January 26, 2025, 4:57 AM
22.9 C
Chennai

மோரைக் கொடுத்து மோட்சம் கேட்ட மூதாட்டி!

perumal
perumal

திருப்பதி அடிவாரத்தில், சீடர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு, தகுந்த விளக்கங்களை அளித்துக் கொண்டிருந்தார் ஸ்ரீராமானுஜர். அப்போது ‘மோரு… மோரு…’ என்று ஒரு பெண்மணியின் குரல் கேட்டது.

தலையில் மோர்ப்பானை சுமந்து, இடையர் குலப் பெண்மணி ஒருத்தி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தாள். சீடர்களுக்கு மோர் சாப்பிட வேண்டும் என்று தோன்றியது.

ஆனால், குருநாதர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிற இந்த வேளையில் மோர்க்காரியைக் கூப்பிட்டால், பாடத்தின் மேல் கவனம் இல்லாதது போல் ஆகிவிடும் என்பதால், மோர் ஆசையைத் துறந்து, பாடத்தில் கருத்தாக இருந்தார்கள்.

ஆனாலும், அன்றைக்கு மோர் குடித்தே ஆக வேண்டும் என்பது எழுதப்பட்டிருந்த ஒன்று போலும். இவர்கள் அனைவரும் கூட்டமாக அமர்ந்து ஏதோ சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருப்பதாக நினைத்த மோர்க்காரப் பெண்மணி, இந்த இடத்தில் பானையை இறக்கி வைத்தால் நல்ல வியாபாரம் ஆகிவிடும் என்று தீர்மானித்து, இவர்கள் பக்கம் நடந்து வந்தாள்.

ஐயா… சாமீ… நல்ல மோரு. ஆளுக்கு ஒரு குவளை குடிச்சீங்கன்னா, தெம்பா இருக்கும். உஷ்ணம் ஓடியே போயிடும் என்று சொன்னபடி, மோர் பானையைக் கீழே இறக்கி வைத்தாள்.

ஏற்கெனவே பசியிலும் அசதியிலும் இருந்த சீடர்களுக்கு, மோர் பானையைப் பார்த்ததும் வயிறு கபகபவென்று இருந்தது. ஆளாளுக்கு, எனக்கு… எனக்கு என்று கேட்டு வாங்கிக் குடித்தனர். அவர்களில் ஒரு சில சீடர்கள் இன்னொரு குவளையும் வாங்கிச் சாப்பிட்டனர்.

மோரின் தரம் அப்படி. எல்லோருக்கும் மோர் கொடுத்து முடித்ததும், பானையின் உள்ளே சற்று எட்டிப் பார்த்தாள் பெண்மணி. கிட்டத்தட்ட பானை காலியாக இருந்தது. நிறைந்த மனத்துடன் சீடர்களையும் ராமானுஜரையும் பார்த்தாள்.

அப்போது அவள் மனத்தில் திடீரென ஓர் ஏக்கம் வந்தது. அதாவது, தானும் இவர்களைப் போல் பக்தித் திறனில் தேர்ந்து விளங்க வேண்டும் என்று ஆசை கொண்டாள். திடீரென்று அப்படி ஒரு பக்தி எழுந்தது ஏன்? மகான்களின் பார்வை விசேஷம் அப்படிப்பட்டது. அதனால், பக்தியின் பிடியில் திடீரென அகப்பட்டுக் கொண்ட காரணத்தால், மோருக்கான காசை கேட்டுப்பெற வேண்டும் என்பதையும் மறந்து நின்றாள்.

ALSO READ:  பொதுவெளியில் இறைச்சிக் கழிவுகளைக் கொட்டிய கடை உரிமையாளர்களுக்கு அபராதம்!

அப்போது அந்தப் பெண்மணியைப் பார்த்து, “அம்மா… நீ எங்களுக்குக் கொடுத்த மோரின் விலை என்ன?” என்று கேட்டார் ராமானுஜர். மோர் நன்றாக வியாபாரம் ஆகும். காசு கிடைக்கும் என்ற ஆசையில்தான் இங்கே வந்தாள். ஆனால், இப்போது இவளது மனநிலையே வேறாக இருக்கிறது. ராமானுஜரை மரியாதையுடன் பார்த்தாள்.

பிறகு, வேணாம் சாமீ. மோருக்குக் காசெல்லாம் வேணாம்… அதை வெச்சிட்டு நான் என்ன பண்ணப் போறேன்?! என்று இழுத்தாள். அப்படீன்னா காசுக்குப் பதிலா ஏதாவது பொருள் வேணுமா? என்று கேட்டார் சீடர் ஒருவர்.

ராமானுஜரை நமஸ்கரித்த அந்தப் பெண், “எனக்குக் காசும் வேணாம்… பொருளும் வேணாம் சாமீ. பெருமாள் இருக்கக்கூடிய பரமபதத்தை அடையணும்; மோட்சம் கிடைக்கணும். அதுக்கு வழியைக் காட்டுங்க. சந்தோஷமா போயிடுவேன்” என்றாள்.

ராமானுஜர் ஆச்சரியத்துடன் பார்த்தார். ஆசார நியமங்களோ, சாஸ்திர ஞானமோ அறியாத அவளுக்குள், ‘மோக்ஷம் வேண்டும்’ என்கிற ஆசை தோன்றியது விந்தைதானே! தவிர, இப்படி ஒரு கோரிக்கையை அவள் வைப்பாள் என்றும் அவர் எதிர்பார்க்கவில்லை.

ஒரு சில நிமிட இடைவெளிக்குப் பிறகு, “கவலைப்படாதம்மா… உன்னோட நல்ல குணத்துக்கு நிச்சயம் மோட்சம்தான் கிடைக்கும். சந்தோஷமா போயிட்டு வா” என்றார் அவர்.
ஆனால், அந்தப் பெண்மணி விடவில்லை.

“ஒங்க வாக்கு அப்படியே பலிக்கட்டும் சாமீ. ஆனா, அந்த மோட்சம் எனக்குக் கிடைக்கறதுக்கு ஒரு வழியைக் காட்டுங்க. நான் போய்ச் சேர்றேன்” என்றாள்.

ராமானுஜர் சிரித்தார். “அம்மா… நீ நினைப்பதுபோல் மோட்சத்துக்கு ஒரு வழியைக் காட்டுவதோ, மோட்சம் வழங்குவதற்கு உண்டான தகுதியோ, எனக்கோ இங்கு கூடி இருக்கின்ற சிஷ்யர்களுக்கோ இல்லை. மேலே திருமலையில் இருக்கின்றானே ஒருவன்… ஏழுமலைக்குச் சொந்தக்காரன்… அவன்கிட்டப் போய்க் கேள். உனக்கு வேண்டியதை எல்லாம் அருளுகின்ற தகுதி அவனுக்குத் தான் உண்டு” என்றார்.

ALSO READ:  முருக பக்தர்களை திமுக அமைச்சர் சேகர் பாபு அவமதித்த விவகாரம்; இந்து முன்னணி கண்டனம்!

இதற்குப் பிறகும் அந்த மோர்க்காரப் பெண்மணி நகர்கிற வழியாக இல்லை. “சாமீ… மேலே இருக்கிற ஏழுமலையான் கிட்ட போய் எத்தனையோ தடவை ‘மோட்சம் வேணும் மோட்சம் வேணும்’னு கேட்டுப் பாத்துட்டேன். ஆனா, அங்கே இருக்கிற பெருமாள் வாயைத் தொறந்து பேசக்கூட மாட்டேங்கிறாரே…” என்றாள் பொருமலாக.

அப்படி இல்லேம்மா… அவருக்கு எத்தனை வேலை இருக்கோ… அதை ஒரு குறையா சொல்லிட்டு இருக்காதே. உன் மனசுல படறதை – நீ கேக்கணும்னு நினைக்கறதை அவர்கிட்ட கேட்டுக்கிட்டே இரு.

என்னிக்கானும் ஒருநாள் நிச்சயம் செவி சாய்ப்பார்” என்றார் ராமானுஜர். “இல்லீங்க சாமீ. ஒங்களைத்தான் நம்புறேன். ஒங்களைப் பாத்த பிறகு எனக்கு நம்பிக்கை வந்திடுச்சு” என்றாள், குரலில் உற்சாகத்துடன்.

இவள் ஏதோ ஒரு தீர்மானத்துடன்தான் இருக்கிறாள் போலிருக்கிறதே’ என்று யோசித்தார் ராமானுஜர்.
மீண்டும் அந்தப் பெண்மணியே, விநயமாகப் பேசினாள்.

“சாமீ… எனக்கு மோட்சம் தரச் சொல்லி பெருமாள்கிட்ட சிபாரிசு செஞ்சு நீங்கதான் ஒரு ஓலை எழுதித் தரணும். ஒங்களை மாதிரி பெரியவங்க ஓலை கொடுத்தா, இருக்கிற வேலையை எல்லாம் விட்டுட்டு பெருமாள் எனக்குப் பதில் சொல்லுவாருன்னு தோணுது” என்றாள் தெளிவாக.

இதற்கு மேலும் மறுக்க இயலாது என்று உணர்ந்த ராமானுஜர், சிஷ்யனிடம் ஓர் ஓலை நறுக்கும், எழுத்தாணியும் கொண்டு வரச் சொன்னார். அதைக் கேட்டதும், சீடர்களுக்கு வியப்பு தாங்க முடியவில்லை. என்றாலும், அவர் கேட்டதை எடுத்துக் கொண்டு வந்து தந்தனர்.

நிஜமாகவே திருமலை பெருமாளுக்கு சிபாரிசு செய்து, குருநாதர் ஓலை எழுதப் போகிறாரா… இல்லை அந்தப் பெண்மணியை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி ஏதேனும் செய்கிறாரா?’ என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாகி, ராமானுஜரைச் சுற்றி அமர்ந்து, கவனிக்கலானார்கள்.

ALSO READ:  சோழவந்தான் பகுதி சிவாலயங்களில் பிரதோஷ விழா!

மேலே அண்ணாந்து திருமலையைப் பார்த்து இருகரம் கூப்பிவிட்டு, ஓலை நறுக்கில் பெறுநர் முகவரியை எழுதும் இடத்தில் ‘ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள், திருமலை’ என்று குறிப்பிட்டுவிட்டு, பெண்மணியின் கோரிக்கையை எழுதத் தொடங்கினார் ராமானுஜர். எழுதி முடித்த பின் ஓலையின் கீழே தன் கையெழுத்தையும் போட்டார்.

பின்னே… ஒரு கடிதம் என்றால், அது எங்கிருந்து வருகிறது என்பதும் முக்கியம் ஆயிற்றே! அதை வைத்துதானே சிபாரிசு மதிப்பிடப்படும்?! அதை அந்தப் பெண்மணியிடம் கொடுத்தார்.

அப்போது ஓலை நறுக்கில் எழுதப்பட்டிருந்த வாசகங்களை சீடர்களும் படித்துப் பார்த்தனர். பரந்தாமா…..‘மோர்க்காரிக்கு மோட்சம் கிடைக்க அனுக்ரகம் செய்’ என்பதாக சிபாரிசு செய்து எழுதப்பட்டிருந்தது.

ஓலையை வாங்கிய அடுத்த விநாடி அந்தப் பெண்மணி ஆனந்தமாக திருமலையை நோக்கிப் புறப்பட்டாள். மலை ஏறி, பெருமாள் சன்னிதிக்குச் சென்று அங்குள்ள அர்ச்சகர்களிடம் கொடுத்தாள். மோர்க்காரப் பெண்மணியை மேலும் கீழும் பார்த்து, இது என்ன ஓலை? என்று குழப்பத்துடன் கேட்டனர் அர்ச்சகர்கள். அவர்களிடம் முழு விவரத்தையும் சொன்னாள் அவள்.

ராமானுஜர் எழுதிக் கொடுத்த ஓலை என்று அறிந்ததும், மறுப்பு ஏதும் சொல்லாமல் அதைக்கொண்டு போய் பெருமாளின் முன்னால் நீட்டினர் அர்ச்சகர்கள். எப்பேர்ப்பட்ட ஆச்சார்யர், ராமானுஜர் ! அவருக்கு உண்டான முக்கியத்துவத்தை பரந்தாமன் கொடுக்காமலா இருப்பார்?

தம் வலக் கையை நீட்டி அதை வாங்கிக் கொண்டார் பெருமாள். விஷயம் அறிந்தார். பிறகு, உனக்கு மோட்சம் தந்தேன் என்று மோர்க்காரியைப் பார்த்துப் பெருமாள் திருவாய் மலர்ந்தார்.

தன் பக்தன் ராமானுஜர் ஒரு சிபாரிசுக் கடிதம் கொடுத்தால், பெருமாளிடம் எப்பேர்ப்பட்ட கவனிப்பு, பார்த்தீர்களா? உடையவர், உடையவர் என்று கொண்டாடுவதன் சூட்சுமத்தை உணர்த்துகிற சம்பவமல்லவா இது!

குரு பக்தி எல்லாம் சாதிக்கும் என்பதை நாமும் உணர்வோம் பரந்தாமன் பதம் அடைவோம்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Padma Awards 2025

Padma Awards - one of the highest civilian Awards of the country, are conferred in three categories, namely, Padma Vibhushan, Padma Bhushan and Padma Shri.

தமிழகத்தைப் பற்றிய கவலைகள்; ஒட்டுமொத்தமாக வெளியிட்ட ஆளுநர் ரவி!

தமிழகத்தைப் பற்றிய பல்வேறு கவலைகளை வெளியிட்டார். குறிப்பாக, தமிழகத்தின் எதிர்காலம் சார்ந்து அவர் வெளியிட்ட கவலைகள் பெரும் கவனத்துக்கு உரியவை.

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.