
சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக செந்தில்குமார் பொறுப்பேற்பு!
சிவகங்கை மாவட்ட புதிய காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர்.செந்தில்குமார் இலக்கியவாதி, பேச்சாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். சென்னை, மதுரை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய இவர் இன்று சிவகங்கை மாவட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பாளராக பெறுப்பேற்றார். முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர் இலக்கியவாதியாகவும், சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்து வருபவர்.
இவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டத்தில் போத்திர மங்கலம் கிராமத்தில் 1977 ஆம் ஆண்டு பிறந்தவர். இவரது தந்தை தங்கவேல், தாயார் பழனியம்மாள். பள்ளிப்படிப்பை பிறந்த ஊரிலும், உயர் கல்வியை திருச்சியிலும், சட்டப்படிப்பை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியிலும் படித்தார். 2001 ஆம் ஆண்டு குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்று உள்ளாட்சி தணிக்கை துறையில் ஆடிட்டராக பணிபுரிந்தவர். எம்எல் சட்டப்படிப்பை அண்ணா பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்த இவர், சென்னை நகரம் உருவான கதையை கொண்டு கருப்பர் நகரம் என்ற தலைப்பில் சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
குரூப்-1 தேர்வில் 2003இல் வெற்றி பெற்று நேரடியாக காவல்துறை கண்காணிப்பாளராக உத்தமபாளையத்தில் பணிபுரிய துவங்கினார். பின்னர் செங்கல்பட்டு, நன்னிலம், அரக்கோணம் போன்ற நகரங்களில் துணை கண்காணிப்பாளர் ஆகவும் பணிபுரிந்தார். பின்னர் சென்னை அடையாறு சரக உதவி ஆணையர் ஆகவும், கூடுதல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று திருவள்ளூர் மாவட்டத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். சென்னை மாநகர பூக்கடை காவல்துறை துணை ஆணையராகவும், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகவும், மதுரைக் காவல்துறையினர் ஆகவும் பணியாற்றியவர் த.செந்தில்குமார்.
புத்தூர் ஆபரேஷன் தேடுதல் வேட்டையில் அவரது பணிக்காக தமிழக முதலமைச்சரிடம் இருந்து ரூ. 5 லட்சம் பரிசுத் தொகையும், பதவி உயர்வு பெற்றார்.
இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட த.செந்தில்குமார் முன்னணி பத்திரிகைகளில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார். அண்மையில் “பெரிதினும் பெரிது கேள்” என்ற தலைப்பில் நூலினை வெளியிட்டு உள்ளார்.
மாணவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு தலைப்புகளில் தொடர்ந்து பேசியும் வருகிறார். இப்படி பல பன்முகத்தன்மை கொண்ட த. செந்தில்குமார் சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது மிகவும் வரவேற்புக்குரியதாகும்.



