
நாளுக்கு நாள் அதிகரிக்கும் போதை பொருள் பழக்கத்தால் நாடே சீரழிந்து வருகிறது. கொலை, கொள்ளை என நீளும் சமூக விரோத செயல்களுக்கு அடித்தளம் அமைப்பதே இந்த போதை பொருள் நடமாட்டம் தான்
சில நிமிட சந்தோஷத்திற்காக எங்கும் இளைஞர்கள் அரக்கர்களாக மாறிவிடுகின்றனர். கஞ்சா, போதை ஊசி உள்ளிட்டவற்றை வாங்க பணம் கிடைக்காமல் மிருகமாக மாறும் இளைஞர்கள் பழி பாவத்திற்கு அஞ்சுவதே இல்லை..

செயின் அறுப்பு, நகைக்காக கொலை, சிறுமிகள் பாலியல் பலாத்காரம் என பல சமூக இன்னல்களுக்கு அடித்தளம் அமைகிறது இந்த போதை பழக்கம்..
இந்த அவலங்களிலிருந்து இளைய சமூகத்தை மீட்கும் விதமாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு குறும்பட போட்டியை மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவு குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு இடையே ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த போட்டியில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் ‘மவுனம் கலைவோம்’ என்ற தலைப்பில் தயாரித்த குறும்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இந்த படத்தில் போதைபொருட்களால் ஏற்படும் தீமைகளை விளக்கும் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ளார்.

4 நிமிடங்கள் 47 வினாடிகள் ஓடும் இந்த குறும்படத்தில், ‘போதை ஊசி விற்பனை கும்பலை பார்த்தும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் செல்லும் நபர், தன்னுடைய மகனே போதை ஊசிக்கு அடிமையாகி இருப்பதை கண்டு மனம் கதறுவது, கஞ்சா வாங்குவதற்காக கஞ்சா போதையில் 2 இளைஞர்கள் பெண்ணிடம் செயின் வழிப்பறியில் ஈடுபடும்போது, அந்த பெண் தலையில் அடிபட்டு உயிரிழப்பது, அபின் போதை பொருளை பயன்படுத்தும் 2 இளைஞர்கள் மாணவிகளை கடத்தி செல்வது போன்று தத்ரூபமாக காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
போதைப்பொருள் குறித்து புகாரளிக்க 10581 என்ற எண் மற்றும் 9498410581 என்ற வாட்ஸ் அப் எண்ணையும் பகிர்ந்துள்ளார்.