October 12, 2024, 8:11 AM
27.1 C
Chennai

அநீதி அரசை பூண்டோடு தண்டித்த தர்மம்: பரசுராம ஜெயந்தி!

parasuramar
parasuramar

நல்லவர்களுக்கு எப்பொழுதெல்லாம் துன்பம் நேருகின்றதோ, அப்பொழுதெல்லாம் இறைவன் விஷ்ணு அவதாரம் எடுத்து, நல்லவர்களை தீயவர்களிடமிருந்து காத்தருளி இருக்கின்றார். அவருடைய அவதாரங்களில் மிகவும் போற்றுதலுக்குறிய அவதாரங்கள் தசாவதாரங்கள் என சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.

விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர் பிறப்பால் பிராமணர் ஆவார். அவர் சப்த ரிஷிகளில் ஒருவரான ஜமதக்னி முனிவருக்கும், ரேணுகாதேவிக்கும் மகனாக த்ரேதா-யுகத்தில் அவதரித்தார். சனாதன தர்மத்தில் கூறப்பட்டுள்ள ஏழு சிரஞ்சீவிகளில் இவரும் ஒருவர்.

அந்த தசாவதாரத்தில் ஒரு அவதாராம் மற்றொரு அவதாரத்தை சந்தித்துக் கொள்வது என்பது மிகவும் அரிதாகும். ஆனால், விஷ்ணுவின் பரசுராம அவதாரம், அவருடைய மற்றொரு அவதாரமான ராமரை சந்தித்தது. எனவே பகவானின் சிறப்பு மிக்க அவதாரமாக பரசுராம அவதாரம் கருதப்படுகின்றது.

பரசுராமரின் பெற்றோர் சிவனை நோக்கி தவம் செய்தார்கள். அந்த தவத்தின் பயனாக அவர்களுக்கு ஐந்தாவது மகனாகவும், விஷ்ணுவின் ஆறாவது அவதாரமாகவும் பரசுராமர் அவதரித்தார். அவருக்கு ‘ராமபத்ரா’ என்கிற பெயரும் சூட்டப்பட்டது

நான்கு மறைகளையும் கற்றறிந்த வேத விற்பன்னர் ஜமதக்னி. அவரது கற்பிற் சிறந்த மனைவி ரேணுகா. நாள்தோறும் கணவர் துயில் எழுமுன்னரே ரேணுகா எழுந்து, பர்ணசாலையின் முன்வாசலை சுத்தம் செய்துவிட்டு, மாக்கோலமிட்டு விட்டு, கணவரின் பாதங்களைத் தொட்டு வணங்கிவிட்டு, கங்கைக் கரைக்கு செல்வாள்.

ஆற்றில் நீராடிவிட்டு, ஆதவனை வணங்கி விட்டு, ஆற்று மணலை கைகளாலேயே பிசைந்தெடுத்து, ஒரு குடத்தை வடிவமைப்பாள். அவளது கரம் பட்டவுடனேயே, ஆற்று மணல் களிமண்ணாக மாறி, குடமாகவும் உருவெடுக்கும். கற்புக்கரசியான அவளது கரங்களுக்கு அத்தனை சக்தி. ஒருநாள் பொழுது புலரும் நேரம் நெருங்கிவிட்டதால், ரேணுகா அவசர அவசரமாக எழுந்தாள். விடிவெள்ளியைக் காண்பதற்காக வானத்தை அண்ணாந்து பார்த்தவாறே ஆற்றை நோக்கிப் புறப்பட்டாள். அப்போது வான வீதியில் சித்திர ரதன் எனும் கந்தர்வன், பறந்து சென்று கொண்டிருந்தது ஒரு கணம் அவளது பார்வையில் பட்டது. அவ்வளவுதான். அந்த கந்தர் வனின் அழகு சொரூபம், கம்பீரம்… அவளுடைய சிந்தை நிலைகுலைந்தது. அவள் உடல் நடுங்கியது. தன் எண்ணம் சிதறியது நியாயம்தானா என்று பதறினாள். இருப்பினும், அவள் வழக்கம்போல் நீராடிவிட்டு, ஆற்று மணலைப் பிசைந்தாள்.

தினமும் சட்டென உருவாகிவரும் மண்குடம் அன்று உருக்குலைந்தது. தன் மனத்தடுமாற்றத்துக்கான தண்டனையோ என்று தன்னையே நொந்துகொண்டாள்.
அதேநேரம் ஜமதக்னி முனிவரும் விழித்துக் கொண்டார். தனது ஞான திருஷ்டியால் நடந்த சம்பவங்களை அறிந்தார். பத்தரைமாற்றுத் தங்கமாக, பதிவிரதையாக இருந்த தன் மனைவி, ஒரு கந்தர்வனின் அழகில் மயங்கி நிலை குலைவதா..? குமுறினார், ஜமதக்னி. தனது ஐந்து குமாரர்களையும் அழைத்து, உடனே நதிக்கரை சென்று, தாயின் தலையைத் துண்டித்து வருமாறு பணித்தார். தாயைக் கொல்வதா? இது என்ன விபரீதம்! எங்களால் முடியாது என, மூத்த குமாரர்கள் நால்வரும் மறுத்து விட்டனர். ஐந்தாவது குமாரன், தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பதை உணர்ந் தவன். அவன் தான் பரசுராமன். புறப்பட்டான் கோடரியுடன்… ஆற்றின் கரையில் அழுது கொண்டிருந்த தன் அன்னையின் தலையை வெட்டிவிட்டுத் திரும்பினான்.

அவனது கீழ்படியும் செயலில் மகிழ்ந்தார் ஜமதக்னி. எதற்காக தாயையே சிரச்சேதம் செய்யச் சொல்கிறீர்கள்? என்ன குற்றம் செய்தாள் அவள்? என்று கேள்வி எதையும் எழுப்பாமல், தகப்பன் இட்ட ஆணையை உடனே நிறைவேற்றிட்ட மைந்தனின் செயலால் மகிழ்ந்த முனிவரின் சினமும் தணிந்தது. ‘‘உன் செயலால் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன் மகனே. என்ன வேண்டும் உனக்கு? தயங்காமல் கேள்’’ என்றார் ஜமதக்னி. ‘‘எனது தாயை மீண்டும் எங்களுக்கு உயிர்பித்துத் தரவேண்டும். இன்று நிகழ்ந்தவை அனைத்தும் அவளது மனதில் படியாது மறைந்திட வேண்டும்’’ என்று கோரி பரசுராமன் தந்தையாரின் பாதம் பணிந்தான். தனயனின் தாயன்பு கண்டு மெய்சிலிர்த்தார் ஜமதக்னி. ‘அப்படியே ஆகுக’ எனக்கூறி, ரேணுகாவையும் மன்னித்தருளினார்.

இப்படிப்பட்ட புத்திர ரத்தினத்தை பெற்றெடுக்க ஜமதக்னி வழிபட்ட பல திருத்தலங்களில் தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகிலுள்ள முழையூரும் ஒன்று. முனிவருக்கு பரசுராமன் என்ற அவதார புருஷனை அனுக்ரகித்த ஈஸ்வரன், இங்கே பரசுநாதராக அருட்பாலிக்கிறார். இந்த முழையூர் திருக்கோயிலில் அட்சய திருதியை அன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. திருமலை ராயன் ஆற்றில், பரசுநாதர் எழுந்தருளி, தீர்த்தவாரி காண்கிறார். கல்வியில் சிறப்புத் தேர்ச்சி பெற விரும்பும் மாணவ, மாணவியர் எட்டுப்பட்டை கொண்ட கம்பீரமான சிவலிங்கத் திருமேனியையும், அறிவுக் கண் திறப்பவளான ஞானாம்பிகையையும் வணங்கி வழிபட வருகிறார்கள். அட்சய திருதியை அன்று, முதல் ஜாமத்தில் அவதரித்தார் பரசுராமர்.

அதனால் ஜெயந்தியும், அட்சய திருதியையும் சேர்ந்தே வரும். அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கும் வழக்கம் இப்போது பெருகி வருகிறது. அதைவிட அன்றைய தினம் இல்லாதவர்களுக்கு தானம் வழங்குவது மிகவும் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. குறிப்பாக குடை, செருப்பு, குடிநீர், உணவு ஆகியவற்றை தானமாக வழங்குவது சிறந்த பலனைத் தரும். குன்றாத வளர்ச்சியைக் குறிக்கும் நாள் ஆனதால், அட்சய திருதியை அன்று துவங்கும் எந்தத் தொழிலும், தடையின்றி அதிவேகமாக முன்னேறிடும் என்பது நம்பிக்கை. அட்சய திருதியை அன்று இறைவன் திருவருளோடு துவங்கும் எல்லா ஆக்கபூர்வப் பணிகளும், அள்ள அள்ளக் குறையாமல் வளர்ந்தோங்கும்.

ALSO READ:  கோமதி அஷ்டகமும் ஸ்ரீ சிருங்கேரி மஹாஸ்வாமிகளும்!

பரசுராமர் பிறப்பால் ஒரு பிராமணராக இருந்தாலும் கூட, அவரிடம், ஷத்ரியர்களுக்கே உரித்தான துணிச்சல் மற்றும் போர்க்குணங்கள் நிறைந்திருந்தது. அதனால் அவர் ‘பிரம்மா-ஷத்திரியர்’ என்றே அழைக்கப்பட்டார். அவருடைய போர்த்திறமையால் இந்த பூமியில் இருந்த அனைத்து மோசமான ஷத்ரியர்களையும் 21 தலைமுறை வரை கொன்றழித்தார்.

பரசு என்கிற வார்த்தைக்கு ‘கோடாரி’ என்று பொருள். அதனால் பரசுராமர் என்கிற சொல்லை ‘கோடாரி தாங்கிய ராமர் ‘ என நாம் பொருள் கொள்ளலாம். நமது வரலாற்று புனைவுகள், ‘பரசுராமர் அவரது வழியில் குறுக்கிட்ட ஷத்ரியர்கள் அனைவரையும் அழித்தார், அதன் காரணமாக இந்த பூமியில் ஷத்ரிய பரம்பரையே இல்லாது போகும் அபாயம் ஏற்ப்பட்டது’ எனத் தெரிவிக்கின்றது.

பரசுராமருக்கு அவரது இளவயதில் இருந்தே ஆயுதங்களின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. பரசுராமர் சிவனைக் குறித்து கடும் தவம் புரிந்தார். அந்த தவத்தின் பயனாக சிவன் அவர் முன் தோன்றி பரசுராமருக்கு ஒரு தெய்வீகமான கோடாரியை வரமாக அளித்தார். ஆனால் பரசுராமர் கோடாரியை வரமாகப் பெறும் முன் தன்னுடைய தகுதியை, தன்னுடைய ஆன்மீக குருவான சிவனிடம் நிரூபித்தார். இந்த தெய்வீக ஆயுதத்தை பெற்ற பிறகே ‘ராமபத்ரா’ என அறியப்பட்ட அவர், ‘பரசுராமர்’ என அழைக்கப்பட்டார்.

parasuramar 1
parasuramar 1

சிவன், பரசுராமரின் போர் திறமையை சோதிக்க பரசுராமரை போருக்கு அழைத்தார். குருவிற்கும் சிஷ்யனுக்கும் இடையே மிகப் பயங்கர யுத்தம் 21 நாட்கள் வரை நீடித்தது.

இறைவன் சிவன் பரசுராமரின் போர் திறன்களைக் கண்டு மகிழ்ச்சியடைதல்
குருவிற்கும் சிஷ்யனுக்கும் நடந்த போரின் போது, இறைவன் சிவனின் திரிசூலத்தை தவிர்க்கும் பொருட்டு, பரசுராமர் சிவனை, அவருடைய நெற்றியில் தன்னுடைய கோடாரி கொண்டு தாக்கினார். சிவன் அவருடைய சீடரின் போர் கலையில் மிகவும் மகிழ்ந்து போனார். அவர் தன்னுடைய காயத்தை ஆரத் தழுவி அதை நிரந்தரமாக பாதுகாத்தார். அதன் பின்னர் அவரது சீடரின் புகழை உறுதி செய்தார். அதன் பின்னர் ‘கந்த-பரசு’ என அழைக்கப்பட்டு வந்தார்.

சூரிய குலத்திலே கேகய நாட்டை ஆண்டு வந்த கிருதவீரியன் என்பவனுக்கும் சுனந்தை என்பவளுக்கும் கார்த்தவீர்யார்ச்சுனன் என்பவன் பிறந்தான். அவன் பிறக்கும் போது கைகள் கிடையாது. அதைக் கண்டு பெற்றோர்கள் மிகவும் வருந்தினார்கள். தன் கையிலாக் குறை நீங்க கார்த்தவீர்யார்ச்சுனன் தத்தாத்திரேயரையே உபாசித்து வந்தான். தத்தாத்திரேயர் என்பவர் அத்திரி முனிவருடைய புதல்வர். அத்திரிமுனி பரந்தாமனிடம் அவரே வந்து தனக்குப் பிள்ளையாகப் பிறக்க வேண்டும் என விரும்பினார். ஆகவே ஸ்ரீஹரி அம்சமாகத் தத்தாத்திரேயர் அவதரித்தார். அவரைத் தான் அவன் வழிபட்டு வந்தான். அவரை நோக்கித் தவம் செய்த காரணத்தால் அவனுக்கு ஆயிரம் கைகள் முளைத்தன. அதுமட்டுமல்ல. அவனைக் கண்டால் பகைவர்கள் பயப்படும் தன்மையையும் இந்திரிய சக்தி, செல்வம், பொருள் மற்றும் யோகஞான சக்திகளையும் அவன் பெற்றான். இத்தகைய சீரும் சிறப்பும் பெற்றதினால் மிகுந்த செருக்குடன் இருந்தான். தத்தாத்திரேயரிடம் பெற்ற வரத்தால் அவன் காற்றைப் போல எங்கும் தடையின்றித் திரியும் வல்லமையும் பெற்றிருந்தான். அதனால் மூன்று உலகங்களிலும் சஞ்சரித்து வந்தான். ஒரு சமயம் நர்மதா நதியில் தன் பத்தினிகளுடன் நீராடச் சென்றான். தன் ஆயிரம் கைகளால் நீரை ஏரி போல் தேக்கி அதில் நீராடி மகிழ்ந்தனர். நதியின் மேற்புறமாக திக் விஜயம் செய்வதற்காக இராவணன் ஆற்றில் வெள்ளமே இல்லாத இடத்தில் தன் லிங்கத்தை வைத்து சிவபூஜை செய்தான். நீராடி முடித்ததும் கார்த்தவீரியார்ச்சுனன் தான் அணைபோல் வைத்திருந்த தன் ஆயிரம் கைகளை எடுத்ததான். அப்போது நீர் வேகமாக பிரவாகம் எடுத்து பூஜை செய்து கொண்டிருந்த ராவணனின் பொருட்களை அடித்துச் சென்றது. இதை அறிந்த ராவணன் கார்த்தவீரியனோடு சண்டைக்குப் போனான். கார்த்தவீரியனோ ராவணனை தோற்கடித்து தன் பட்டணமான மாகிஷ்மதிக்குக் கொண்டு சென்று சிறைவைத்தான். இதை அறிந்த புலஸ்தியர் கார்த்தவீரியனை மிகவும் வேண்டிக் கொண்டு ராவணனை மீட்டுச் சென்றான்.

ஒரு நாள் தன் பரிவாரங்களுடன் காட்டுக்கு வேட்டையாடப் போனான் கார்த்தவீரியன். வேட்டையை முடித்துவிட்டு திரும்புகையில் ஜமதக்னி முனிவருடைய ஆசிரமத்திற்கு வர நேர்ந்தது. பசியால் வாடிய அவர்களைக் கண்ட முனிவர் அறுசுவை உண்டியும், பானமும் கொடுத்தார். மற்றும் பல சவுகர்யங்களையும் செய்து கொடுத்தார். தவிர ஆசிரமத்தில் ஏராளமான செல்வமும் இருப்பது கண்டு கார்த்தவீரியனுக்கு பெரிய ஆச்சர்யம் ஏற்பட்டது. முனிவர் ஆசிரமத்தில் நின்ற தேவ பசுவாகிய காமதேனுவால்தான் அவருக்கு அனைத்தும் கிடைக்கிறது என்று தெரிந்து கொண்டான். அந்த பசுவை ஜமதக்னி முனிவரிடம் தனக்கு பரிசாகத் தரும்படிக் கேட்காமல் முனிவரும், அவர் பிள்ளைகளும் இல்லாத சமயத்தில் சேவகர்களை அனுப்பி அதைத் தூக்கிக் கொண்டு சென்றான். முனிவர் ஆசிரமத்திற்கு திரும்பி வந்த நேரம் காமதேனு அங்கு இல்லை. கார்த்தவீரியன் தான் அதை கவர்ந்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்த முனிவர், தனது புதல்வர் பரசுராமரிடம் கூறினார். இதைக் கேள்விப்பட்ட பரசுராமர் தன் கோடாரி, வில், அம்புகளுடன் நேரே கார்த்தவீரியன் பட்டணமான மாகிஷ்மதிக்கு விரைந்தார். அங்கே கார்த்தவீரியனின் சேனைகள் அனைத்தையும் அழித்தார். கார்த்தவீரியனும் அவருடன் சண்டைக்கு வந்தான். ஆயிரம் கைகளில் ஐந்நூறு வில் ஏந்தி பாணக்கூட்டத்தை அவர் மீது வீசினான். அவனுடைய ஆயிரம் கைகளையும் பரசுராமர் தன் தபோ பலத்தால் அறுத்து எறிந்ததோடு, அவனுடைய சிரசையும் சீவித் தள்ளினார். பிறகு காமதேனுவையும் அதன் கன்றையும் மீட்டு ஆசிரமத்தில் சேர்ப்பித்தார் பரசுராமர். நடந்ததை எல்லாம் தன் தந்தையிடம் தெரிவித்தார். அதைக் கேட்டு அவர் மிகவும் வருந்தினார்.

ALSO READ:  கோகுலாஷ்டமியும் கிருஷ்ண ஜயந்தியும்!

ராமா, காரணம் இல்லாமல் ஓர் அரசனைக் கொன்று விட்டாயே! அரசனைக் கொல்வது ஓர் அந்தணனை வதை செய்வதைவிடக் கொடிய குற்றம். அரசன் என்பவன் ஆண்டவனின் அம்சம் என்று சாஸ்திரங்கள் பறைசாற்றுகின்றன. செய்த தீமையை மறந்து தீயவர்களை மன்னிப்பது தான் பிராமண தருமம். மேலும் நாம் பொறுமையை கடைபிடிப்பதால் தான் அனைவராலும் பூஜிக்கப்படுகிறோம். இத்தகைய பெரிய பாவத்தை செய்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரைக்குப் போய் பல புண்ணிய க்ஷேத்திரங்களை தரிசனம் செய்துவிட்டு வா! என்றார். தந்தையின் அறிவுரை கேட்டு அதன்படி பரசுராமர் ஓராண்டு காலம் தல யாத்திரை செய்தார்.

தந்தையை இழந்த கார்த்தவீரியன் புதல்வர்கள் ஜமதக்னி முனிவரிடமும், பரசுராமரிடமும் பகைமை பாராட்டி வந்தார்கள். அதனால் பழிக்குப் பழி வாங்க தீர்மானித்தார்கள்.

ஒரு நாள் ஜமதக்னி முனிவர் ஆழ்ந்த நிஷ்டையில் இருந்தார். பரசுராமரும் தன் சகோதரர்களுடன் ஆசிரமத்தை விட்டு வெளியே போயிருந்தார். ரேணுகா தேவி மட்டும் ஆசிரமத்தில் இருந்தாள். அப்போது ஆசிரமத்தில் கார்த்தவீரியனின் புதல்வர்கள் ரகசியமாக நுழைந்தனர். அவர்களில் ஒருவன் கையில் வெட்டரிவாளுடன் முனிவர் பக்கம் போகும் போதே ரேணுகா தேவி சிரசு வெடிக்கும்படி கதறினாள்.

அரசகுமாரர்களே! அவர் ஓர் அந்தண சிரேஷ்டர். மகா முனிவர். தயவுசெய்து அவரை வெட்டி வீண்பழிக்கு ஆளாகாதீர்கள் என்று அலறினாள். நச்சுப்பகை கொண்ட அந்த ராஜன்மார்களுக்கு அவளுடைய கூக்குரல் நரகமாக இருந்தது. ஓங்கின வாள் மேலும் உயர்ந்தது. ஒரே வெட்டு, ஜமதக்னி முனிவர் தலை தரையில் உருண்டது. சீலவதியின் கண்ணீர் ரத்தமும் கரை புரண்டு தரையை மட்டுமா நனைத்தது? தரும தேவதைகளையும் தலை முழுகச் செய்தது. கொய்த தலையை கொடியவர்கள் கொண்டு போனார்கள்.

அவளுடைய அலறலைக் கேட்டு பரசுராமர் ஓடோடி வந்தார். நடந்ததை அறிந்தார். அவரது நாடி நரம்புகள் துடித்தன. அப்பொழுதே இந்தக் கொடிய க்ஷத்திரியப் பூண்டை அடியோடு அழிப்பேன் என்ற சபதம் எடுத்தார். பரசுராமர் மாகிஷ்மதி நகருக்கு விரைந்தார்.

அரச குமாரர்களின் தலைகளை அறுத்து மலைகளாகக் குவித்தார். ரத்த ஆறு ஓடியது. குருக்ஷேத்திரத்தில் இருந்த குளங்களில் தண்ணீருக்குப் பதிலாக இரத்தம் நிரம்பி வழிந்தது. தன் தகப்பனார் தலையைக் கொண்டு வந்து உடலுடன் சேர்ந்தார். ஈமச் சடங்குகளைச் செய்தார். பூமியில் உள்ள க்ஷத்திரிய வம்சம் அற்றுப் போகும்படி இருபத்தொரு திக்விஜயம் செய்து வேரறுத்தார்.

அந்தப் பாவம் தீர வேள்வி செய்தார். அந்த வேள்வியில் கிழக்குத் திசையை அத்துவரியவுக்கும், வடக்கை உதகாதாவுக்கும், மத்திய தேசத்தை ஆசியபருக்கும், ஆரிய வர்த்தத்தை உபதிரஷ்டாவுக்கும் அதற்கு அப்பால் உள்ள பிரதேசத்தை சதசியர்களுக்கும் அளித்தார். சரஸ்வதி நதியில் சுபவிருத ஸ்நானம் செய்தார்.

பரசுராமரால் பூஜிக்கப்பட்ட ஜமதக்னி முனிவர், ஞான தேசம் பெற்று சப்தரிஷி மண்டலங்களில் ஏழாவது ரிஷியாக விளங்கினார். தற்சமயம் அவர் மகேந்திர பர்வதத்தில், சித்தர்கள் கந்தர்வர்கள் ஆகியோரால் பாராட்டும் புகழும் பெற்று அங்கு தவக்கோலத்தில் சிரஞ்சீவியாக இருக்கிறார் என்று ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது.

ராமஅவதாரத்திற்கு முன்பு சூர்ய குலத்தில் பிறந்தவன் மூலகன் என்ற அரசன். பூலோகத்தில் அப்போது ராஜவம்சம் இல்லாமல் அழித்துவிட பரசுராமர் புறப்பட்டார். பெண்கள் பலர் மூலகனைச் சூழ்ந்து நின்று கொண்டு பரசுராமர் கண்ணில் படாதவாறு காப்பாற்றினார்கள். அதனால் அவனை நாரிவசன் என்றும் அழைப்பர். க்ஷத்திரிய வம்சம் பூண்டோடு போன பின்பு அந்த வம்சத்தை தழைக்கச் செய்தவன் மூலகனே.

ALSO READ:  மழை வேண்டி உசிலம்பட்டி அருகே பெருமாள் கோயிலில் மாபெரும் அன்னதானம்!

மூலகனுக்குப் பின்னர் தசரதன், அளபடி, கட்டுவாள்கள், தீர்க்கபாடு, ரகு, அவன் மகன் அஜன். இந்த அஜனின் மகன் தான் ராமரின் தந்தையான தசரதன். இப்படித் தான் க்ஷத்திரய வம்சம் மீண்டும் தழைக்க ஆரம்பித்தது.

ராமர் சீதையைத் திருமணம் செய்து கொண்டு மிதிலையில் இருந்து அயோத்திக்குப் போகும் வழியில் பரசுராமர் அவரை சண்டைக்கு இழுக்கிறார். தம்முடைய தவவலிமை முழுவதையும் ராமபாணத்திற்கு இரையாக்கிவிட்டு, தாம் பிராமணர் என்ற நிலையில், நீ எண்ணிய பொருள் எல்லாம் இனிது முற்றுக என்று ராமருக்கு ஆசிர்வாதம் செய்கிறார் பரசுராமர்.

இலங்கையின் அசோகவனத்தில் சீதை சிறை இருந்த சமயம் இதை நினைவுபடுத்தி ராவணனுக்கு புத்திமதி கூறுகிறாள். தூர்த்தனே! கார்த்தவீரியார்ச்சுனனுக்கு ஆயிரம் கைகள் இருந்தன. அவன் உனது இருபது தோள்களையும் பிடித்து உலுக்கி சண்டையிட்டு வென்றான். அப்பேற்பட்ட கார்த்தவீரியனைப் பரசுராமர் கொன்றார். அதே பரசுராமர் என் பர்த்தவிடம் தோற்றுப் போனார். ஆகையினாலே மகாவீரராகிய எனது கணவருடைய வீரம், புகழ், பெருமை இவைகளை நீ அறியாமல் என்னிடம் வம்பு செய்யாதே. மீறி நீ செய்தால் அழிந்து விடுவாய்! ஜாக்கிரதை என்கிறாள் சீதாப்பிராட்டி.

பரசுராமர் பீஷ்மருக்கும், கர்ணனுக்கும் வில்வித்தை கற்றுக் கொடுத்தார். அதில் கர்ணன் தன்னை ஒரு பிராமணன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவரிடம் வில்வித்தை கற்றான். காரணம் க்ஷத்திரியர்களைக் கண்டாலே அவருக்குப் பிடிக்காதே. ஒருநாள் கர்ணனுடைய தொடையில் தலை வைத்து பரசுராமர் தூங்கிக் கொண்டு இருந்தார். அதுசமயம் இந்திரன் ஒரு வண்டு உருவம் எடுத்தான். கர்ணனுடைய துடையைத் துளைத்துக் கொண்டே சென்றான். கர்ணனுக்கு ஒரே கடுப்பு, வேதனை. அவன் துடையில் ரத்தம் கசிந்து பெருகிக்கொண்டு இருந்தது. கசிந்த ரத்தத்தின் ஈரம் பரசுராமர் கழுத்தில் படவே தூங்கிக் கொண்டு இருந்த அவர் எழுந்தார். வண்டுக்கடியை வலிதாங்க முடியாத சூழ்நிலையிலும் பொறுத்துக் கொண்டே இருந்த நீ நிச்சயமாக ஒரு பிராமணனாக இருக்கமுடியாது. நீ உண்மையில் ஒரு க்ஷத்திரியன் தானே! உண்மையைக் கூறிவிடு என்று அதட்டிக் கேட்டார் பரசுராமர். கர்ணன் தான் ஒரு க்ஷத்திரியன் என்பதை ஒத்துக் கொண்டான். பொய் சொல்லி அவரை ஏமாற்றியதை அவரால் ஜீரணிக்க முடியாமல் அதற்காக ஒரு சாபத்தை அவர் கொடுத்தார். கர்ணா! நீ என்னிடம் பொய் சொல்லி வில் வித்தையைக் கற்றுக் கொண்டாய். அதனால் நான் கற்றுக் கொடுத்த வில்வித்தை உனக்குத் தக்க தருணத்தில் உதவாமல் போகக் கடவது! என்று சபித்தார். அந்த சாபத்தை குருக்ஷேத்திரக்களத்தில் நினைத்து நினைத்து கர்ணன் வருந்தினான். அந்த சாபத்தால் கற்ற வித்தை கர்ணனுக்கு கை கொடுக்கவில்லை என்பதை சொல்லுக்கு வில்லி, உதவாமல் மழுவாளி உரை செய்த சாபத்தை உற உன்னினான் என்று இயம்புகிறார்.

பரசுராமர் தன் தாய் ரேணுகாதேவியைக் கொன்ற தோஷம் நீங்க பலதலங்கள் சென்று வழிபாடு செய்தார். ஒருமுறை அவர் சிவனின் கட்டளைப்படி இத்தலம் வந்து இங்குள்ள கரமனை ஆற்றில் நீராடினார். அப்போது அவருக்குக் கிடைத்த லிங்கத்தை அங்கேயே பிரதிஷ்டை செய்து தவமிருந்து தோஷம் நீங்கப் பெற்றார். பின் தன் தாய்க்கு தர்ப்பணம் கொடுத்தார்.

பரசுராமருக்கு பிறகு, மதங்க மகரிஷி, கவுதம முனிவர் ஆகியோர் பரசுராமர் பிரதிஷ்டை செய்த லிங்கத்தைப் பூஜை செய்துள்ளனர். வல்லம் என்றால் ‘ தலை‘ என்று பொருள்.

முற்காலத்தில் திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமியின் தலைப்பகுதி இத்தலம்வரை நீண்டு கொண்டிருந்ததால் இத்தலம் “திருவல்லம்“ எனப்பட்டது.

திருவனந்தபுரம் பத்மநாபரைப் பிரதிஷ்டை செய்த வில்வமங்களம் சாமியாரின் வழிபாட்டால் பெருமாளின் உருவம் திருவனந்தபுரம் கோயில் மூலஸ்தானம் அளவிற்கு சுருங்கி விட்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன.

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் பெருமானின் உடல் பகுதியாகவும், திருவல்லம். பரசுராமர் கோயில் தலைப்பகுதியாகவும், திருவனந்தபுரம் அருகே உள்ள திருப்பாதபுரம் கோயில் பெருமானின் கால்பகுதியாகவும் விளங்குவதால் ஒரேநாளில் இம்மூன்று தளங்களையும் தரிசிப்பது மிகவும் நல்லது.

பரசுராமர் தன் தாய்க்கு பிதுர்தர்ப்பணம் கொடுத்த தலமாதலால் இத்தலம் “தட்சிணகயை “ என அழைக்கப்படுகிறது.
ஆதிசங்கரர் தன் தாய் ஆரியாம்பளுக்கு இத்தலத்தில் தர்ப்பணம் கொடுத்துள்ளார்.

author avatar
Suprasanna Mahadevan