை நேரில் பார்க்காமல் ஒருவனா? நமக்கென்ன? நல்லவனாக இருக்கிறார், வேலையில் கெட்டிக்காரன் என்று சொல்கிறார்களே!’ என்று நினைத்துக்கொண்டார் வியாபாரி.
  ஒருவாரத்தில் அருமையான ஒட்டியாணம் தயாரானது.

  இதை எடுத்துக்கொண்டு சென்று சரியாக இருக்கிறதா என்று போட்டுபாருங்கள், நீங்கள் கொடுத்த அளவுக்கே செய்திருக்கிறேன்” என்றார் நரஹரி.

  ரொம்ப சந்தோஷத்தோடு கற்கள் மின்னும் தங்க ஒட்டியாணத்தை எடுத்துக்கொண்டு சந்திரபாகா நதியில் குளித்துவிட்டு பூஜா சாமான்களுடன் கோவிலுக்கு சென்று அர்ச்சகரிடம் கொடுத்து விட்டலனுக்கு இடுப்பில் பூட்டினார் வியாபாரி.

  பாதி இடுப்புக்கு கூட ஒட்டியாணம் வரவில்லை! அளவு எப்படி தப்பாக செய்தார் நரஹரி?

  அர்ச்சகரை மீண்டும் அளவு எடுக்க சொன்னார். அளவு சரியாகவே இருந்தது அனால் ஒட்டியாணம் இடுப்பு அளவுக்கு சுற்றி வரவில்லையே? மீண்டும் நரஹரியிடம் வந்தார்.

  விஷயம் அறிந்த நரஹரி அவர் புதிதாக கொடுத்த அளவுக்கு ஒட்டியாணத்தை நீட்டி தந்தார். மீண்டும் விட்டலன் இடுப்பில் அணிவித்தபோது இடுப்பில் அது பெரியதாக இருந்தது. தொள தொள வென்று நழுவியது. மீண்டும் அளவெடுத்து நரஹரியிடம் வந்தது.

  மூன்று முறை இதுபோல் ஒட்டியாணம் விட்டலனுக்கும் நரஹரிக்கும் இடையே பயணம் செய்தது.

  நான் என்ன அபசாரம் செய்தேன்? ஏன் என்னுடைய காணிக்கையை விட்டலன் ஏற்கவில்லை? அளவு சரியாக இருந்தும் ஏதேனும் குறை தென்படுகிறதே!” மனதில் விசனத்தோடு கண்களில் நீரோடு நரஹரியிடமே ஓடினார் வியாபாரி.

  விஷயத்தை அமைதியாக கேட்டார் நரஹரி. “நீங்களே நேரில் வந்து அளவெடுத்து பூட்டினால் தான் ஒட்டியாணம் விட்டலன் மேல் ஏறும் போல் இருக்கிறது” என்றார் வியாபாரி.

  அதற்கு நரஹரி, “சுவாமி நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேனே, சிவனைத் தவிர என் கால் எந்த கோவிலுக்கும் செல்லாது, கண் எந்த தெய்வத்தையும் பார்க்காது என்று.

  பிறகு மீண்டும், மீண்டும் மிகவும் கெஞ்சிக் கேட்டார் வியாபாரி.

  சரி சுவாமி நான் வருகிறேன் எனக்கு பல்லக்கு ரெடி பன்னுங்கள் என் கால்கள் அக்கோவிலை மிதியாது என்றார், பல்லக்கும் தயாரானது
  கடைசியில் நரஹரி கண்களை கட்டிக் கொண்டு விட்டலன் ஆலயம் சென்று பாண்டுரங்கன் இடுப்பை தானே அளவெடுத்து ஒட்டியாணம் சரி செய்ய ஒப்புக்கொண்டார்.

  கை நீட்டி காசு வாங்கிய பிறகு செய்யும் வேலை சுத்தமாக இருக்க அவர் இதற்கு ஒப்புக் கொள்ள நேரிட்டது.

  கண்ணைக் கட்டிக்கொண்டு அழைத்து வரப்பட்ட நரஹரியை பார்த்து எல்லோரும் சிரித்தார்கள், உள்ளே சென்றார். விட்டலன் முன்னே நிற்க வைக்கப்பட்டார், அளவு நூலை கையில் எடுத்துக் கொண்டார், விட்டலன் உருவத்தை தடவிப் பார்த்தார். இடுப்பில் மெத்து மெத்தென்று தோல் ஸ்பரிசப்பட்டது, நன்றாக தடவினார், துணியில்லை, தோல்தான், இடுப்பை சுற்றி தடவும்போது நான்கு கைகள் இருப்பது உணர்ந்தார்.

  narahari
  narahari

  கவனத்தோடு தடவி என்ன என்று சோதித்தார். ஒரு கையில் டமருகம், ஒரு கையில் அக்னி, ஒரு கையில் சூலம், இது என்ன அதிசயமாக இருக்கிறதே?!
  மீண்டும் இடையில் கைவைத்தார். நிச்சயம் இது புலித்தோல்தான்.

  அவருக்கு வியர்த்துக் கொட்டியது. “என் மல்லிகார்ஜுனனா இது. விட்டலனிடம் அல்லவே அழைத்து வரப்பட்டேன்?”

  சந்தேகத்துக்கு கையை மேலே கொண்டுபோனார் நரஹரி. கழுத்தில் ஒரு பாம்பின் உடல் ஸ்பரிசமானது, இன்னும் மேலே கை சென்றது தலை, ஜடா முடி அதை தடவினார்.

  இன்னும் மேலே. இது என்ன வளைந்து? ஓ.. ஓ.. பிறை சந்திரனா? இது என்ன மீண்டும் ஒரு பாம்பு, ருத்ராக்ஷ மாலை. மேலே கை தலையை சோதிக்கும்போது அவர் முகம் விட்டலன் அருகே இருந்ததல்லவா? கம்மென்று பன்னீர் கலந்த விபூதி வாசனை மூக்கைத் துளைத்தது.

  நரஹரிக்கு பரிச்சயமான விஷயமாச்சே! “ஓம் நமசிவாய” என்று சொல்லிக்கொண்டே கண்ணைக் கட்டியிருந்த துணியை பிடுங்கி எறிந்தார் நரஹரி.

  ஆவலாக நோக்கின அவர் கண் முன்னே சிரித்துக்கொண்டே இடுப்பில் கை கட்டி விட்டலன் துளசி மாலையோடு நின்று கொண்டிருந்தான்.

  என்ன இது வேடிக்கை? நான்தான் ஏதோ மனதில் சிவனை எண்ணிக்கொண்டே அளவு எடுக்க வந்தேனோ?” விட்டலனைப் பார்த்த தன் கண்களை மீண்டும் மூடிக்கொண்டார்.

  கை அளவெடுக்க ஆரம்பித்தது, மீண்டு அதே பழைய அனுபவம், கண்களை திறந்தால் விட்டலன், மூடினால் மல்லிகார்ஜுனன்.

  “என் பரமேஸ்வரா! இது என்ன சோதனை எனக்கு?”

  பரமேஸ்வரன் குரல் நரஹரிக்கு மட்டும் கேட்டது, “நானே விட்டலன்!”
  கண்ணைக் கட்டிய துணியை அவிழ்த்து எறிந்தார்.

  சாஷ்டாங்கமாக கீழே விழுந்த நரஹரி, “ஹே, விட்டலா! என்னை மன்னித்து விடு. என் பரமேஸ்வரனும் நீயே என அறிந்தேன் அறியாமையில் செய்த தவறை பொருட்படுத்தாதே, திருந்தி விட்டேன்!” என்று நெஞ்சம் உருகினார்.

  ஒட்டியாணம் அளவு கச்சிதமாக வந்தது. அவர் அன்போடு செய்த ஒட்டியாணம் விட்டலனால் ஏற்கப்பட்டது

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  22FollowersFollow
  74FollowersFollow
  1,261FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-